2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

“சச்சிதானந்தன் காலத்தில் ஊவா மாகாண தமிழ்க் கல்வி வீழ்ச்சி”

Yuganthini   / 2017 ஜூன் 08 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

“ஊவா மாகாண தமிழ்க் கல்வி அமைச்சு, சச்சிதானந்தனின் பொறுப்பில் இருந்த காலத்தில், தமிழ்க் கல்வியின் பெறுபேறுகள்  37 சதவீதத்துக்கும் குறைவாகவே காணப்பட்டன. தற்போது, எனது பொறுப்பில் இயங்கிவரும் தமிழ் கல்வியின் பெறுபேறு,  56.69 சதவீதமாக அதிகரித்துள்ளது. இப்பெறுபேறு அதிகரிப்பானது, ஒரு நாள் உழைப்பின் மூலம் அதிகரித்தது கிடையாது” என்று, ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது,

“2009ஆம் ஆண்டு,  ஊவா மாகாண முதலமைச்சாராக சசிந்திர ராஜபக்ஷ செயற்பட்ட காலத்தில்  இ.தொ.காவின் முதல் வேண்டுக்கோல் தமிழ் மக்களின் சமூதாயத்தை மேம்படுத்துவதேயாகும். ஒரு சமூகத்தில் கல்வி சிறந்த முறையில் காணப்பட்டால்தான், சமூகத்தை மேம்படுத்தமுடியும் என்பதை அறிந்து, தமிழ் கல்வியை முன்னேற்றும் வேலைத்திட்டத்துக்கு முதலிடம் வழங்கினோம்.

ஊவா மாகாணத்தில் தமிழ்க் கல்வி அபிவிருத்திக்காக  கூடுதலான கவனம் செலுத்தி, புதிய தொழில்நுட்ப முறையிலான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தோம். தமிழ் கல்வி பிரிவை,   நிர்வாகச்சேவை அபிவிருத்தி, தளபாடங்கள் அபிவிருத்தி, நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் என, மூன்று பிரிவுகளின் அடிப்படையில் ஐந்து வருட காலங்களில் படிப்படியாக அபிவிருத்தி செய்து வந்தோம்.

இந்த  ஐந்து வருட செயற்பாடு, தற்போது பயனளித்துள்ளது. அதன் விளைவாகவே, 37 சதவீதமாக காணப்பட்ட தமிழ் கல்வி பெறுபேற்றை 56.69 சதவீதமாக உயர்த்த முடிந்தது.  அதற்கு ஊவா மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சசிந்திர ராஜபக்ஷ மற்றும் தற்போதைய முதலமைச்சர் சாமரசம்பத் தசநாயக்கவும் ஆகியோர் எமக்கு பூரண ஒத்துழைப்பை  வழங்கினர்.

அதனடிப்படையில்,  ஊவா மாகாணத்தில் காணப்படுகின்ற பாடசாலைகள் தொடர்பாக ஆய்வை மேற்கொண்டு, அப்பாடசாலையில் சிறந்த பெறுபேற்றை வழங்கமுடியாத அதிபர்கள், பெறுபேறு இல்லாத ஆசிரியர்கள்,  பாடசாலைகளில் முறையாக பணியாற்றாத சிற்றூழியர்கள் என ஒவ்வொருவரையும் பற்றிய தகவல்களை உள்ளடக்கிய சுயவிபரக் கோவையை தனித்தனியே,  கவனிக்க ஆரம்பித்தோம்.

பாடசாலைக்கு குடிபோதையுடன் செல்லும் அதிபர்கள், பாடசாலை மாணவிகளிடம் தவறாக நடந்துகொண்ட அதிபர், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகளிடம் முறைக்கேடாக நடந்துக்கொண்டவர்கள் போன்றவர்களின் மீதே,  கடுமையான நடவடிக்கைகளை 2009ஆம் ஆண்டு முதல் நான் முன்னெடுத்து வந்துள்ளேன்.  

2009ஆம் ஆண்டுக்கு பிறகு, எனது பொறுப்பில் தமிழ் கல்விசெயற்பட தொடங்கியதிலிருந்து இவ்வாறு முறைக்கேடாக செயற்படும் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் சிற்றூழியர்களுக்கு எதிராக வேகமாக விசாரணைகளை மேற்கொண்டு, அதிகூடிய நடவடிக்கையாக சேவை இடைநிறுத்தம் வரை கொண்டுச்சென்றோம்.

அதன் பிறகே, இவ்வாறான முறைக்கேடான செயற்பாடுகள் ஊவா மாகாண தமிழ் பாடசாலைகளில் முற்றிலும் குறைய ஆரம்பித்தது.

அதற்கு மாறாக சச்சிதானந்தன் போன்ற அரசியல்வாதிகளின் ஆதரவுடன் சில பாடசாலையின் அதிபர்கள், ஆசிரியர்கள், சிற்றூழியர்கள் பாடசாலை விதிமுறைகளுக்கு எதிராகவும் பெற்றோர்களுக்கு பாடசாலை நடவடிக்கைள் தொடர்பாக எவ்விதமான விழிப்புணர்வை ஏற்படுத்தாத வகையிலும் செயற்பட்டு வருகின்றனர்.

அவ்வாறு செயற்படுவர்கள் மீதே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் செய்த தவறை திருத்திக் கொள்ளவதற்கான ஒரு வாய்ப்பாக அவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதே, எனது கருத்தாகும்” என்று அவர் மேலும் கூறினார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .