2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

நோய்கள் பரவும் அபாயம்

Editorial   / 2017 மே 29 , பி.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாரிய வெள்ள அனர்த்தத்தை அடுத்து, நீரால் பரவும் நோய்கள் தலைதூக்கும் சாத்தியங்கள் இருக்கின்ற போதிலும், அனர்த்தம் ஏற்பட்ட பகுதிகளில் அவ்வாறான தொற்றுநோய்கள் எவையும் இதுவரைப் பரவியதாக தகவல் கிடைக்கவில்லை என்று, சுகாதார சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறான நோய்கள் பரவாதிருக்கும் வகையிலான சகல முன்னேற்பாடுகளையும் மேற்கொள்ளுமாறு, பாதிக்கப்பட்ட பகுதிகளின் சுகாதார வைத்திய அதிகாரிகளுக்குப் பணிப்புரை வழங்கப்பட்டிருப்பதாக, சுகாதார சேவைகள் அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், வாந்திபேதி, வயிற்றுளைவு மற்றும் சரும வியாதிகள் துரிதமாகப் பரவும் வாய்ப்புகள் இருப்பதால், மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்கவேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

வெள்ளநீர், இன்னமும் பல பகுதிகளில் வடிந்தோடாமல் இருப்பதால், அப்பகுதிகளுக்கு மருத்துவ வசதிகளை வழங்குவதில் சிரமம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்த ஹர்ஷ டி சில்வா, வெள்ளம் வடிந்ததும் சகல கிணறுகளையும் சுத்திகரித்து, குளோரின் பவுடரைத் தெளிக்க பிரதேச செயலாளர் காரியாலயங்கள் நடவடிக்கை எடுக்குமெனவும் தெரிவித்தார்.

அத்துடன், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான மருத்துவ உதவிகள், மாவட்ட மற்றும் பிரதேச சுகாதார வைத்தியப் பணிப்பாளர்களின் அலுவலகங்கள் மூலமாக வழங்கப்படுவதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டுள்ள மக்களின் சுகாதார நிலைமையைப் பரிசோதிப்பதற்காக, பல விசேட வைத்தியக் குழுக்களை, சம்பந்தப்பட்ட பிரதேசங்களுக்கு சுகாதார அமைச்சு அனுப்பிவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (படம்: துஷித குமார டி சில்வா)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .