2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கைதான 300 பேரும் இரவிலேயே விடுதலை

Editorial   / 2017 மே 23 , மு.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெரினாக் கடற்கரையில் ​விதிக்கப்பட்டிருந்த தடையையும் மீறி ​முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டத்தை அங்கு நடத்த முயன்ற 300 பேரை, பொலிஸார் கைது செய்துள்ளனர் என, இந்திய செய்தி தெரிவிக்கின்றது.  

முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் 8ஆம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் மே 21ஆம் திகதியன்றுமெரினா கடற்கரையில் நடைபெறும் என மே 17 இயக்கத்தினால், அறிவிக்கப்பட்டிருந் தது.  

இந்நிலையில், மெரினாக் கடற்கரையில் விதிமுறையை மீறி கூட்டங்கள் நடத்த முற்படுவது சட்டவிரோதம் என்றும் அத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என, சென்னை மாநகர பொலிஸார் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தனர். 

இருப்பினும், தடையை மீறி நினைவேந்தல் நிகழ்ச்சி நடை பெறும் என, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, மெரினா கடற்கரை முழுவதும் ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் 1,000​ பொலிஸார் குவிக்கப்பட்டனர். 

மெரினா கடற்கரையில் உள்ள மாநகராட்சி நீச்சல் குளம் முதல் கலங்கரை விளக்கம் வரை சர்வீஸ் சாலையில் வாகனங்கள் செல்ல பொலிஸார் தடை விதித்தனர். மேலும், நினைவேந்தல் கூட்டம் நடத்த முயல்வோரை கைது செய்து அழைத்துச் செல்ல பஸ்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. 

இந்நிலையில், தடையை மீறி நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த நபர்களை மாலை 4 மணி முதல் பொலிஸார் கைது செய்ய தொடங்கினர். மெரினா கடற்கரைக்கு கறுப்புச் சட்டை அணிந்து வந்தவர்கள் அனைவரையும், பொலிஸார் விசாரித்து அனுப்பினர். 

இந்நிலையில், மாலை 5.45 மணியளவில், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் கண்ணகி சிலை முதல் நேதாஜி சிலை வரை ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பியபடி பேரணியாக வந்தனர். 

அதைத்தொடர்ந்து, தடையையும் மீறி நேதாஜி சிலைக்கு பின்புறம் அவர்கள் நினைவேந்தல் கூட்டம் நடத்த முயன்றபோது பொலிஸார் தடுத்தனர். இதனால், இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர், அவர்கள் அனைவரையும் பொலிஸார் கைது செய்தனர். 

மற்றொருபுறம் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல் முருகன் உள்ளிட்டோர் மெரினா கடற்கரையில் உள்ள திருவள்ளுவர் சிலை முன்பாக திடீரென கூடி மெழுகுவர்த்தி ஏந்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர், அவர்களையும் பொலிஸார் கைது செய்தனர்.  

இந்தச் சம்பவத்தால் மெரினா கடற்கரையில் பரபரப்பு ஏற்பட்டது. கைதான 300 பேரையும் பொலிஸார். ஞாயிற்றுக்கிழமை இரவே விடுவித்தனர்.  

‘சமாதிகளுக்கு தடை போடுவதற்கு தயாரா?’

  இறுதிப்போரின் போது தமிழினத்தைக் காக்க உயிர்நீத்த தமிழர்களுக்கு, சென்னை மெரினாவில் மே 17 இயக்கத்தினர் அஞ்சலி செலுத்த முயன்றனர்.

இதற்கு அனுமதி அளிக்காத காவல்துறை அவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இதனை நாம் தமிழர் கட்சியின் தலைமையின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாகக் கண்டித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் பகுதியில் மே மாதம் 17ஆம் திகதி உயிர் நீத்த தமிழர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் நினைவு தினம் அனுஷ்டிக்கப்படும். இந்நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அஞ்சலி செலுத்த மே 17 இயக்கம் அழைப்பு விடுத்தது.  

ஆனால், பொலிஸாருக்கு அதற்கு அனுமதி வழங்கவில்லை. கடந்த 7 ஆண்டுகளாக இந்த நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டும், அதனை மீறி மே 17 இயக்கத்தினர் ஏராளமானோர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.  

இதனையடுத்து, மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி உள்ளிட்ட 17 பேரைக் கைது செய்த பொலிஸார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி எதிர்வரும் 29ஆம் திகதி வரை சிறையில் அடைத்தனர். இவர்களது பிணை மனு மீதான விசாரணை இன்று (23) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.  

இந்நிலையில் இந்தக் கைது நடவடிக்கை குறித்து கருத்துரைத்த, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “கடந்த 7 ஆண்டுகளாக நடத்தப்பட்ட நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு இந்த ஆண்டு தடைவிதித்தது ஏன்? மெரீனாவுக்கு கூட்டமாக போகக் கூடாது என்றால், ஜெயலலிதா சமாதியில் மணிக்கணக்கில் அமர்ந்து தியானம் செய்வதால் மட்டும் பொதுமக்களுக்கு இடைஞ்சலாக இருக்காதா?  

மெரீனாவில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்றோரின் சமாதிகளுக்கு யாரும் கூட்டமாக போகக் கூடாது என்று தடை போட தமிழக அரசு தயாரா” என்றார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .