2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இளைஞனின் புதைகுழிக்கு பொலிஸ் பாதுகாப்பு

Gavitha   / 2016 மார்ச் 03 , மு.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்பிலிப்பிட்டிய நகரில் இரவுநேர விருந்துபசார நிகழ்வொன்றின் போது, இடம்பெற்ற சம்பவத்தில் உயிரிழந்த சுமித் பிரசன்ன மதுரங்க என்ற இளைஞனின் சடலத்தை மீண்டும் தோண்டி எடுத்து, மீண்டும் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதா என்பது தொடர்பில் இன்று வியாழக்கிழமை 3ஆம் திகதியன்று அறிவிக்கப்படும் என்று எம்பிலிப்பிட்டிய நீதவான் நீதிமன்றம் அறிவித்தது.

இந்த வழக்கு, எம்பிலிப்பிட்டிய நீதிமன்ற நீதவான் பிரசன்ன பெர்ணான்டோ, முன்னிலையில் நேற்று புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே அவர் மேற்கண்டவாறு அறிவித்தார்.

சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச சிரேஷ்ட சட்டத்தரணி சுதர்ஷன ஹேரத், மரணமடைந்த அவ்விளைஞனின் சடலத்தை தோண்டியெடுத்து விசேட சட்டவைத்தியர் குழு முன்னிலையில் பிரேத பரிசோதனையை நடத்துமாறு கோரிநின்றார்.

'இரத்தினபுரி வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை மற்றும் சாட்சிகளை முதலில் அவதானிக்கின்ற போது, இரண்டுக்கும் இடையில் முரண்பாடுகள் இருக்கின்றன' என்று சுட்டிக்காட்டினார். இதேவேளை, அச்சடலம் புதைக்கப்பட்டுள்ள இடத்துக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிட்ட நீதவான், 'சடலத்தை தோண்டி  எடுப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் நாளை (இன்று) அறிவிக்கப்படும்' என்றார்.

எம்பிலிப்பிட்டிய நகரில் இடம்பெற்ற இரவுநேர விருந்துபசார நிகழ்வில் பங்கேற்றிருந்த மேற்படி இளைஞன், பொலிஸாரினால் மாடியிலிருந்து கீழே தள்ளிவீழ்த்தப்பட்டு படுகொலைச் செய்யப்பட்டார் என்றக் குற்றச்சாட்டின் பேரிலேயே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள எம்பிலிப்பிட்டிய உதவி பொலிஸ் அதிகாரி ஷமில்  தர்மரத்னவும் நீதிமன்றத்துக்கு நேற்றையதினம் அழைத்துவரப்பட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .