2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’ஒக்டோபருக்குள் ஒப்பந்தம் வேண்டும்’

Editorial   / 2018 செப்டெம்பர் 13 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.கமல்

ஒக்டோபர் மாத இறுதிக்குள், புதிய கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று, நான்கு தொழிற்சங்கங்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன. மக்கள் தொழிலாளர் சங்கம், ஆசிரியர் தொழிலாளர் சங்கம், பெருந்தோட்டத் தொழிலுரிமைச் சங்கம், தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய தொழிற்சங்கங்களே, இவ்வாறு வலியுறுத்தியுள்ளன.

கொழும்பு பிறைட்டன் ஹொட்டலில், நேற்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே, மக்கள் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி இ.தம்பையா, ஆசிரியர் தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் லோறன்ஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் செயலாளர் சண். பிரபா ஆகியோர், மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வை வென்றெடுப்பதற்காக, முதலாளிமார் சம்மேளனத்துக்கும், தொழிலாளர்கள் சார்பாக பேரம்பேசும் தொழிற்சங்கங்களுக்கும் அழுத்தம் கொடுக்கும் வகையில், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்த, பெருந்தோட்ட உழைப்புரிமை ஒன்றியம் தீர்மானித்துள்ளது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

அதன் ஆரம்பமாக, எதிர்வரும் 23ஆம் திகதி, மலையகமெங்கும் மேற்படி காரணங்களை வலியுறுத்தி, ​எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்திய மேற்படி தொழிற்சங்கங்கள், அத்துடன் குறித்த தினத்தில் தொழிலாளர் தேசிய சங்கம், தலவாக்கலையில் நடத்த விடுத்திருக்கும் ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவளிக்கவும் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தனர். அதில் கலந்துகொள்ளவுள்ளவர்கள், ஒருமித்த எதிர்ப்பை வௌியிட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, மலையகத்தின் ஏனைய பகுதிகளிலும் தோட்டங்களிலும், நியாயமான சம்பள உயர்வு வேண்டும் என்பதை வலியுறுத்தி, 23ஆம் திகதி ஆர்ப்பாட்டங்களை நடத்துமாறும் அறைகூவல் விடுக்கப்பட்டது.

“தொழிற்சங்கம், அரசியல் கட்சிகள் என்ற பேதங்களுக்கு அப்பால், எல்லோரும் கலந்துகொள்ள வேண்டுமென்று அழைப்பு விடுக்கிறோம். பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பூரணமான உழைப்புரிமையை வென்றெடுப்பதற்கும், பெருந்தோட்டத்துறையின் இருப்பைப் பேணி, அதனைச் செழுமைப்படுத்த நீண்டகால கொள்கை வேலைத்திட்டங்களை வகுக்கத் தீர்மானித்துள்ளோம்.

"அவற்றில், நியாயமான சம்பள உயர்வு, கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடல் என்பன காலதாமதமின்றி இடம்பெற வேண்டும். அதேவேளை ஏனைய அமைப்புகள் தனியாகவும் கூட்டாகவும் முன்னெடுக்கும் போராட்டங்களுக்கு பொது நன்மை கருதி ஒத்துழைப்பை வழங்கத் தீர்மானித்துள்ளோம்" என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், 23ஆம் திகதி இடம்பெறும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டஙகளால், மலையகமே ஸ்தம்பிக்க வேண்டும் எனவும், அப்போது தான் பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு எதிரான அடையாளப் போராட்டமாக இது அமைந்திருக்கும் என்றும், இதன்போது அவர்கள் வலியுறுத்தினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .