2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கொத்தணிக் குண்டுகள் விவகாரம்: கருத்தை நியாயப்படுத்துகிறது ஆணைக்குழு

Kogilavani   / 2016 ஜூலை 14 , மு.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

இறுதிப் போரில் கொத்தணிக் குண்டுகளின் பாவனை தொடர்பாக, காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகமவால் தெரிவிக்கப்பட்ட கருத்துகளை, அவ்வாணைக்குழு நியாயப்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக அறிக்கையொன்றை நேற்று வெளியிட்ட ஆணைக்குழு, இறுதிப் போரில் கொத்தணிக் குண்டுகளைப் பயன்படுத்தியிருந்தாலும், அது சட்டரீதியற்றதாக அமையாது. என, மக்ஸ்வெல் பரணகம தெரிவித்தமையை, நியாயப்படுத்தியுள்ளது.

'(ஜெனீவாவில் வாய்மொழிமூல அறிக்கையில்) உயர்ஸ்தானிகரால் குறிப்பிடப்பட்ட புதிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக, ஊடகவியலாளர் ஒருவரால் கேள்விகள் எழுப்பப்பட்டன. கொத்தணிக் குண்டுகள் தொடர்பாக அக்காலத்தில் காணப்பட்ட சட்டங்களின் அடிப்படையில், அவ்வாறான கேள்விகளுக்குப் பதிலளிப்பது கடமையென, ஆணைக்குழு கருதியது. 2010ஆம் ஆண்டு ஓகஸ்ட் முதலாம் திகதியே அமுலுக்கு வந்த கொத்தணிக் குண்டுகள் தொடர்பான உடன்படிக்கையில், 2008ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் திகதியன்று, இலங்கை  கையெழுத்திட்டி ருக்கவில்லை என்பது கருத்திற்கொள்ளப்பட வேண்டும். ஆகவே, அந்த ஒப்பந்தம் அமுலுக்கு வருவதற்கு முன்னர், அவ்வாறான ஆயுதங்களின் பாவனை, சட்டரீதியற்றவை கிடையாது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'எனினும், சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களின் முக்கிய அம்சமாகக் காணப்படும் தனிச்சிறப்புக் கொள்கைகள், இராணுவத் தேவைப்பாடு, விகிதசமத்துவம் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, அவ்வாறான ஆயுதங்களின் பாவனை, நோக்கப்பட வேண்டும்' என்று தெரிவித்த அவ்வாணைக்குழு, தங்களது இரண்டாவது அறிக்கையில், அவ்வாறான ஆயுதங்கள், பாகுபாடின்றி அழிவுகளை ஏற்படுத்தக்கூடியன எனத் தெளிவான   இனங்காணப்பட்டிருந்ததாகத் தெரிவித்துள்ளது.

கொத்தணிக் குண்டுகளின் பாவனையை நியாயப்படுத்தவில்லை எனத் தெரிவித்த அந்த ஊடக அறிக்கை, இலங்கையில் போர் இடம்பெற்ற காலத்தில் நிலவிய சட்டம் தொடர்பாக மாத்திரமே கருத்துத் தெரிவித்ததாகவும் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .