2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பன்னீரிடம் கடிதத்தை கையளித்தார் செந்தில்

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 21 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் கச்சதீவிலுள்ள புனித அந்தோனியார் ஆலயத்தில் ஆராதனை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அனுமதியளிக்கப்பட்ட கடிதத்தை ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான், தமிழ்நாட்டு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் கையளித்தார்.

இந்தக் கடிதத்தை ஜனாதிபதி, நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமானிடம் உத்தியோகபூர்வமாக கையளித்திருந்தார்.

கச்சதீவில் புதுப்பிக்கப்பட்ட புனித அந்தோனியார் தேவாலயத்தின் திறப்பு விழாவில், தமிழக மீனவர்கள் 100 பேர் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று, தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மறைந்த செல்வி ஜெயலலிதாவின் தோழி சசிகலா நடராஜன் கோரிக்கை விடுத்திருந்ததான செய்தி அண்மையில் வெளியாகியிருந்தது.

இந்நிலையிலேயே, இலங்கை அரசாங்கத்தின் அனுமதி கடிதத்தை, ஊவா மாகாண அமைச்சர், தமிழக முதல்வரிடம் கையளித்துள்ளார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே 1974ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், கச்சத்தீவானது, இலங்கைக்கு அளிக்கப்பட்டது. இதனை எதிர்த்து, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, கச்சதீவை இலங்கைக்கு ஒப்படைத்தது செல்லாது என்று கோரி, உச்ச நீதிமன்றத்தில், அவரது சார்பிலும் தமிழக அரசின் சார்பிலும் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

மேலும், கச்சதீவில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தை இலங்கை அரசே தன்னிச்சையாக புனரமைக்கப்போவதாக வெளியான தகவலையடுத்து, தமிழக மீனவர்களின் பங்களிப்பையும் ஏற்க மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்றும் முதல்வராக இருந்த ஜெயலலிதா, பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில், கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திறப்புவிழாவில், தமிழகத்தில் இருந்து 100 மீனவர்கள் கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கோரி, சசிகலாவினால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் எழுதியிருந்ததாகவும், அதனை இலங்கை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகம் தொண்டமான் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .