2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘மத அடையாளத்துக்காக தேசிய இனமாக எம்மை வரையறுக்கவில்லை’

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 12 , மு.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

“இலங்கை முஸ்லிம்கள், தமிழைத் தாய் மொழியாகக் கொண்டதன் காரணம். இஸ்லாமிய தத்துவ ஞானங்களைப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தன்பால் ஈர்த்த ஒரு மொழியாக தமிழ் இருந்தமைதான். மாறாக வெறும் அரசியலுக்காக மத அடையாளத்துடன் தேசிய இனமாக எம்மை வரையறுக்கவில்லை என்பதையும் எடுத்துக் கூறக் கடமைப்பட்டிருக்கிறேன்” என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். 

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு, இலங்கை மன்றக் கல்லூரியில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) மாலை இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவத்தார். 

இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆய்வுக் கோவை மற்றும் மாநாட்டு மலர் என்பனவும் வெளியிடப்பட்டது. அத்துடன், இஸ்லாமிய தமிழ் இலக்கியத்துக்குப் பங்களிப்புச் செய்த பலர், இவ்விழாவில் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். 

அந்த நிகழ்வில் அவர் மேலும் தெரிவித்ததாவது, 

“அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலின் பின்னர் தீவிரவாதத்துக்கு எதிரான உலகப்போர் ஒன்று வல்லாதிக்க சக்திகளால் திட்டமிடப்பட்டு, இஸ்லாமியர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் தருணத்தில், அதன் மீதிப்பட்டாசுகள் இலங்கையிலும் வெடிக்கும் அபாயத்தை மேலாதிக்க சக்திகள் இலங்கை முஸ்லிம்கள் மீது திணிக்க முற்படுவதை புத்திஜீவிகள், இலக்கியவாதிகள் அனைவரும் ஏற்றுக் கொள்வர். இலங்கை முஸ்லிம்களாகிய நாம் இந் நாட்டையும் நம் தேச மக்களையும் ஈமானுக்கு ஒட்டிய விதத்தில் நேசிக்கிறோம்.  

பதுர்தீன் புலவரின் இலக்கிய ஆளுமையை தமிழ் இலக்கியப்பரப்பு அங்கிகரிப்பதில் நேர்ந்த முரண்பாடுகள், 1966 ஆம் ஆண்டில் இஸ்லாமியத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஒன்றை மருதமுனையில் நடாத்த வேண்டிய தேவையை உருவாக்கியது.  

இஸ்லாம் என்பதே சாந்தி எனும் மூலச் சொல்லில் இருந்து உருவானது. இறுதி இறைதூதர் முஹம்மத் முஸ்தபா (ஸல்) அவர்கள் இவ் அகிலத்தாருக்கு இறைவன் வழங்கிய அருட்கொடையாகும். சாந்தமும் அருளும் இணைவதால் சுவனத்தின் வாசம் கிட்டுமேயொழிய தீவிரவாதம் தலைதூக்காது” என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .