2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

டிலரி ஆசிரியர்கள் பட்டப்பகலில் அடாவடி

Editorial   / 2017 ஜூன் 13 , மு.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட நோர்வூட் சென் ஜோன் டிலரி தமிழ் வித்தியாலயத்தின் ஆசிரியர்களில் சிலர், செய்தி சேகரிக்கச் சென்றிருந்த ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், அவர்களுடைய உபகரணங்களை அபகரித்து வீசியதுடன், தூசணத்தாலும் திட்டியும் உள்ளனர். இதனைப் பார்த்துக் கொண்டிருந்த, அப்பாடசாலையில் கல்விபயிலும் பிள்ளைகளின் பெற்றோர், பழைய மாணவர்கள் ஆகியோர் ரகளையில் ஈடுபட்ட ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அப்பாடசாலையில் கற்பிக்கும், ஏனைய சில ஆசிரியர்களின் பெயர்களைக் கூறி, அவர்களைப் போல முன்மாதிரியாக இருக்குமாறும் அறிவுரை கூறினர்.  

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,  

அந்த வித்தியாலத்தில் தரம் 10இல் பயிலும் அமரேசன் வினுஷான் என்ற மாணவன் மீது தாக்குதல் நடத்திய ஆசிரியரை உடனடியாகக் கைதுசெய்யுமாறு வலியுறுத்தி, வித்தியாலத்துக்கு முன்பாகவுள்ள, மைதானத்தில் பெற்றோர்கள், நேற்றுக் காலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

இந்த ஆர்ப்பாட்டத்தை கேள்வியுற்ற ஊடகவியலாளர்கள் இருவர், அவ்விடத்துக்குச் சென்று, கமெராக்களை எடுத்து, படங்களை எடுத்துள்ளனர். அப்போது, ஓடோடிவந்த ஆசிரியர்கள், கமெராக்களைப் பிடுங்கி இழுத்ததுடன், செய்தி சேகரிக்க வேண்டாமென்று ஊடகவியலாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  

இந்நிலையில், தாங்கள் இருவர் மீதும் தாக்குதல் நடத்தியதாக, அந்த ஊடகவியலாளர்கள் இருவரும், நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.  

இது இவ்வாறிருக்க, தங்களுடைய பாடசாலை வளாகத்துக்குள் இனந்தெரியாத நபர்கள் சிலர் வந்தந்ததாகவும், அவர்களை ஆசிரியர்கள் விசாரித்துக்கொண்டிருந்த போது, இன்னுமிருவர், தங்களை ஊடகவியலாளர்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்ளாமல், படம் எடுத்துக்கொண்டிருந்ததாவும் இதனையடுத்தே, அவ்விருவருடன் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது என்றும் பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.  

எனினும், பொலிஸில் முறையிடப்பட்டுள்ளவாறு, எவ்விதமான கைகலப்பும் அவ்விருவருடன் இடம்பெறவில்லை என்றும் பாடசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.  

அந்த வித்தியாலயத்தில் கற்பிக்கும், ஆங்கில பாட ஆசிரியர் ஒருவர், மாணவர்களுக்கு கடந்த வெள்ளிக்கிழமை (09) பயிற்சியை வழங்கியுள்ளார். அப்பயிற்சியை அம்மாணவன் இரண்டாவது தடவையாகவும் தவறாகச் செய்து காட்டியுள்ளான். இதனையடுத்தே ஆத்திரமடைந்த அந்த ஆசிரியர், அம்மாணவனை கடுமையாகத் தாக்கியதாக, மாணவனின் பெற்றோர் செய்துள்ள பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதேவேளை, பாதிக்கப்பட்ட மாணவன், பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக டிக்கோயா-கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X