2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நீதிமன்ற அவமதிப்பு: பட்டதாரிகளுக்குப் பிணை

A.P.Mathan   / 2017 மே 30 , மு.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலையில் நடைபெற்ற வேலையில்லாப் பட்டதாரிகளின் ஆர்ப்பாட்டத்தின்போது நீதிமன்றக் கட்டளையைக் கிழித்து எறிந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களுக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது. தடுப்பிலுள்ள வேலையில்லாப் பட்டதாரிகள் சார்பில், நேற்று திருகோணமலை நீதவான் நீதிமன்றில் ஆஜராகிய எம்.ஏ.சுமந்திரன், இவ்வழக்குத் தொடர்பில் தமிழ்மிரருக்குத் தெரிவிக்கையில், “நீதிமன்றுக்கு வெளியில் நடைபெற்ற சம்பவத்தைக் கேள்விக்குட்படுத்தும் நியாயாதிக்கம், நீதவான் நீதிமன்றுக்கு இல்லை. இதனடிப்படையில், கைதுசெய்யப்பட்ட மாணவர்களை விடுதலை செய்யவேண்டுமென மன்றில் கோரியிருந்தோம். 

“எமது கோரிக்கையை பதில் நீதவான் திருமதி ரத்நாயக்க, நீண்ட நேரம் ஆராய்ந்து பார்த்து, பட்டதாரி மாணவர்களுக்குப் பிணைவழங்கச் சம்மதித்தார். ஆனால், பொலிஸார் இதற்குச் சம்மதிக்கவில்லை. கைதுசெய்யப்பட்ட பிக்கு உட்பட நான்கு மாணவர்கள் மீதும் பாதை மறிப்பு, பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தமை, அரச உத்தியோகத்தர்களின் கடமையைச் செய்யவிடாமல் தடுத்தமை மற்றும் சட்டவிரோத ஒன்றுகூடல் என்ற நான்கு பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டிருந்தது.  

“ஆகையால், நீதிமன்ற அவமதிப்பு என்பதை நிராகரித்த பதில் நீதவான், ஏனைய குற்றச்சாட்டுகளைக் கருத்திற்கொண்டு, தலா 2 லட்சம் ரூபாய் சரீரப் பிணையில் செல்ல, மாணவர்களுக்கு அனுமதி வழங்கினார். ஆனாலும், பிக்கு மாணவருக்கு கொழும்பில் பிறிதொரு வழக்கு இருப்பதன் காரணமாக, அவருக்குப் பிணையில் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

“ஏனைய மூன்று தமிழ் மாணவர்களையும் எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி மன்றி ஆஜராகுமாறு நீதிமன்றம் பணித்தது. அதற்கிடையில் பொலிஸாரின் ஆய்வறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டுமெனவும் பதில் நீதவான், பொலிஸாருக்குக் கட்டளையிட்டார்” என்று தெரிவித்தார். 

நேற்றைய வழக்கில், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் சட்டத்தரணிகளான கேசவன் சஜந்தன், நுவான் போபகே, ரி.கிருஷாந்தன் ஆகியோர் ஆஜராகியிருந்தனர். இவர்களுடன் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராஜசிங்கமும் மன்றில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .