2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

'வீரவசனங்களுக்கு இடமில்லை'

Niroshini   / 2016 ஜூலை 11 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொருளாதார வர்த்தக மையம் வவுனியா மாவட்டத்துக்கு அரசாங்கம் வழங்குகின்ற விடயத்தில் தனிப்பட்ட அரசியலுக்கோ கட்சி பேதத்துக்கோ பிரதேசவாதத்துக்கோ கௌரவப் பிரச்சினைகளுக்கோ அல்லது வீரவசனங்களுக்கோ இடமில்லை என தமிழ் ஈழ விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அவ்வியக்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

பாரிய சர்ச்சையை உருவாக்கியிருக்கும் இந்த வர்த்தக மையம் விடயத்தின் பின்னணியை புரிந்து கொள்வது அவசியமாகிறது.

பாரிய அபிவிருத்தி திட்டங்கள் அமுல்படுத்தப்படுகின்ற பொழுது எமது பிரதேச மக்களுடைய வாழ்க்கைத் தரத்தையும் அபிவிருத்தியையும் வளப்படுத்துகின்ற திட்டங்களை அவதானமாக கையாள்வது தமிழ்த் தலைமைகளின் அவசியமாகும்.

முதலாவதாக இதன் பின்னணி என்னென்று பார்க்கும் போது இவ் வேலைத்திட்டம் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இடவசதி மற்றும் நிதிவசதி இல்லாத காரணத்தினால் பல வருடங்கள் பிற்போடப்பட்டு வந்த விடயம் தற்போது கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் ரூபாய் இருநூறு கோடி நிதி உதவியோடு முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம், அடுத்த கட்டமாக இட வசதி கோரப்பட்டுள்ள சூழ்நிலையில் ஏற்கெனவே கருத்திற் கொள்ளப்பட்ட ஓமந்தையும் புதிதாக அடையாளம் காணப்பட்ட தாண்டிக்குளம் பிரதேசமும் ஒப்பிடப்பட்டு இடச் சொந்தக்காரரை தேடியபோது, ஓமந்தைக் காணி தனியாருக்குச் சொந்தமானதும் தாண்டிக்குளம் காணி விவசாயப் பண்ணைக்குச் சொந்தமான மாகாண சபை அதிகாரத்துக்கு உட்பட்டதாகவும் காணப்பட்டது.

தமிழ் மக்கள் இன்னும் முழுமையான முறையில் மீள்குடியேற்றம் செய்யப்படாத நிலையில் எவ்வகையான காணி சுவீகரிப்புக்கும் இடமளிக்க முடியாது என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாகாண சபையின் கூற்றாக இருக்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சுவீகரிப்புச் சட்டத்தின் கீழ் காணி சுவீகரிப்புச் செய்ய சில மாதங்களாகும். ஆனால் நிதியொதுக்கீட்டில் இருக்கும் பாரிய நெருக்கடி என்னவென்றால் இவ்வருட இறுதிக்குள் வேலைத்திட்டம் தொடங்கப்பட்டு குறைந்த பட்சம் இருநூறு கோடி ரூபாயில் இருநூறு மில்லியனாவது செலவு செய்யப்படவேண்டும். இல்லையேல் நிதி மீளப்பெற்றுக் கொள்ளப்படும்.

இந்த சூழலில் தனியார் பஸ் நிலையம் ஒன்று கட்டப்பட்டு அதன் அருகில் அமைந்துள்ள பாவனைக்கு உட்படுத்தப்படாத வடமாகாண சபையின் அதிகாரத்துக்கு உட்பட்ட விவசாயத் திணைக்களத்துக்கு சொந்தமான தாண்டிக்குளம் பகுதி காணி அடையாளப்படுத்தப்பட்டது.

இவற்றை பார்வையிட்ட மத்திய அமைச்சரும் அதிகாரிகளும் தாண்டிக்குளத்தை தீர்மானித்தனர். இதற்கு பல காரணங்களும் உள்ளன.

பொருளாதார நிலையம் நகரத்தை அண்டிய பகுதிகளில் அமைவது அவசியமானது. போக்குவரத்து, வங்கிகள், பாதுகாப்பு, தங்குமிட வசதிகள் என்பவற்றையும் கருத்திற்கொண்டே அமைவிடம் தீர்மானிக்கப்படுகிறது. இதில் இரு மார்க்க போக்குவரத்து அமையப்பெற்ற இடம் தாண்டிக்குளம். இதன் பிரகாரம் தாண்டிக்குளம் வவுனியா நகரத்தில் இருந்து 02 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. ஓமந்தையோ 12 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது.

உள்ளூர், வெளியூர் விவசாயிகள், உற்பத்தியாளர்கள், வர்த்தகர்கள் மட்டுமன்றி வெளிப்பிரதேசத்தைச் சேர்ந்த நுகர்வோர் கூட இலகுவாக வந்து போகக்கூடிய இடமாக தாண்டிக்குளம் உள்ளது.

இந்தக் காணி மாகாண சபையினால் உடனடியாக வழங்கப்பட கூடியது. எனவே, உடனடியாக நிதியைப் பாவனைக்கு உட்படுத்த முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

“அடுத்ததாக பாரிய முதலீட்டில் ஆரம்பிக்கப்படும் இந்த வேலைத்திட்டம் வெற்றியளிக்க வேண்டும். இந்தப் பொருளாதார மையத்தை பலரும் அணுகுதல், பாவனைக்கு உட்படுத்தல் தான் இதன் வெற்றியை உறுதி செய்யும். இல்லையேல் பல்வேறுபட்ட விமர்சனங்களுக்கு அமைச்சும் அதிகார சபையும் உள்ளாக நேரிடும். மத்தள விமான நிலையம் இதற்கு உதாரணமாகும்.

ஓமந்தை நகரிலே ஏற்கெனவே அமைக்கப்பட்ட பாற்பண்ணை மற்றும் உழவர் சந்தை போன்றவை பாவனை அற்று புதர்மண்டிக் கிடப்பதும் மத்திய அரசாங்க அதிகாரிகளுக்கு அச்சத்தை விளைவித்தன.

மேலாக வவுனியா பிரதேசத்தை சேர்ந்த நாடாளுமன்ற, மாகாண மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட வர்த்தகர்கள் பொது அமைப்புக்கள் விவசாய சங்கங்கள் தாண்டிக்குளத்திற்கான தமது விருப்பத்தை குறித்த அமைச்சருக்கு தெரிவித்தமையும் ஒரு காரணமாகும்.

மிக முக்கியமாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் இத்திட்டத்துக்கான வரைமுறைகளைக் கருத்திற் கொண்டால் தாண்டிக்குளம் தெரிவுக்கு ஏற்றதாகிறது. குறிப்பாக நிதி வழங்கும் அமைச்சு தமது நிதியினால் உருவாக்கப்படும் திட்டம் விரிவான பலனை கொடுக்க வேண்டும். மற்றும் எதிர்கால விமர்சனங்களைத் தவிர்க்க முயல்வதும் இயல்பானதே. இதன் பிரகாரம் மத்திய அமைச்சர் தாண்டிக்குளத்தைத் தேர்வு செய்திருந்தார்.

இப்பிரச்சனை எல்லாவற்றுக்கும் மகுடம் சூட்டுவதாக வடமாகாண சபையினால் 24 உறுப்பினர்கள் எதிர்க்கட்சி உட்பட தாண்டிக்குளத்தை தெரிவு செய்து அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர் அனுமதியோடு தவிசாளர் ஊடாக மத்திய அமைச்சருக்கு கடிதமூலம் தெரிவிக்கப்பட்டது.

மேற்கூறப்பட்ட காரணங்களை கருத்திற்கொண்டும் இருநூறு கோடி ரூபாய் நிதியை எமது மக்களுக்கு பெற்றுக்கொடுக்கவும் இந்த வேலைத்திட்டம் பாரிய வெற்றியையும் பலனையும் தமிழ் மக்களுக்கு பெற்றுக் தரவேண்டும் என்ற நோக்கோடு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமைக் குழுவினர் நிபுணர்களின் பல்வேறுபட்ட கருத்துக்களையும் பெற்றுக்கொண்டு தாண்டிக்குளம் சிறப்பான இடமென்று தீர்மானம் எடுத்தனர். இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்கும் முதலமைச்சருக்கும் எழுத்துமூலம் தெரிவிக்கப்பட்டது. கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவரின் காரியாலயத்தில் நடத்தப்பட்ட கூட்டத்தில் தாண்டிக் குளத்துக்கே பலரும் ஆதரவு தெரிவித்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

எது எவ்வாறாக இருப்பினும் வவுனியா மாவட்டத்துக்கான இந்த வேலைத்திட்டத்தினை மத்திய அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற போது எதிர்ப்புத் தெரிவித்தோ சர்ச்சைகளைக் கிளப்பியோ நிதியை திருப்பி அனுப்பாமல் மக்களுக்கான அந்தத் திட்டத்தை வரவேற்று விரைவாக நடாத்தி முடிப்பதே சாலச் சிறந்தது” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .