2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

’பேரினவாத பிக்குகள் நீதிபதிகளாக வரவேண்டியதில்லை’

Editorial   / 2017 ஜூலை 22 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம், ஏ.எச்.ஏ. ஹுஸைன்

“வடக்கு, கிழக்கிலே தமிழ் முஸ்லிம் சமூகம் ஒற்றுமைப்பட்டு வாழுகின்ற சந்தர்பங்களை நழுவ விடுவோமானால், நாம் நமக்குள் முரண்பட்டுக் கொள்கின்ற போது, எங்களுக்கு நீதி சொல்ல காவியுடை தரித்த பேரினவாத பிக்குகள் களத்தில் வந்து நீதிபதியாக தரிசனம் கொடுப்பார்கள். இது ஆபத்தானது” என, கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீரலி தெரிவித்தார்.

கிராமிய பொருளாதார அமைச்சின் நிதியொதுக்கீட்டுடன், ஏறாவூர் ஹிதாயத் நகர் மகளிர் 13 பேருக்கு, தையல் இயந்திரங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு, ஏறாவூர் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க பொது முகாமையாளர் எம்.எல். அப்துல் லத்தீப்  தலைமையில், ஹிதாயத் நகரில் நேற்று மாலை நடைபெற்றது.

அந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட பிரதியமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

“மீறாவோடையில் ஏற்கெனவே நீதிமன்றத்தால் தீர்க்கப்பட்ட விடயத்தைப் பூதாகாரமாக்கி, அந்தப் பிரதேசத்திலே இருக்கிறவர்கள் மட்டக்களப்பிலே இருக்கிற பௌத்த பிக்குவிடம் போய் மண்டியிட்டு நியாயம் கேட்கிற நடைமுறையை தமிழ் முஸ்லிம்கள் அங்கீகரிப்பார்களாயின் அது எதிர்காலத்தில் வடக்கு, கிழக்கிலே வாழ்கின்ற சிறுபான்மைச் சமூகங்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். அது சிறுபான்மைச் சமூகங்களுக்கு அழிவு தரும் ஆபத்தான அணுகுமுறையாகும்.

“பெரும்பான்மையால் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகம் இந்த விடயத்தில் தெளிவாக இருந்து கொண்டு தமிழ் - முஸ்லிம் உறவுக்கு அத்திபாரமிடவேண்டும்.

“இரண்டு சமூகமும் சேரவேண்டிய எத்தனையோ புள்ளிகள் இருக்கின்றன. அதனைப் பரிசீலனை செய்துகொள்ளவேண்டும்.

“இந்த பேரின பௌத்த மதவாதக் கும்பல்கள், அவர்கள் எப்பொழுதும் பெரும்பான்மை சமூகத்தின் இனக் காவலர்களாக சித்தரிக்கப்படுகின்றவர்கள் என்பதையும் நினைவிற் கொள்ளவேண்டும்.

“அதனால் சிறுபான்மையினராகிய நாம் மிகக் கவனமாக காய் நகர்த்த வேண்டும். அறிவுபூர்வமாக அணுகுமுறைகளைச் செய்ய வேண்டும்.

“இந்த நாட்டில் வாழும் சிறுபான்மைச் சமூகங்கள் இரண்டும் ஒன்று சேர்ந்து எமக்கு முன்னே எரியும் நெரிப்பாக எதிர்கொள்கின்ற இனவாதத்தை முறியடிப்பதற்கு அறிவுபூர்வமான ஆணித்தரமான வியூகம் வகுக்க வேண்டும்.

“ஒற்றுமைப்படுவதற்குப் பதிலாக இன்னமும் தங்களுக்குள் பிரிந்து நின்று செயற்பட்டால் அதனை வாய்ப்பாக வைத்துத்தான் அவர்கள் சிறுபான்மையினரைச் சீரழிப்பதற்கான மிக சூட்சுமமான திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

“தமிழ் - முஸ்லிம் இரண்டு சிறுபான்மையும் ஒற்றுமைப்பட்டு, இந்த நாட்டில் தங்களது எதிர்காலத்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று வியூகம் வகுக்காதவரை விடிவு இல்லை என்பதோடு, அழிவையும் எதிர்கொள்வார்கள் என்பதுதான் யதார்த்தமான ஆரூடம்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .