2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

தெடிகமுவ, அம்பலம, மலைகளும் படுக்கும்?

Kogilavani   / 2016 மே 23 , மு.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

புளத்கொஹுபிட்டிய, அம்பலம பிரதேசத்திலுள்ள பல இடங்களிலும் வீடுகளிலும் நிலம் மற்றும் சுவர்களில் வெடிப்புக் கோடுகள் விழுந்துள்ள நிலையில், அப்பிரதேசத்தைச் சேர்ந்த பலர், அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.

இதேவேளை, மண்சரிவு அபாயத்துக்கு இலக்காகியுள்ள ரணால, தெடிகமுவ மலையை அண்மித்த 13 குடும்பங்களையும் அப்பிரதேசத்திலிருந்து வெளியேற்ற, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அத்துடன், அரநாயக்க பிரதேசத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக, அம்பலம மலையும் நேற்றுச் சரிந்துள்ளது. இந்த அம்பலம மலையானது, அரநாயக்க சாமசர மலையின் மற்றுமொரு வளைவிலேயே அமைந்துள்ளது.

இந்த மண்சரிவு காரணமாக, அம்பலம மலையடிவாரத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக முகாமொன்றை அங்கிருந்து அகற்றியுள்ள செஞ்சிலுவைச் சங்கம், அதனை அண்மித்த பிரதேசமான திக்பிட்டியவில் அம்முகாமை அமைத்துள்ளது. இதேவேளை, சாமசர மலையிலும் தொடர்ந்து மண்சரிவு ஏற்படக்கூடும் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

நாட்டில் தொடர்ந்து நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, கொழும்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களில் ஏற்பட்டிருந்த வெள்ளப்பெருக்கின் நிலைமை, தற்போது படிப்படியாகக் குறைவடைந்து வருவதாக, நீர்ப்பாசனத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியளவில், நாகலகம்வீதி அகலப்பாதையின் நீர் மட்டம், 6 அடியாகக் குறைவடைந்துள்ளது என்றும் கொலன்னாவ மற்றும் கடுவெல பிரதேச செயலகப் பிரிவுகளில் நிரம்பியிருந்த வெள்ள நீரும், படிப்படியாகக் குறைவடைந்துள்ளது என்றும் அத்திணைக்களம் குறிப்பிட்டது.

எவ்வாறாயினும், இரத்தினபுரி, கேகாலை, மாத்தளை, நுவரெலியா, கண்டி, களுத்துறை மற்றும் பதுளை மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாயம், தொடர்ந்தும் நீடிப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.

இதேவேளை, களனி கங்கையின் நீர் மட்டமும், படிப்படியாகக் குறைவடைந்து வருவதாகக் கூறிய அனர்த்த முகாமைத்துவ நிலையம், கங்கையை அண்மித்த பகுதிகளிலுள்ள வெள்ள நீரின் மட்டம், படிப்படியாகக் குறைவடைந்து வருகின்ற போதிலும், முற்றாக நீர் வற்றிவிடவில்லை என்றும் கூறியது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .