2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஜோசப் எம்.பி கொலை: மற்றுமொருவர் கைது

Editorial   / 2017 மே 24 , பி.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித, கனகராசா சரவணன், நல்லதம்பி நித்தியானந்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொருவர், கைது செய்யப்பட்டுள்ளார்.

வெலிக்கந்தையைச் சேர்ந்த வினோத் என்றழைக்கப்படும் மதுசங்க (30) என்பவரே, குற்றப் புலனாய்வு பிரிவினரால், இன்று (24) பிற்பகல் கைது செய்யப்பட்டார்.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில்,இன்றையதினமே அவரை ஆஜர்படுத்திய போது, ஜூன் மாதம் 7ஆம் திகதி வரையிலும் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா உத்தரவிட்டுள்ளார்.

த.தே.கூ நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், 2005 ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் திகதியன்று மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்தில் இடம்பெற்ற  நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்துகொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த படுகொலைச் சம்பவம் தொடர்பில், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவருமான சிவநேசன்துரை சந்திரகாந்தன், அக்கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப் புலனாய்வு உத்தியோகஸ்தர் எம்.கலீல் ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளர்.

இந்த படுகொலை தொடர்பாக 7 பேருக்கு எதிராக சட்டமா அதிபரினால் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவ்வழக்கு, எதிர்வரும் ஜுன் 7ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட 4 பேர், ஓன்றரை வருடங்களுக்கு மேலாக நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில்  வைக்கப்பட்டுள்ளனர். 3 பேர் தேடப்பட்டு வந்தனர். அவர்களில்,  இன்றைய தினம் கைது செய்யப்பட்டவர் 5ஆவது சந்தேக நபராவார் ஆவர்.

இதேவேளை, 5ஆவது சந்தேக நபரான குலத்துங்க,  இரகசிய வாக்குமூலமொன்றை வழங்கவுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அதனை ஏற்றுக் கொண்ட நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா,  சிறைச்சாலை உத்தியோகத்தர் ஊடாக எதிர்வரும் ஜுன் 5ஆம் திகதி  தன்னுடைய வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்துமாறும்  அன்றைய தினம் வரையிலும்  விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .