2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’யதார்த்தமாக தயாராகுங்கள்’

Yuganthini   / 2017 ஜூன் 12 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை இல்லாத ஏற்றுமதி வரப்பிரசாதம் மட்டுமன்றி, 2010ஆம் ஆண்டிலிருந்து இருந்த நிவாரண வரியின் கீழ் ஏற்றுமதி செய்யப்பட்ட ‘சாதாரண ஜி.எஸ்.பி’ வரப்பிரசாதம் ஆகிய இரண்டையும் இல்லாமல் செய்வது அண்மையில் இருக்கின்றது என்பதை மக்களுக்கு அரசாங்கம் தெளிவுபடுத்தி, அதற்கு யதார்த்தமாக முகங்கொடுப்பதற்கு தயாராக வேண்டும் என்று அரசாங்கத்துக்கு முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷ அறிவுரை வழங்கியுள்ளார்.   

“ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை முறைமையானது, தற்காலிகப் பொருளாதாரப் பெறுபேறாகும். தற்போது 4,035 அமெரிக்க டொலரை தனிநபர் வருமானமாகப் பெறும் இலக்குமட்டத்துக்கு அண்மையில் நாங்கள் இருப்பதால், எங்களுடைய ஆற்றலைப் பயன்படுத்திய, ஐரோப்பிய ஒன்றியத்தின் எவ்விதமான வரிச்சலுகையையும் பெற்றுக்கொள்ளாமல் ஏற்றுமதி செய்வதற்கு நாங்கள் தயாராக வேண்டும்” என்றும் அவர் கூறியுள்ளார்.   

“இலங்கைக்கு ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் பெற்றுக்கொடுத்தல்” என்ற தலைப்பில் ஊடகங்களுக்கு நேற்று (11) வெளியிட்டிருந்த ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.   

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,   
“ஐரோப்பிய ஒன்றியம், 2017 மே 19ஆம் திகதியிலிருந்து, ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை, இலங்கைக்கு மீண்டும் பெற்றுகொடுத்துள்ளது.   

“ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையானது, ஐரோப்பிய சங்கத்தால், மூன்று முறைமைகளின் கீழே, அந்தச் சலுகை வழங்கப்படுகின்றது.   

“தனிநபர் வருமானம் 1,025 அமெரிக்க டொலருக்கு குறைந்த வருமானம் கொண்ட, ஏழ்மையான நாடுகளுக்கு வழங்கப்படுகின்ற ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையாகும். அந்தச் சலுகையின் ஊடாக, எவ்விதமான வரிகளும் இன்றி ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் பொருட்களை ஏற்றுமதி செய்யலாம்.   

“தனிநபர் வருமானம் 1,025 டொலருக்கும் 4,035 டொலருக்கும் இடைப்பட்டதாக இருக்கும், குறைந்த -மத்திய வருமானம் கொண்ட நாடுகளுக்கு ‘சாதாரண ஜி.எஸ்.பி’ முறைமையின் கீழ் நிவாரண வரியைச் செலுத்தி, ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் பொருட்களை ஏற்றமதி செய்யமுடியும்.   

“மேலே குறிப்பிட்ட இரண்டு முறைமைகள் காரணமாக, பெரும்பாலான நாடுகளில் ஏற்றுமதிக் கைத்தொழிலை கட்டியெழுப்புவதற்கு இயலுமாக இருந்தது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.   

“ஐரோப்பிய ஒன்றியத்தின் மூன்றாவது முறைமையானது, கீழ் -மத்திய வருமானத்தைக் கொண்ட நாடுகள், ஏழ்மையான நாடுகள், எவ்விதமான வரிகளையும் செலுத்தாது, ஐரோப்பிய நாடுகளுக்குள் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான வரப்பிரசாதமாகும்.   

“எனினும், அதற்காக பெரும் இழப்பீடுகளை வழங்க வேண்டும். ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின், குறிப்பிட்ட சர்வதேச உடன்படிக்கைகள் 27ஐ நிறைவேற்றிக்கொண்டு, அவற்றைப் பின்பற்றுவது தொடர்பில், ஐரோப்பிய ஒன்றியத்தின், அரசியல் கண்காணிப்பின் கீழ் செயற்பட வேண்டும். ஆகையால், இலங்கை உள்ளிட்ட ஒன்பது நாடுகள் மட்டுமே ஜி.எஸ்.பி வரிச்சலுகையை பெற்றுக்கொண்டுள்ளன.   

“ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை பெற்றுக்கொள்வதற்கான நிபந்தனையின் கீழ், அந்த நாட்டின் அரசியல், சட்டம் மற்றும் நிறுவனக் கட்டமைப்பு கடுமையான பாதிப்பை ஏற்படுத்துபவதாகவே இருக்கும்.   

“ஜி.எஸ்.பி.பிளஸ் சலுகையை முழுமையான அனுபவிக்க வேண்டுமாயின், எங்களுடைய இராணுவத்துக்கு எதிராக யுத்த விசாரணையை மேற்கொள்வது மற்றும் கூடுதலாக அதிகாரத்தை பகிர்ந்தளித்தல் ஆகிய விடயங்கள் உள்ளிட்ட நிபந்தனைகளுக்கு, நாம் இணக்கம் தெரிவிக்காமையால், ஜி.எஸ்.பி.பிளஸ் சலுகை 2010ஆம் ஆண்டு எங்களுக்கு கிடைக்காமல் போனது.   

“2010ஆம் ஆண்டு, ஜி.எஸ்.பிளஸ் சலுகை கிடைக்காமையை அடுத்து, ஐரோப்பிய சங்கத்தில், நாங்கள், ‘சாதாரண ஜி.எஸ்.பி’ முறைமைக்குள் விழுந்துவிட்டோம். ஆகையால், எங்களுடைய பொருட்களை ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் எற்றுமதி செய்யும்போது, நிவாரண வரியைச் செலுத்தவேண்டும்.   

“ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை, அண்மையில் மீண்டும் கிடைத்ததையடுத்து, அதன் காரணமாக மீன்பிடி உற்பத்தி, ஆடை மற்றும் ஏனைய கைத்தொழில் உற்பத்திப் பொருட்களை ஐரோப்பிய சங்கத்துக்குள் ஏற்றுமதி செய்வது பேரளவு அதிகரித்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.   

“ஐரோப்பிய சங்கத்துக்கு வரி அல்லாத ஏற்றுமதியின் ஊடாக, ஆகக்கூடுதலான முதலீடுகள் இலங்கையை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எங்களுடைய முழு எதிர்கால சந்ததியினரும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை முறையின் கீழ் கட்டியெழுப்பப்படும் என்று அரசாங்கம் தெரிவித்திருந்தது.   

“என்றாலும், ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை முறைமையானது தற்காலிகப் பொருளாதாரப் பெறுபேறாகும்.   

“ஐரோப்பிய நாடாளுமன்றத்தில், 2012ஆம் ஆண்டு ஒக்டோபர் 25ஆம் திகதியன்று ஏற்படுத்தப்பட்ட விதிமுறைகளின் கீழான சட்டத்தின் கீழே, ஐரோப்பிய ஒன்றியத்தின் சகல ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை முறையமையானது நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.   

“தனி நபர் வருமானமாக 4,035 அமெரிக்க டொலரை பெறுகின்ற, குறைந்த -நடுத்தர நடுகள் மட்டுமே, ஜி.எஸ்.பி.பிளஸை பெற்றுக்கொள்ள முடியும்.   

“4,035 அமெரிக்க டொலருக்கு மேல், தனிநபர் வருமானத்தைப் பெறுகின்ற நாடுகள், உயர்ந்த-நடுத்தர வருமானம் பெறுகின்ற நாடுகள் என்பதுடன், அவ்வாறான நாடுகளுக்கு, ஐரோப்பிய ஒன்றியத்தால், எவ்விதமான வரிச்சலுகைகளும் கிடைக்காது.   

“அந்த நாடுகள்,தங்களுடைய பொருட்களை ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் ஏற்றுமதி செய்யும்போது, முழுயான வரியைச் செலுத்த வேண்டும்.   

“இலங்கையைப் பொறுத்தவரையில் தனி நபர் வருமானம் 2015ஆம் ஆண்டு 3,843 அமெரிக்க டொலராக இருந்தது. 2016ஆம் ஆண்டு 3,835 அமெரிக்க டொலராக இருந்தது. அதனடிப்படையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் சகல ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை இல்லாமல்; செய்கின்ற தனிநபர் வருமானம் 4,035 அமெரிக்க டொலரை, அடைவதற்கான   இலக்குமட்டத்தை அடைவதற்கு இன்னும் 200 அமெரிக்க டொலரிலேயே நிற்கின்றோம்.   

“என்னுடைய ஒன்பது வருட ஆட்சியில், இலங்கையில், தனிநபர் ஒரு வருடத்துக்கு, 286 அமெரிக்க டொலர் என்ற பெறுமதியில் அதிகரித்திருந்தது. அப்படியாயின், தனிநபர் வருமானமான 4,035 அமெரிக்க டொலர் என்பதை நாங்கள் எவ்வாறு அண்மித்திருந்தோம் என்பதைச் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.   

“இலங்கையானது 4,035 இலக்கு மட்டத்தை எட்டுகின்ற வேளையில், அந்த அதிகரிப்பு நிலையானதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக இரண்டு வருடங்கள், கண்காணிப்புக் காலத்தின் பின்னர், மற்றுமொரு வருடம் நிவாரணக் காலத்தை வழங்கி, அதன் பின்னர் இலங்கையானது எவ்வகையான ஜி.எஸ்.பி. பிளஸ் முறைமையின் கீழே சலுகையை பெறுவதற்குத் தகுதியான என்பதை ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்தது.   

“ஜி.எஸ்.பி. பிளஸ் பெறுகின்ற நாடுகளில் ஒன்றான ஜோர்ஜியா, 4,035 இலக்குமட்டத்தை அடைந்ததன் பின்னர், ஐரோப்பிய ஒன்றியத்தால், 2017 ஜனவரி 01ஆம் திகதிமுதல் அந்த நாடானது, ஜி.எஸ்.பி பிளஸ் முறைமையின் கீழ், ‘சாதாரண ஜி.எஸ்.பி’ முறைமையின் கீழ் சலுகை கிடைப்பதற்கு தகுதியானது என ஐரோப்பிய ஆணைக்குழுவால் 2015 ஓகஸ்ட் 28ஆம் திகதியன்று பிரதி கட்டளைகளின் ஊடாக அறிவிக்கப்பட்டது.   

“ஏழ்மையான நாடுகள், வரிகள் இன்றி, ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் பொருட்களை ஏற்றுமதி செய்து, கொஞ்சம் வளர்ச்சியடைந்ததன் பின்னர், நிவாரண வரி செலுத்தி, ஒருவகையான இலக்குமட்டத்துக்கு பின்னர் முழுமையான வரியைச் செலுத்தும் வகையில் மாற்றுவதற்கே, ஜி.எஸ்.பி வரிச்சலுகை முறையானது ஐரோப்பிய ஒன்றியத்தால், ஆரம்பத்திலிருந்து திட்டமிடப்பட்டிருந்தது.   

“ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி வரிச்சலுகை முறைமையின் கீழ், முழுமையாக வரி இல்லாமல், இல்லையேல் நிவாரண வரியை செலுத்தி, ஏற்றுமதி வரப்பிரசாத்தை தொடர்ந்து ஒரு நாட்டுக்கு கிடைக்கும்.   

“பொருளாதார மேம்பாட்டுடன், அபிவிருத்தி அடைந்துவருகின்ற நாடுகளுக்கு ஐரோப்பிய சங்கத்தால் கிடைக்கின் ஜி.எஸ்.பி வரிச்சலுகை, இல்லாமல் போய்விடும் என்பதை புரிந்துகொள்வது முக்கியமானதாகும்.   

“சில சந்தர்ப்பங்களில் வேறு காரணங்களுக்காக இந்த வரிச்சலுகை இரத்துச் செய்யப்படும். 2005ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவால், அந்நாட்டுக்குள், அதாவது ஆடைகளுக்கான ஒதுக்கீடு முறை (கோட்டா) இல்லாமல்; செய்யப்பட்டது. இலங்கை போன்ற நாடுகள் அமெரிக்க சந்தைக்குள் நுழைவது, இவ்வாறான கோட்டை முறைமையின் கீழே சார்ந்து இருக்கின்றன.   

“எனினும், அந்தக் கைகோர்ப்பு இல்லாமல் செய்யப்பட்டதன் பின்னர், எங்களுடைய ஆடை ஏற்றுமதிக்கு, அமெரிக்காவானது மிகப்பெரிய சந்தையாகியது. அவ்வாறான சவால்கள் வரும்போது, அதற்கு முகங்கொடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கவேண்டும்.   

“குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாமல், சுற்றுச்சூழலை உயர்ரகத்தில் பராமரித்தல், தொழிற்சாலைகளில் வசதிகளை “உயர்மட்டத்தில் வைத்திருந்தல், மேற்குலக நாடுகளுக்கு விற்பனை செய்யக்கூடிய வகையில், முற்போக்கு அறிகுறிகள் எங்களுடைய நிறுவனங்கள் இருக்கவேண்டும். அபிவிருத்தி அடைந்த நாடுகளின் வாடிக்கையாளர்கள், இலங்கையிலிருந்து வருவது, பாதிப்படையாத உற்பத்தி செய்யப்பட்ட சீர்கேடற்ற பொருள் என்பதில் நம்பிக்கை கொள்ளவேண்டும்.   

“நாங்கள், தற்போது 4,035 அமெரிக்க டொலரை தனிநபர் வருமானமாக பெறும் இலக்குமட்டத்துக்கு அண்மையில் இருப்பதால், நாங்கள் எங்களுடைய ஆற்றலை பயன்படுத்திய, ஐரோப்பிய ஒன்றியத்தின் எவ்விதமான வரிச்சலுகையை பெற்றுக்கொள்ளாமல் ஏற்றுமதி செய்வதற்கு தயாராகவேண்டும்.   

“எதிர்காலத்தில் எங்களுடைய பொருட்கள், ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் ஏற்றுமதி செய்யப்படுகின்றபோது, முழுமையான ஏற்றுமதி வரியின் கீழ், ஏற்றுமதி செய்யப்படவேண்டும்.

நாங்கள், ஜி.எஸ்.பி வரிச்சலுகையை பெற்றுக்கொள்ளாமல், நிவாரண வரியின் கீழ் சாதாரண ஜி.எஸ்.பி வரிச்சலுகையின் கீழ் இருந்தோமேயானால், 4,035 அமெரிக்க டொலர், இலக்கு மட்டத்துடன் கிடைக்கின்ற புதிய சூழ்நிலைக்கு முகம்கொடுப்பது எளிதாக இருக்கும்.   

“ஜி.எஸ்.பி. வரிச்சலுகை மீண்டும் கிடைத்துள்ளது என்பதனால், 4,035 அமெரிக்க டொலர் இலக்கு மட்டத்தை தாண்டிச் செல்வதுடன், முழுமையான வரி இல்லாத நிலைமையிலிருந்து முழுமையான வரியை செலுத்த வேண்டிய நிலைமைக்கு ஒரே தடவையில் மாறுவதற்கான நிலைமை எங்களுக்கு ஏற்படும்.   

“அரசாங்கம் தற்போது செய்யவேண்டியது என்னவெனில், நேற்றுமுன்தினம் கிடைத்த ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை இல்லாத ஏற்றுமதி வரபிரசாதம் மட்டுமன்றி, 2010ஆம் ஆண்டிலிருந்து இருந்த நிவாரண வரியின் கீழ் ஏற்றுமதி செய்யப்பட்ட ‘சாதாரண ஜி.எஸ்.பி’ வரப்பிரசாதம் ஆகிய இரண்டையும் இல்லாமல் செய்வது அண்மையில் இருக்கின்றது என்பதை அரசாங்கம், மக்களுக்கு தெளிவுபடுத்தி அதற்கு, யதார்த்தமாக முகங்கொடுப்பதற்கு தயாராக வேண்டும்.   

“ஜி.எஸ்.பி பிளஸ் தொடர்பில் யதார்த்தமின்றி, எதிர்பார்ப்பை மக்களிடத்தில் ஏற்படுத்துவது எவ்விதமான பயனையும் தராது. ஐரோப்பிய ஒன்றியத்தின் எவ்விதமான வரிச்சலுகையும் இன்றி, எதிர்காலத்துக்கு தயார்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் இருக்கவேண்டும். புதிய தயாரிப்புகளை வெளியிடுதல், புதிய சந்தைகளை தேடிக்கொள்ளுதல், தொழிற்சாலைகளை நவீனமயப்படுத்துவதற்காக, குறைந்த வட்டியில் கடன் பெற்றுக்கொடுத்தல், வர்த்தக விரிவாக்கத்துக்கு வரி நிவாரணம் பெற்றுக்கொண்டுத்தல், தொழிலாளர்களின் தொழில் திறனை மேம்படுத்தல் இந்தப் பரிமாற்றத்தை வெற்றி கொள்வதற்கு தேவையான நடவடிக்கையாகும்.   

“அரசாங்கம் இவை தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்” என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .