2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘உரிமை கொண்டாடுவதற்கு யானைக்கு அருகதையில்லை’

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 22 , மு.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.நிரோஷினி

“ஐக்கிய தேசியக் கட்சிக்கு, இந்த அரசாங்கம் சொந்தமில்லை. இது எமக்குச் சொந்தமான அரசாங்கம் என்று அவர்களால் உரிமை கொண்டாடவும் முடியாது. அவர்களால் ஒருபோதும் இந்த நாட்டில் ஆட்சியை அமைக்க முடியாது”என,மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்தார். 

மேல் மாகாண முதலமைச்சர் காரியாலயத்தில் நேற்று (21) இடம்​பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், 

“ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் சிலர், ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் சிலரை இந்த ஆட்சியிலிருந்து வௌியேறுமாறு அச்சுறுத்தி வருகின்றனர்.  

“நல்லாட்சி அரசாங்கத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் 106 உறுப்பினர்களும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் 82 உறுப்பினர்களும் உள்ளனர். எனினும், இரு தரப்பும் ச ரிசமமான அமைச்சர்களின் எண்ணிக்கையைக் கொண்டிருக்கையில், இது எங்களுடைய அரசாங்கம் என்று ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கூற முடியாது. அவர்களால் ஒருபோதும் இந்த நாட்டில் ஆட்சியை அமைக்கவும் முடியாது” என்றார். 

மேலும், “தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றோம் என்ற நிலைப்பாட்டில், ஐக்கிய தேசியக் கட்சி இழைக்கும் தவறுகளுக்கு நாம் துணைநிற்கமாட்டோம். நாம் அவர்களை கைக்குள் போட்டுக்கொண்டு செயற்பட வேண்டிய தேவையில்லை. நாம் தேசிய அரசாங்கம் என்பது உண்மையே. ஆனால், தவறான விடயங்களுக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி துணைநிற்காது. 

“ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்குப் பங்களித்தவர்களில் ஐக்கிய தேசியக் கட்சியினரும் ஒரு தரப்பினராவர். இதை யாரும் மறுப்பதற்கில்லை. முன்னாள் ஜனாதிபதியை வீழ்த்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் பலமிகுந்தவர் எவரும் இருக்கவில்லை. அவ்வாறு ஒருவர் இருந்திருந்தால், மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராக அங்கிகரித்து ஆதரவளிக்க வேண்டி இருந்திருக்காது. அன்றைய சூழ்நிலையை மாற்றியமைக்கவும் அவர்களது நோக்கத்தை நிறைவேற்றவும் வெற்றியடையவுமே, எம்மைப் பயன்படுத்திக் கொண்டார்கள். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெற்றியடைந்தவுடன், அவர்களது வேலைத்திட்டங்களுக்கும் தனிப்பட்ட நிகழ்வுகளுக்கும் அழைப்பதும் இணைத்துக்கொள்வதும் தவறாகும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை. அவர், சுதந்திரக் கட்சிக்குச் சார்பானவர். அவரை ஐக்கிய தேசியக் கட்சியின் வேலைத்திட்டங்களுக்கு, அதுவும் பச்சை நிற ஆடை தோற்றத்துடன் பங்குகொள்ளுமாறு கோருவது, சம்பந்தமே இல்லாமல் ஜனாதிபதியின் புகைப்படத்தைப் பயன்படுத்துவது என்பன, மிகவும் தவறான செயற்பாடுகளாகும்” எனவும் குறிப்பிட்டார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .