2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

‘தலைமைகளுக்கு பாடம் புகட்ட இளைஞர், யுவதிகள் முன்வர வேண்டும்’

Editorial   / 2017 ஜூலை 25 , பி.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

“கிடைக்கப்பெறும் அரசியல் அதிகாரங்களைக் கொண்டு, எமது இளைஞர், யுவதிகளின் வேலைவாய்ப்புப் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்க அக்கறைகொள்ளாத அரசியல் தலைமைகளுக்கு,  இளைஞர், யுவதிகள் சிறந்த பாடத்தை, எதிர்வரும் காலத்தில் கற்றுக்கொடுக்க முன்வர வேண்டும்” என்று

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் சங்கப் பிரதிநிதிகளுடன், கொழும்பில் நடைபெற்ற சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வேலையற்று இருக்கும் பட்டதாரிகளான தமக்கு, பொருத்தமான தொழில்வாய்ப்பைப் பெற்றுத்தந்து உதவ வேண்டும் என்று கூறிய சங்கப் பிரதிநிதிகள், தமது கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றையும், டக்ளஸ் எம்.பியிடம் கையளித்தனர்.

மகஜரைப் பெற்றுக்கொண்ட அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

“திருகோணமலைக்கு நான் வந்திருந்தபோது, அங்கு மக்கள் என்னிடம் முன்வைத்த கோரிக்கைகள், நியாயமானதும் தீர்க்கக்கூடியனவும், தீர்க்க வேண்டியனவுமாகும்.

“நான் தற்போதைய அரசாங்கத்தில் பங்காளியாக இல்லாதபோதும், எனக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் மட்டுமல்லாது, அமைச்சர்களுடனும் தொடர்புகள் இருக்கின்றன. அந்த அணுகுமுறையின் ஊடாக, மக்கள் என்னிடம் முன்வைக்கும் கோரிக்கைகளைத் தீர்த்துவைக்க முயல்கிறேன். அதேபோன்று, உங்களுக்கான வேலைவாய்ப்புக் கோரிக்கைக்கும், உடனடியாகத் தீர்வுகான முடியாவிட்டாலும், என்னால் இயன்றவரை முயற்சி செய்வேன்.

“திருகோணமலையிலிருந்து நாடாளுமன்றத்துக்கும் மாகாணசபைக்கும் தமிழ் மக்களின் வாக்குகளால் போனவர்கள், மக்களை மறந்து செயற்படுகின்றனர். எதிர்காலத்தில் இதுமாதிரியான தவறுகளுக்கு இடமளிக்காதவகையில், இளைஞர், யுவதிகள் முன்வர வேண்டும்.

“40 வருடங்களாக திருமலை மக்கள் அரசியல் ரீதியாகப் பாரிய பின்னடைவைக் கண்டுவருகின்றார்கள். இந்த நிலைமையை மாற்றியமைக்க, இளைஞர், யுவதிகள் முன்வர வேண்டும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X