2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

'தகவல்களை மறுக்கலாம்'

Kanagaraj   / 2016 மார்ச் 24 , பி.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய பாதுகாப்பு தொடர்பான
இறைமைக்கு பங்கமானது
பொருளாதாரத்துக்கு பங்கம் விளைவிக்கும்
சர்வதேச உறவைப் பாதிக்கும்
குற்றவழக்குத் தொடுப்பதை தடுக்கும்
நீதிமன்றத்தை அவமதிக்கும்

அழகன் கனகராஜ்

தகவலறியும் உரிமைச் சட்டமூலம், நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை (24), நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சரும் அரசாங்க முதற்கோலாசானுமான கயந்த கருணாதிலகவினால் சமர்ப்பிக்கப்பட்டது.
நாடாளுமன்றம் நேற்று வியாழக்கிழமை காலை 9.30க்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னரே இந்தச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டது.இதற்கு, மக்கள் விடுதலை முன்னணி தமது ஆதரவைத் தெரிவித்தது.

சட்ட ஏற்பாடுகளின் ஏற்புடமை, தகவலைப் பெற அணுகுதலுக்கான மறுப்பு, அமைச்சர்களதும் பகிரங்க அதிகார சபைகளதும் கடமைகள், தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவை ஸ்தாபித்தல், தகவல் அலுவலர்களின் தகவல் அலுவலர்களின் நியமனமும் தகவலுக்கு அணுக்கம் பெறுவதற்கான நடவடிக்கை முறையும், மறுப்புக்களுக்கு எதிரான மேன்முறையீடுகள் பொதுவானவை ஆகிய தலைப்புகளின் கீழ், ஏழு பாகங்களை இந்தச் சட்டமூலம் கொண்டிருக்கின்றது.

ஒவ்வொரு பிரஜையும், ஒரு பகிரங்க அதிகார சபையின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற தகவலைப் பெறுவதற்கு உரிமையை கொண்டிருக்கின்றார்.


அரசின் பாதுகாப்பை, ஆட்புல இறைமையை, தேசியப்  பாதுகாப்பை பாதிக்கக்கூடியதான தகவல்களை வழங்காமல் மறுக்கலாம்.

சர்வதேச கடப்பாடுகள் அல்லது உடன்படிக்கைகள் தொடர்பில், இலங்கையின் உறவுகளுக்கு பாரதூரமாக இருந்தால் தகவல்களை மறுக்கலாம்.

இலங்கையின் பொருளாதாரத்துக்கு, பாரதூரமான பங்கத்தை விளைவிக்குமாயின் தகவல்களை வழங்காது விடலாம்.

குற்ற வழக்குத் தொடுப்பதைப் பாதகப்படுத்தினால், தகவல்களை வழங்காது விடலாம்.

தகவல்கள், மூன்றாம் தரப்புக்கு அந்தரங்கமாக வழங்கப்பட்டிருந்தால், அந்த மூன்றாம் தரப்பு அதனை வெளியிடுவதற்கு சம்மதமளிக்காவிடின், தகவல்களை வழங்காது விடலாம்.

நீதிமன்றத்தை அவமதிப்பதாக இருக்குமாயின், தகவல்களை வழங்காது விடலாம்.

பரீட்சைகள் திணைக்களம், உயர் கல்வி நிறுவனம் நடத்தும் பரீட்சைக்குத் தீங்கு விளைவிப்பதாக அமையுமாயின், தகவல்களை வெளியிடாதுவிடலாம்.

எனினும், மேலே குறிப்பிட்ட விடயதானங்களில் கோரப்பட்ட தகவல்கள், 10 ஆண்டுகளுக்கு மேல் பழைமையானதாக இருந்தால், தகவல்களை வழங்கும் கோரிக்கையை மறுக்க முடியாது.

இதேவேளை, கடல் கடந்த வியாபார உடன்படிக்கை தொடர்பிலான பேரம்பேசுதல்கள், 10 ஆண்டுகள் கழிந்த பின்னர் கூட முடிவடையாமல் இருந்தால், தகவலை வழங்கக்கூடாது.

ஓர் அறிக்கையை வெளியிடுவது, அமைச்சர்களின் கடமையாகும். ஆண்டுக்கு இரண்டு தடவைகள் வெளியிடப்பட வேண்டும்.

அறிக்கை, அரசகரும மொழிகளில் வெளியிடப்படுதல் வேண்டும்.

அறிக்கையை, பொதுமக்கள் பரிசோதிக்க வேண்டுமாயின், பிரதிகளை பொதுமக்களுக்கு கட்டணக் கொடுப்பனவில் வழங்கலாம்.

ஒரு செயற்றிட்டம் தொடங்குவதற்கு 3 மாதங்களுக்கு முன்னர் அந்தச் செயற்றிட்டம் தொடர்பில், விடயதானத்துக்குப் பொறுப்பான அமைச்சு, பொதுமக்களுக்கு அறிவிக்க வேண்டும். செயற்றிட்டத்தில் ஏற்படப்போகும் பாதிப்புகளையும் அறிவிக்க வேண்டும்.

தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவை ஸ்தாபிக்கலாம், அந்த ஆணைக்குழுவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யலாம்.

ஆணைக்குழுவானது, அரசியலமைப்புப் பேரவையின் முன்மொழிவுடன் ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் 5 ஆட்களைக் கொண்டிருத்தல் வேண்டும். அதில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், வெளியீட்டாளர்கள், பதிப்பாசிரியர்கள் மற்றும் ஊடக ஆட்களின் ஒழுங்கமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் உள்ளடக்கியிருப்பர்.

அரசியலமைப்புப் பேரவை அபிப்பிராயப்பட்டால், வெற்றிடம் ஏற்பட்டால், புதிய நியமனங்களைக் கோரலாம். அவை ஒரு மாதத்தினுள் பூர்த்தி செய்யப்படல் வேண்டும்.

ஆணைக்குழுவின் உறுப்பினர்களின் பதவி 5 ஆண்டுகளைக் கொண்டிருக்கும்.

ஓர் ஆளைப் பரீட்சிப்பது அவசியமானதாயின், தகவலை இரகசியமாகப் பரீட்சிக்கப்படல் வேண்டும்.

ஆளொருவரின் உயிர் அல்லது சுதந்திரத்தை தகவல் பாதுகாக்குமாயின், அவரைத் தொடர்பு கொள்ள அவசியமான தகவலைத் தவிர தனிப்பட்ட விவரங்களைக் கோரக் கூடாது.

உயிர் மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்துடன்  சம்மந்தப்படுகின்றவிடத்து தகவலை, 48 மணி நேரத்துக்குள் வழங்குதல் வேண்டும்.

தகவல் தேடல் 14 நாட்களுக்குள் முடிந்திருக்காவிடின், 21 நாட்கள் மேற்படாத மேலுமொரு காலப்பகுதியைக் கோரலாம்.

காரணங்களுடன் திருப்திப்படாத பிரஜை, குறித்த அலுவலருக்கு எதிராக மேன்முறையீடு செய்யலாம்.

தகவல் அந்தரங்கமானது எனின், முன்றாம் தரப்பை ஒரு வாரத்தில் அழைக்க வேண்டும். கேள்விகளுக்கு உரிய வகையில் பதிலளிக்காது விட்டால், தகவல்களை  வழங்காமல் விடலாம்.

தகவலுக்கான கோரிக்;கையை மறுத்தால் அதற்கெதிராக வழக்குத் தாக்கல் செய்யலாம். கூடுதலான கட்டணங்களை அறவிட்டால் வழக்குத் தாக்கல் செய்யலாம்.                           

அலுவலகர், தகவலை வழங்கவில்லை என்று நீதிமன்றினால் குற்றவாளியாக இனங்காணப்பட்டால் 50 ஆயிரத்துக்கு மேற்படாத தண்டமும், இரண்டு வருடங்கள் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
சட்டமூலத்தை சமர்ப்பித்து உரையாற்றிய அமைச்சர் கயந்த கருணாதிலக்க, 'பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இன்று (நேற்று) 67ஆவது பிறந்தநாளாகும். இன்றைய நாளில், இந்தசு; சட்டமூலத்தை சமர்ப்பதையிட்டுப் பெருமைப்படுகின்றேன்' என்றார்.

இதன் போது எழுந்த ஜே.வி.பி.யின் தலைவரும் எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவுமான அநுர குமார திஸாநாயக்க, 'இந்தச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டமை வரவேற்கத்தக்கது. இதேவேளை, மாகாண சபைகளில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள திருத்தங்கள் எமக்குக் கிடைத்தால் மிகவும் நல்லது. அவற்றை வைத்துக்கொண்டு விவாதிக்க முடியும்' என்றார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் கயந்த கருணாதிலக்க, 'இரண்டொரு வாரங்களில் அவற்றைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X