2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’சமாதானமான நாட்டைக் கட்டியெழுப்ப அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது’

Editorial   / 2017 ஜூன் 03 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

பூமியைக் குருதியால் தோய்த்த மூன்று தசாப்த கால குரூரமான போரின் கசப்பான அனுபவங்களை நினைவு கூருவது போன்றே மீண்டும் அவ்வாறான அனர்த்தம் நாட்டில் ஏற்படாதவாறு செயற்பட வேண்டியது அனைவரினதும் பொறுப்பாகுமென ஜனாதிபதி தெரிவித்தார்.

எவ்வாறான விமர்சனங்கள் வந்தாலும் அவ்வாறான துர்ப்பாக்கிய காலத்தின் இருளிலிருந்து நாட்டையும் மக்களையும் மீட்டு, அனைத்து மக்களும் சகோதரத்துவத்துடனும் நல்லிணக்கத்துடனும் வாழக்கூடிய சமாதானமான நாட்டைக் கட்டியெழுப்ப தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

அரந்தலாவ சர்வதேச பௌத்த நிலையத்தில் நேற்றுப் பிற்பகல் நடைபெற்ற அரந்தலாவ பிக்குகள் படுகொலையின் 30 ஆண்டு நிறைவையொட்டி வண. நேஹொட இந்தசார தேரர் உள்ளிட்ட தேரர்களின் நினைவாக இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அனைத்து இன, மத மக்களிடையே நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பி, நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்திட்டங்களுடன் இணைய வேண்டியது அனைவரதும் பொறுப்பாகுமென தெரிவித்த ஜனாதிபதி, பிற்போக்குவாதம் மற்றும் அதிகார ஆசையை முடிவுறுத்தி தாய்நாட்டின் எதிர்காலத்துக்காக சகோதரத்துவத்துடன் அணிதிரள வேண்டியது அனைவரிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ள காலத்தின் பணியாகும் எனவும் தெரிவித்தார்.

1987ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2ஆம் திகதி, அம்பாறை வித்யானந்த பிரிவெனாவைச் சேர்ந்த வண. நேஹொட இந்தசார தேரர் உள்ளிட்ட 31 தேரர்களும் நிராயுதபாணிகளான அப்பாவி மக்கள் மூவரும், தமிழீழ விடுதலைப் புலிகளால் வெட்டிக் கொல்லப்பட்டனர்.

வண. நேஹொட இந்தசார தேரரின் மத, சமூக செயற்பாடுகளை பாராட்டிய ஜனாதிபதி, அவரது உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்தியதுடன், பௌத்த நிலையத்தில் நிர்மாணிக்கப்பட்ட நினைவு மண்டபத்தையும் திறந்து வைத்தார்.

 கொலை செய்யப்பட்ட தேரர்களை நினைவுகூர்ந்து நிர்மாணிக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னத்தை ஜனாதிபதி பார்வையிட்டதுடன், விகாரையின் சூரிய மின்கல கட்டமைப்பையும் திறந்து வைத்தார்.

'அரந்தலா சங்கவத' சஞ்சிகை ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டது.

வண. உருலேவத்த ஸ்ரீ தம்மரக்கித்த தேரர், வண. கிரிந்திவெல சோமரதன தேரர் உள்ளிட்ட தேரர்களும், அமைச்சர்களான தயா கமஹே, ரஞ்சித் சியாம்பலாபிற்றிய, பிரதி அமைசர்களான லசந்த அழகியவன்ன, அனோமா கமஹே, முன்னாள் அமைச்சர் பீ.தயாரத்ன உள்ளிட்ட பலர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .