2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

திருமலையில் பாரிய நகர அபிவிருத்தி திட்டம்

Editorial   / 2017 ஜூலை 15 , பி.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமலை ராஜ்குமார், அப்துல்சலாம் யாசீம், தீஷான் அஹமட், எஸ்.சசிக்குமார்

திருகோணமலையை அபிவிருத்தி செய்வதற்காக ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் நிதியுதவியில் பாரிய நகர அபிவிருத்தி திட்டம் தயாராகிக் கொண்டிருப்பதாக, நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையும் இணைந்து, திருகோணமலை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அலுவலகத்தில் இன்று (15) நடத்திய நடமாடும் சேவையில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு உரையாற்றுகையில் அமைச்சர் மேலும் கூறியதாவது,

“பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்தும் நோக்கில், திருகோணமலை பாரிய நகர அபிவிருத்தித் திட்டத்தில் பல கருத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. ஏற்றுமதி தொழிற்சாலைகள், இயற்கை துறைமுகம் அபிவிருத்தி, உல்லாசப் பிரயாணத்துறையை மேம்படுத்தல் போன்ற பல்வேறு அபிவிருத்திகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

“திருகோணமலை கடற்கரை முழுவதும் நிர்மாணிக்கப்பட்டுள்ள சுற்றுலாத்துறை விடுதிகள், குடிநீரை பெற்றுக்கொள்வதில் பல சிரமங்களை எதிர்நோக்குகின்றன. இதற்காக நீர் வழங்கல் திட்டத்தை விஸ்தரிப்பதற்காக பல்வேறு திட்டங்களை அமுல்படுத்தி வருகிறோம்.

“அம்பாறை மாவட்டத்திலுள்ள குழாய்நீர் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக நான் அமைச்சரவைக்கு பத்திரமொன்றை சமர்ப்பித்திருந்தேன். அதனோடு, திருகோணமலை மாவட்டத்தையும் சேர்த்து, உள்ளூர் வங்கிகளின் நிதியுதவியைப் பெற்று அவற்றை நிவர்த்தி செய்யவுள்ளோம். இதன்மூலம் திருகோணமலையில் 200 கிலோமீற்றர் தூரத்துக்கு குழாய் பதிப்பதற்கு நிதியுதவி கிடைக்கும்” என்றார்.

பாவனையாளர்களின் செயற்பாடுகளை நெறிப்படுத்தி, மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் நோக்கில், கிண்ணியாவில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் உப அலுவலகப் பொறுப்பாளர் அலுவலகம் திறந்துவைக்கப்பட்டது.

இந்த நடமாடும் சேவையில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள குடிநீர் பாவனையாளர்களின் பிரச்சினைகள் தீர்த்துவைக்கப்பட்டதுடன், சிறுநீர நோய் பரபுவதாக அடையாளம் காணப்பட்ட இடங்களுக்கு நீர் சுத்திகரிப்பு (RO Plants) இயந்திரங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டன.

குழாய்நீர் இணைப்பு பெறுவதற்கு வசதியில்லாத குடும்பங்களுக்கு, இலவச இணைப்புகள் வழங்கப்பட்டதுடன், பாடசாலை, வைத்தியசாலை, மத ஸ்தாபனங்களுக்கு நீரை தேக்கிவைக்கக்கூடிய நீர்த்தாங்கிகள் வழங்கப்பட்டன.

நோயாளிகளுக்கு வசதியளிக்கும் மெத்தைகள், வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்டதுடன், வசதிகுறைந்த 75 குடும்பங்களுக்கு கழிவறைகள் அமைப்பதற்கான நிதியுதவியும் இதன்போது வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .