2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சி.விக்கு எதிரான நடவடிக்கைக்கு சங்கரி கண்டனம்

George   / 2017 ஜூன் 15 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

“வட மாகாணசபையின் நிகழ்வுகளை பார்க்கும் போது, தமிழ் மக்கள் வெட்கி தலைகுனியுமளவுக்கு போய்விட்டது. நாடே நம்மை பார்த்து ஏளனமாக சிரிக்கின்றது.

ஒரு காலத்தில் நீதி, நேர்மை, ஒழுக்கம், கல்வியறிவு என பல வகையிலும் சிறந்து விளங்கிய யாழ்ப்பாண சமூகத்தின் தலைவர்கள், இன்று தலை சாய்ந்து நிற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அரசியலில் நீதியும், நேர்மையும், ஒழுக்கமும் எமது சமூகத்தைவிட்டு எங்கோ பறந்தோடிவிட்டது” என்று, தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இதை நான் 2004ஆம் ஆண்டு தொடக்கம் கூறிவந்துள்ளேன். எல்லோரும் ஒரு குடையின் கீழ் வர வேண்டும் என்று விடுதலைப் புலிகள் விரும்பியிருந்த நேரத்தில், கிளிநொச்சியில் வைத்து சதித்திட்டம் தீட்டி, தனக்கு பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் பாழடித்தவர்கள்தான் இன்று இந்த அரசியல் நிலைமைக்கு காரணகர்த்தாவாகியுள்ளனர்.

“ஊழல், மோசடி குற்றச்சாட்டு வெளிவந்தவுடனேயே இந்த நான்கு அமைச்சர்களும் இராஜினாமா செய்திருக்க வேண்டும். அல்லது, கட்சித்தலைவர் அவர்களை இராஜினாமா செய்யுமாறு கேட்டிருக்க வேண்டும். அரசியல் நாகரீகத்தை இவர்களிடம் எதிர்ப்பார்க்க முடியாது.

“குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டவுடனாவது, இராஜினாமா செய்திக்க வேண்டும். இவர்கள் அரசியலுக்கு புதியவர்கள். ஆனால், வந்தவுடன் எவ்வாறு ஊழலும் மோசடியும் செய்யலாம் என்று எங்கோ கற்றுக்கொண்டு வந்திருக்கின்றார்கள்.

“பதவி மோகத்தால் அரசியலுக்கு வந்ததால், இவ்வளவு சம்பாதிக்கலாம் என்று தெரியாமல் போய்விட்டதே என்று எண்ணிக்கொண்டு, இருக்கும் காலம்வரை பதவியை கட்டிப்பிடித்துக் கொண்டு வாழலாம் என எண்ணிக்கொண்டு இராஜினாமா செய்ய மறுக்கின்றார்கள்.

“இவர்களா தமிழ் மக்களுக்கு சேவை செய்ய போகின்றார்கள். தந்தை செல்வாவின் பெயரை வெறுமனே உச்சரித்துக்கொண்டு அவர் மூடிவைத்த கட்சியை மோசடி மூலம் புதுப்பித்துக்கொண்டவரின் தாளங்களுக்கு ஆடும் நாடகத்தில் இவர்கள் ஒரு வேடதாரிகள். இவர்களிடம் எந்த நல்ல பண்புகளையும்; எதிர்பார்க்க முடியாது.

“தமிழர்களின் ஒற்றுமைக்கு பங்கம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, நானும் எனது கட்சியும் காலத்துக்குக்காலம் பிரதேசசபை, மாநகரசபை போன்ற தேர்தலில் பங்கு கொண்டு ஒத்துழைப்பு நல்கினோம். ஆனால், இவர்கள் பங்காளிக் கட்சிகளின் கருத்துக்களுக்கு செவிசாய்ப்பதில்லை. அதன் விளைவே இன்று விபரீதமாக போய்விட்டது.

“ஒரு நீதியரசர் முதலமைச்சராக இருந்து தன்னுடைய தூய்மையான, நேர்மையான நடவடிக்கைகளை மேற்கொண்டு ஒரு தீர்வை முன் வைத்திருக்கின்றார். அதற்கேற்றவாறு அமைச்சர்கள் நடந்துகொள்ள வேண்டும். அரசியலுக்கு வரும் முன்பு அவர்கள் என்ன தொழில் செய்திருந்தாலும் பரவாயில்லை. ஆனால், புனிதமான அரசியலுக்கு வந்தபின் அந்த புனித தன்மை கெடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது சம்பந்தப்பட்டவர்களின் கடமையும், பொறுப்புமாகும்.  

“முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அரசியலுக்கு வந்தது ஒரு வரப்பிரசாதமென நான் ஏற்கெனவே கூறியிருந்தேன். சகல அமைப்புக்களையும் ஒன்றிணைத்து எமது கட்சிக்கு தலைமை தாங்கும்படியும் கேட்டிருந்தேன்

“அதற்கு நன்றி தெரிவித்த சி.வி.விக்னேஸ்வரன், நீங்கள் ஒற்றுமையாக செயற்படுங்கள் என்று கூறியிருந்தார். தற்போது அதற்கான சந்தர்ப்பம் வந்துள்ளது. எல்லோரையும் ஒன்றிணைத்து ஒரு புனிதமான அரசியலுக்கு எமது கட்சியுடன் இணைந்து தலைமை தாங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். முதலமைச்சருக்கு எதிராக எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் தமிழர் விடுதலைக் கூட்டணி வன்மையாக கண்டிக்கும்” என, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .