2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘கழிவுப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு வழங்கப்படும்’

Editorial   / 2017 ஜூலை 22 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

இதுவரையில் எந்த அரசாங்கமும் தீர்வை வழங்காத நாட்டின் கழிவுப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை வழங்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கிரிந்திவலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஸ்ரீ சீலரத்ன நாயக்க தேரர் நினைவு தியான மண்டபத்தை திறந்துவைக்கும் நிகழ்வில் இன்று (22) முற்பகல் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

சர்வதேச உதவிகள் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகளின் அடிப்படையில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, கழிவுப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தை அரசாங்கம் தற்போது நடைமுறைப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி> இன்னும் சில வருடங்களில் குப்பைகள் இந்த நாட்டு மக்களுக்கும் எந்தவொரு எதிர்கால அரசாங்கத்துக்கும் ஒரு பிரச்சினையாக இருக்காது என்றும் தெரிவித்தார்.

குப்பைகள் தொடர்பில் நாட்டில் அனைத்து இடங்களிலும் எதிர்ப்புகள் மட்டுமே இன்று உள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, முழு நாட்டுக்கும் சவாலான இத்தகைய பிரச்சினைக்கு தீர்வுகளை வழங்க முயற்சிக்கின்ற போது எதிர்ப்புகளைப் போன்று தீர்வுகளும் மிகவும் முக்கியமாகும் என்றும் குறிப்பிட்டார்.

காலம் சென்ற முன்னாள் அமைச்சர் சரத்சந்திர ராஜகருணாவின் 77ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, இந்த ஸ்ரீ சீலரத்ன நாயக்க தேரர் நினைவு தியான மண்டபமும் புத்தர் சிலையும் திறந்துவைக்கப்பட்டன.

சங்கைக்குரிய நெலுவன்துடுவ அதுலதேவ தேரர் மற்றும் சங்கைக்குரிய மெகொடவெவே ரத்னசிறி தேரரின் ஆலோசனையின் பேரில் நம்பிக்கையாளர் சபை மற்றும் பிரதேச வாசிகளின் அன்பளிப்பில் இந்த தியான மண்டபம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து தியான மண்டபத்தை திறந்துவைத்த ஜனாதிபதி, அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள புத்தர் சிலைக்கு முதலாவது மலரஞ்சலியை செய்தார்.

அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, நாட்டுக்குத் தற்போது தேவையாக இருப்பது மக்களின் நல்லொழுக்கமும் பண்பாடுமாகும். பௌதீக வளங்கள் எவ்வளவு அபிவிருத்தி செய்யப்பட்ட போதும் நல்ல மனிதனையும் நல்ல சமூகத்தையும் உருவாக்குவதற்கு ஆன்மீக தத்துவமே அவசியமாகும். அந்தவகையில் இத்தகைய தியான நிலையங்கள் அமைக்கப்படுவது அவசியமாகும் என்றும் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணாவுக்கு சொந்தமான 133 பேர்ச்சஸ் காணியை இலங்கை மாற்று சக்திவள அதிகாரசபைக்கு அன்பளிப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான உறுதிப்பத்திரம் ஜனாதிபதி அவர்களால் மின்சக்தி பிரதியமைச்சர் அஜித் பீ பெரேரா மற்றும் இலங்கை மாற்று சக்திவள அதிகார சபையின் தலைவர் கீர்த்தி விக்ரமசிங்க ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது.

சங்கைக்குரிய விமலாபிதான நாயக்க தேரர், சங்கைக்குரிய மஹகந்தே ரத்னபாலாபிதான அநுநாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா துஷிதா விஜேமான்ன, உபாலி குணரத்ன ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .