2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

வடபகுதி தமிழ் மக்களுக்காக வீதியிறங்க பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தயார்

Super User   / 2010 மே 26 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடபகுதி தமிழ் மக்களின் உரிமைகள் மற்றும் அம்மக்களின் சுதந்திரமான நடமாட்டத்துக்கு வலிவகுக்குமாறு வலியுறுத்தி வீதியோர ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபடப்போவதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்தது. வவுனியா மற்றும் ஏனைய இடங்களில் ஒன்றுகூடியே மேற்படி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக குறித்த மாணவர் ஒன்றியத்தின் தலைவர் உதுல் பிரேமரத்ன குறிப்பிட்டார். 
 
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இதனைக் கூறினார். அங்கு உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது :- 
 
யுத்தம் முடிவடைந்து விட்டதாக அரசாங்கம் அறிவித்து ஒருவருடம் ஆகிவிட்ட நிலையிலும் காணாமல் போனோர் மற்றும் கடத்தப்பட்டோர் தொடர்பில் அரசாங்கம் இதுவரையில் எதுவித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. இவை தொடர்பான தகவல்களை வெளிக்கொணர்வதில் எங்களுக்கு அச்சம் இல்லை. அச்சப்படுமளவிற்கு தாம் அரசியலில் ஈடுபடவில்லை.
 
காணாமல் போனோரை கண்டுபிடிப்பதில் தொடர்ந்து இவ்வாறான முயற்சிகளை மேற்கொள்வோம். எக்காரணம் கொண்டும் இதிலிருந்து பின்வாங்க மாட்டோம்.இலங்கையில் வெடித்துள்ள தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணாமலும் தமிழ் மக்கள் சமவுரிமையைப் பெற்றுக் கொடுக்காமலும் அரசு செயற்பட்டு வருகின்றது. 
 
அத்துடன் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு நிலையங்களில் புனர்வாழ்வளிக்கப்படுவதாக அரசாங்கம் தெரிவித்து வருகின்றது. ஆனாலும் அங்கு சிரட்டைகளில் மோதிரம் செய்வதற்கே பழக்கப்படுகின்றனர். இதுவா புனர்வாழ்வு என்றும் உதுல் பிரேமரத்ன கேள்வி எழுப்பினார்.
 
இந்த செய்தியாளர் மாநாட்டில் காணாமல் போனோர் மற்றும் கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள் கலந்து கொண்டதுடன் காணாமல் போனோரின் புகைப்படங்களையும் தாங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X