2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

காணாமற்போனோர் விவகாரம்: ‘கோட்டா ஊடாக அறியலாம்’

Kogilavani   / 2017 ஜூன் 02 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

“காணாமல்போனோர் தொடர்பான விவரங்களை வழங்க, தற்போதைய அரசாங்கத்தால் முடியாது. ஆனால், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவினால், அவர்கள் தொடர்பான விவரங்களை வழங்க முடியும். அதனால்,

 காணாமற்போனோர் தொடர்பான அலுவலகம் ஒன்றை அமைத்து, கோட்டாபய ஊடாக, காணாமற்போனோர் தொடர்பில் ஆராய முடியும்” என்று, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.   

காணாமற்போனோர் விடயங்கள் தொடர்பில், சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அதில் அவர், தொடர்ந்து கூறியுள்ளதாவது,   

“தமிழர் தாயகப் பகுதியில், இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகள், இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று குற்றஞ்சாட்டுகின்ற பெற்றோர், அந்த இரகசிய இடம் தொடர்பிலான தகவலை ஜனாதிபதிக்கு வழங்கினால், அவ்விடத்துக்கு அவர்களை அழைத்துச்செல்ல அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.   

“காணாமல் ஆக்கப்பட்டவர்கள், உண்மையிலேயே உயிருடன் இருக்கின்றார்களா அல்லது உயிரிழந்துவிட்டார்களா என்பது தொடர்பில், தேடிப்பார்க்க வேண்டும். எனக்குத் தெரிந்தமட்டில், அவ்வாறானவர்கள் எவரும், முகாம்களில் மறைத்து வைக்கப்பட்டில்லை.   

“ராஜபக்‌ஷ ஆட்சிக்காலத்தின் போது, அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம். அதுபற்றி, எனக்குத் தெரியாது. ஆனால், அப்போது அவர்களைப் பொறுப்பேற்றிருந்தால், அப்போதே அவர்களைக் கொன்றிருப்பார்களே தவிர, இவ்வளவு வருடங்களாகத் தடுத்து வைத்திருக்க மாட்டார்கள்.   

காணாமற் போனவர்கள் உள்ளனர் என்று, பட்டியலிட்டுக் கூறுவதற்கு, இந்த அரசாங்கத்தால் முடியாது. இராணுவமே இந்த விவரங்களை அறிவிக்க வேண்டும். அவர்களே இல்லை என்று கூறும் நிலையில், காணாமற்போனோர் தொடர்பில், அரசாங்கம் எங்கு போய் தேடியறிவது?  
ஆனால், கோட்டாபய ராஜபக்ஷவினால், இது குறித்து தெரிவிக்க முடியும். எனவே, காணாமற்போனோர் தொடர்பான அலுவலகம் ஒன்றை அமைத்து, அவர் ஊடாக யார் காணாமல் போனவர்கள் என்பதை ஆராய வேண்டும்” என, அவர் குறிப்பிட்டுள்ளார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .