2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

இலங்கையின் தமிழ், முஸ்லிம்கள் ’இனவாதிகள் அல்லர்’

Editorial   / 2019 நவம்பர் 19 , பி.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன்

இந்நாட்டிலுள்ள தமிழர்களும் முஸ்லிம்களும் இனவாதிகள் அல்லர். அவ்வாறு அவர்கள் இனவாதிகளாக இருந்திருந்தால், சிவாஜிலிங்கத்துக்கும் ஹிஸ்புல்லாஹ்வுக்குமே வாக்களித்திருப்பார்கள் என்று தெரிவித்துள்ள அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன், ஒரு சிங்கள பௌத்த ஜனாதிபதி வேட்பாளருக்கே அம்மக்கள் வாக்களித்தார்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுவதால், அது புதிய ஜனாதிபதியின் நற்பெயருக்கே களங்கத்தை ஏற்படுத்துவதாகவும் எனவே, புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, சிறுபான்மை மக்களாகிய தமிழ், முஸ்லிம் மக்களின் மனங்களை வென்றெடுப்பதற்கு முயற்சிக்க வேண்டும் என்றும், அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

யட்டியந்தொட்டை கணேபொல மேற்பிரிவில், நேற்று  ஏற்பட்ட முறுகல் நிலைக்கு, தனது கண்டனத்தை வெளியிட்டுள்ள மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவரும் விசேட பிரதேசங்களுகக்கான அபிவிருத்தி அமைச்சருமான இராதாகிருஷ்ணன், அது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அதில் அவர், தமிழர்களோ முஸ்லிம்களோ, இனவாதிகள் அல்லர் என்றும் அவர்கள் வாக்களித்ததும் ஒரு சிங்கள பௌத்த ஜனாதிபதி வேட்பாளருக்கே என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அவர்கள் இனவாதிகளாக இருந்திருந்தால், சிவாஜிலிங்கத்துக்கும் ஹிஸ்புல்லாஹ்வுக்குமே வாக்களித்திருப்பார்கள் என்றும், இராதாகிருஷ்ணன் சுட்டிக்காட்டியுள்ளார்.

“தேர்தல் தினத்தன்றும் தேர்தல் முடிவடைந்த பின்பும், தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் காரணமாக, புதிய ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு குந்தகம் ஏற்படலாம். எனவே, இச்சம்பவங்களுக்கு எதிராக அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதேவேளை, தமிழ், முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ள அவர், அடுத்து நடைபெறவுள்ள நாடாளுமன்ற, மாகாண சபைத் தேர்தல்களில், தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்கின்ற வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் இந்தச் சம்பவத்தில் நேரடியாக அரசியல் தலைவர்கள் சம்பந்தப்பட்டிருக்க மாட்டார்கள் எனத் தான் நினைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனாலும், தங்களுடைய ஆதரவாளர்களை இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்பதை, அவர்கள் அறிவுறுத்த வேண்டும். எனவே, தமிழ், முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .