2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘ஏதாவது பதவியொன்றை அவர் எதிர்பார்க்கின்றார்’

Editorial   / 2018 செப்டெம்பர் 01 , பி.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் 13வது திருத்தச் சட்டத்தைக் கோருகின்றார் என்றால் விரைவில் ஏதாவது பதவியொன்றை அவர் எதிர்பார்க்கின்றார் என்று அர்த்தம் என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்னவரன் தெரிவித்துள்ளார்.

மின்னஞ்சல் மூலமாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கான பதில்கள் என அவர் அனுப்பி வைத்துள்ள கேள்வி, பதில்களிலேயே குறித்த கருத்தை முன்வைத்துள்ளார். அவர் அனுப்பி வைத்த கேள்வி, பதில்கள் பின்வருமாறு,

 

1.            கேள்வி – முதலமைச்சரைப் பதவியில் இருந்து நீக்க புலிகள் பாணியில் செயற்பட வேண்டும் என்று கௌரவ அஸ்மின் அவர்கள் கூறியுள்ளாரே?

 

பதில் - அண்மையில்த்தான் வடமாகாணசபையில் தான் பேசிய பேச்சுக்களைத் தொகுத்து ஒரு நூல் வெளியிடவிருப்பதாகக் கூறி நான் அவரின் நூலுக்கு முகவுரை எழுத வேண்டும் என்றோ அல்லது வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்றோ அழைப்பு விடுத்திருந்தார் நண்பர் அஸ்மின் அவர்கள்.

ஆகவே தன்னுடைய கட்சியில் தனக்கு நேர்ந்தது எனக்கும் ஏற்பட வேண்டும் என்ற நட்பெண்ணத்தில் அவர் இதைக் கூறியிருக்கலாம் அல்லது தனது இன மக்களுக்கு புலிகள் கையால் கிடைத்த பரிகாரத்தை நானும் பெறவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் அவர் அவ்வாறு கூறியிருக்கலாம். புலிகளின் தலைமைத்துவம் புத்திசாலித்தனமான தலைமைத்துவம் என்று கூறிய முதல் முஸ்லீமாக அவர் இருக்கக்கூடும் அவரின் இந்தக் கூற்றால் முஸ்லீம்களுக்குத் தமிழ் மக்கள் செய்த தவறுக்காக தமது வருத்தத்தைத் தெரியப்படுத்த வேண்டும் என்ற அவரின் ஆப்த கொழும்பு நண்பர்களின் கோரிக்கைகள் விடுபட்டுப் போயுள்ளன என்றே கூற வேண்டும்.

2.            கேள்வி – சமஷ்டித் தீர்வு எமக்கு வேண்டாம் என்று காலியில் கௌரவ சுமந்திரன் கூறியுள்ளாரே? அது பற்றி?

பதில் - ஒரு வேளை 2015இல் அவர் தேர்தலில் நின்ற போது சமஷ்டி வேண்டாம் தூசி தட்டிய 13வது திருத்தச்சட்டம் மட்டும் போதும் என்று எமது மக்களிடம் கூறி வாக்குப் பெற்றாரோ தெரியவில்லை. அல்லது சிங்கள மக்களின் மனங்களைக் கொள்ளை கொள்ள வேண்டும் என்ற நினைப்பில் அவ்வாறு கூறினாரோ தெரியவில்லை. அல்லது காலியில் சிறப்பு அதிரடிப்படையினரின் பலமான பாதுகாப்பின் பின்னருந் தனக்கு அவுஸ்திரேலியாவில் கிடைத்தது போல் பாதிப்பான வரவேற்பு கிடைக்குமோ என்று பயந்து அவ்வாறு கூறினாரோ தெரியவில்லை.

நான் ஒன்பது மாகாணங்களுக்கும் சமஷ்டியே உகந்தது என்று சிங்கள மனங்களை மாற்றி வருகின்றேன். எனதினிய மாணாக்கர் தமிழ் மக்களுக்குத் தான் கொடுத்த வாக்குகளை மறந்து, வட கிழக்கில் கூட சமஷ்டி வேண்டாம் என்று கூறுகின்றார் என்றால் அதுவும் ஒற்றையாட்சியின் கீழ் சிங்கள மேலாதிக்கத்தை நிலை நிறுத்தியிருக்கும் 13வது திருத்தச்சட்டத்தைக் கோருகின்றார் என்றால் விரைவில் ஏதாவது பதவியொன்றை அவர் எதிர்பார்க்கின்றார் என்று அர்த்தம். அல்லது சிங்களவர்கள் மேலுள்ள பயமே காரணம் என்றும் நினைக்கலாம். அவரின் கருத்து அவரின் சுய கருத்தா அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கருத்தா என்பதை கூட்டமைப்பு தெளிபடுத்த வேண்டும். அவரின் கருத்து கூட்டமைப்பின் ஏகோபித்த கருத்தில்லை என்றால் ஒட்டுமொத்தம் அவர் போன்றவர்களை திரு சம்பந்தனும் மற்றைய கட்சித் தலைவர்களும் சேர்ந்து கௌரவ அஸ்மின் கூறிய பாணியில் விரட்டி அடிக்க வேண்டும்!

ஐம்பதுக்கு ஐம்பது கோரி, சமஷ்டி கோரி, தனி நாடு கோரிவந்த தமிழருக்கு 13ம் திருத்தச் சட்டத்தை மட்டும் தந்தால்ப் போதும் என்று அவர்கள் சார்பில் கூறுவதற்கு எந்தளவு நெஞ்சழுத்தம் வேண்டும் அவருக்கு!


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .