2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சர்வதேச நாடுகள் கரம் நீட்டுகின்றன

Editorial   / 2017 மே 30 , பி.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, உதவுவதற்கான சர்வதேச உதவிகள் வந்து குவிந்துகொண்டே இருக்கின்றன.  

இந்தியா, பாகிஸ்தான், சீனா, அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து, நோர்வே மற்றும் சிங்கப்பூர் உள்ளிட் நாடுகள் உதவி கரம் நீட்டியுள்ளன. சில நாடுகள் நிவாரணப் பொருட்களை தங்களுடைய கப்பல்களின் மூலமாக கொழும்பு துறைமுகத்துக்கு அனுப்பிவைத்துள்ளன.

இன்னும் சில நாடுகளும், அந்த நாடுகளைச் சேர்ந்த அமைப்புகளும், நிதியுதவியளித்துள்ளன.  

இந்தியாவின் மூன்றாவது கப்பல்  

நிவாரணப் பொருட்களுடன் இந்திய அரசாங்கம் தனது மூன்றாவது கப்பலை அனுப்பியிருந்தது. ‘ஜலஸ்வா’ என்ற கப்பல் கொழும்பு துறைமுகத்தை நேற்று (30) வந்தடைந்து. இதேவேளை, ஒருதொகுதி மருத்துவ குழுவினரையும் இந்தியா அனுப்பிவைத்துள்ளது.  

இந்த கப்பலில் கொண்டுவரப்பட்ட நிவாரணப் பொருட்களை இலங்கை அரசாங்கத்தின் சார்பாக ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. அபேகோன் பொறுப்பேற்று, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்தினவிடம் கையளித்தார்  

மருத்துவர்கள், மருந்துப்பொருட்கள், உலர் உணவுகள், சிறிய படகுகள், குடிநீர், கூடாரங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய உதவிப் பொருட்கள் உள்ளடங்கிய சுமார் 10 தொன் நிவாரண உதவிகள் இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  

பாகிஸ்தான் கப்பல் வந்தது  

இதேவேளை, நிவாரணப் பொருட்களுடன் பாகிஸ்தான் கப்​பலொன்று, கொழும்பு துறைமுகத்தை நேற்று (30) மாலை வந்தடைந்தது.  

சீன கப்பல்கள் வரும்  

நிவாரணப் பொருட்கள் தாங்கிய மூன்று கப்பல்களை சீனா, நாளை வியாழக்கிழமை அனுப்பிவைக்க உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

அவுஸ்திரேலியாவும் உதவுகிறது  

இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், 57 மில்லியன் ரூபாய் பெறுமதியான நிவாரணப் ​பொருட்களை அவுஸ்திரேலியா அனுப்பிவைக்கவுள்ளது என்று அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷப் அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.  

உயர்தரமான படகுகள், தேடல் மற்றும் மீட்பு முயற்சிகளை துரிதப்படுத்தும் படகுகள் உள்ளிட்டவை அடங்கிய விமானம், விரைவில் இலங்கையை சென்றடையும் என்றும் அறிவித்துள்ளார்.  

நியூசிலாந்தும் உதவி

இதேவேளை, நியூசிலாந்து அரசாங்கம் 30.8 மில்லியன் ரூபாய் பெறுமதியான நிவாரண பொருட்களை பெற்றுக்கொடுக்க முன்வந்துள்ளது. இலங்​கையின் தற்போதைய நிலை தொடருமாக இருந்தால், எதிர்வரும் நாட்களில் மேலதிக உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நியூசிலாந்து வௌிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.  

கரம் நீட்டியது சீனா செஞ்சிலுவை  

இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, சீன செஞ்சிலுவை சங்கம், 100,000 அமெரிக்க டொலர்களை இலங்கை செஞ்சிலுவை சங்கத்திடம் கையளித்துள்ளது.  

அதற்கான காசோலையை சீன தூதுவர் யீ சியாலியம், இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் தேசிய செயலாளர் நிமல் குமாரவிடம் நேற்று (30) கையளித்துள்ளார்.  

உதவிக்கரம் நீட்டுகிறது சிங்கப்பூர்  

இலங்கை மக்களுக்கு உதவும் நோக்கில், சிங்கப்பூர் அரசாங்கம், ஒரு இலட்சம் அமெரிக்க டொலர்களை (138,490 சிங்கப்பூர் டொலர்கள்) உதவியாக வழங்க முன்வந்துள்ளது.   சிங்கப்பூர் பிரதமர் லீ ஸீன் லூங் மற்றும் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோர் , பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு, இந்த நிவாரண உதவி தொடர்பில், கடிதம் மூலமாக அறிவித்துள்ளனர்.  

இலங்கையின் தற்போதைய நிலை குறித்து தாம் வருந்துவதாகவும் இலங்கை மக்கள் நிச்சயம் இந்த கடுமையான சூழலில் இருந்து மீண்டெழுவார்கள் எனத் தாம் நம்புவதாகவும் அதற்காக தம்மாலான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராகவுள்ளதாகவும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நோர்வேயும் உதவி

நோர்வே அரசாங்கமும் 180 மில்லியன் ரூபாயை நிதி உதவியாக வழங்கவுள்ளதாக, அறிவித்துள்ளது.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .