2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இந்திய உயர் ஸ்தானிகர் – த.தே.கூ கலந்துரையாடல்

Editorial   / 2018 செப்டெம்பர் 15 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ், எம்.எமத்.அஹமட் அனாம், வடிவேல் சக்திவேல், ஆர். ஜெயஶ்ரீராம்

கிழக்கு மாகாணத்துக்கு இரு நாள்கள் விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து, மட்டக்களப்புக்கு நேற்று (14) வருகை தந்தார்.

கிழக்கு மாகாணத்தின்  தற்போதைய நிலவரம், இந்திய உதவியுடனான அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக ஆராய்வதற்காகவே, இந்த விஜயத்தை அவர் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், இந்திய உயர் ஸ்தானிகர், பாசிக்குடாவிலுள்ள உல்லாச விடுதியில்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் பிரதிநிதிகளை கூட்டாக சந்தித்துக் கலந்துரையாடினார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கே.துரைராஜசிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர்களான  ஞா.சிறிநேசன், எஸ்.வியாழேந்திரன், எஸ்.கோடீஸ்வரன், மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களான பிரசன்னா இந்திரகுமார், கோ.கருணாகரம் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.  

இதன்போது, புதிய அரசமைப்பு விரைவில் அமைக்கப்பட வேண்டுமென்றும், பல்லினங்கள் வாழும் நாட்டுக்குப் பொருத்தமான ஆட்சி முறைமை சமஷ்டி முறையே எனச் சுட்டிக்காட்டப்பட்டன.

கிழக்கு மாகாணத்தில் இனங்களுக்கிடையிலான நிலைப்பாடுகள் தொடர்பிலும், மாகாண ஆட்சி முறைமையில் குறிப்பாக வடக்கு, கிழக்கு என்பன இணைக்கப்பட்ட வேண்டிய அவசியம் பற்றி வலியுறுத்தப்பட்டது.

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைக் கட்டியெழுப்பும் முகமாக தொழிற்பேட்டைகள் அமைத்தல், குடிநீர் பிரச்சினைகள், கழிப்பறை வசதியற்ற குடும்பங்களுக்கான கழிவறை வசதிகள் அமைத்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

மேலும், இந்தியாவுடனான எமது மக்களின் நெருக்கம் அதிகரித்துள்ளமையால் மட்டக்களப்பில் உயர்ஸ்தானிகர் அலுவலகக் கிளையொன்றை அமைத்தல், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் நீர்ப்பாசன செயன்முறைகளை மேம்படுத்துதல் போன்ற விடயங்கள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X