2024 மார்ச் 28, வியாழக்கிழமை

புதிய அரசியலமைப்பு பணிகள் மேயில் ஆரம்பம்

Gavitha   / 2016 மார்ச் 21 , மு.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

கெலும் பண்டார

அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அமைவாக, அரசியலமைப்பை உருவாக்கும் பணிகள், மே மாதத்தில் ஆரம்பிக்கப்படுமெனத் தெரிய வருகிறது.

நாடாளுமன்றத்திலுள்ள அனைத்து உறுப்பினர்களையும் அரசியலமைப்புப் பேரவைக்கு நியமிக்கும் குறித்த பிரேரணை, அண்மையில் நிறைவேற்றப்பட்டிருந்தது. கிடைக்கப்பெறும் தகவல்களின் அடிப்படையில், அரசியலமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகள், மே மாதத்தின் முதல் வாரத்தில் ஆரம்பிக்குமெனத் தெரியவருகிறது.

அதற்கு முன்னதாக, சிரேஷ்ட வழக்கறிஞர் லால் விஜேநாயக்கவினால் தலைமை தாங்கப்படும் அரசியலமைப்புச் சீர்திருத்தத்துக்கானசெயற்குழுவை, எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரியுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த விஜேநாயக்க, 'பொதுமக்களின் கருத்துகளை அறிவதற்காக 25 மாவட்டங்கள் அனைத்துக்கும் விஜயம் செய்த தனது குழு, பொதுமக்களிடமிருந்து தகவல்களைப் பெறுவதை, பெப்ரவரி 29ஆம் திகதி நிறைவு செய்தது' எனக்  குறிப்பிட்டார். அதன் பின்னர், மார்ச் மாதத்தில் கருத்தாடல்களின் ஈடுபட வேண்டிய நபர்கள் தொடர்பாகவும் அரசியல் கட்சிகள் உள்ளடங்கலாக அமைப்புகள் தொடர்பாகவும் பட்டியலொன்;றை, குறித்த செயற்குழு தயாரித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், மஹாநாயக்க தேரர்கள், கத்தோலிக்கப் பேராயர்கள் போன்ற சமயத் தலைவர்கள் ஆகியோருடன், இச்செயற்குழு பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது. அத்தோடு, அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பாக முதலமைச்சர்களின் கருத்துகளை அறிவதற்காக, அவர்களைச் சந்திக்கவும், இச்செயற்குழு திட்டமிடுகிறது. அரசியலமைப்பை உருவாக்கும் செயற்பாட்டை ஆரம்பிக்கும் பொருட்டு, இச்செயற்குழுவின் அறிக்கை, அடுத்த மாதம் சமர்பிக்கப்படுமென, விஜேநாயக்க தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X