2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

இலங்கைப் பல்கலைக்கழகங்களில் கல்வி பயில 100 வெளிநாட்டு மாணவர்களுக்கு புலமைப்பரிசில்

Super User   / 2010 ஒக்டோபர் 20 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆர்.சேதுராமன்)

அடுத்த வருடம் முதல் இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு மாணவர்களுக்கும் அனுமதி வழங்கப்படவுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு மாணவர்கள் 100 பேருக்கு இலங்கைப் பல்கலைக்கழகங்களில் கற்பதற்காக புலமைப் பரிசில் வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.
 

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

"இலங்கை மாணவர்களுக்கு இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, கியூபா, ஜப்பான், நியூஸிலாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் புலமைப் பரிசில்களை வழங்குகின்றன.  ஆனால் அந்நாட்டவர்களுக்கு  இலங்கை இத்தகைய வாய்ப்புகள் எதனையும் வழங்கவில்லை.

எனவே அடுத்த வருடம் முதல், இலங்கைப் பல்கலைக் கழகங்களில் கல்வி கற்பதற்கு 100 வெளிநாட்டு மாணவர்களுக்கு புலமைப் பரிசில்  வழங்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தீர்மானித்துள்ளார்.


இம்மாணவர்கள் இங்கு கல்வி கற்கும் காலத்தில் அவர்களுக்கான செலவுத் தொகையாக மாதாந்தம் சுமார் 30 ஆயிரம் ரூபாவும் வழங்கப்படும். அத்துடன் மேலும் 200-300 வெளிநாட்டு மாணவர்கள் இலங்கை பல்கலைக்கழகங்களில் கட்டணம் செலுத்தி கல்வி கற்பதற்கான வாய்ப்பு வழங்கப்படும்.


இலவசக் கல்விக்கு பாதிப்பு ஏற்படாத விதத்தில் சர்வதேச பல்கலைக்கழகங்களும் இலங்கையில் நிறுவப்படும். அரச பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி கிடைக்காத,  வெளிநாடுகளுக்குச் சென்று கல்வி கற்கவும் வசதியில்லாத மாணவர்கள் இதன் மூலம் உயர்கல்வியைத் தொடரமுடியும்.


இலங்கையிலிருந்து வருடந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பல்கலைக்கழக கல்விக்காக வெளிநாடு செல்கின்றனர். அவர்கள் லட்சக்கணக்கான ரூபா பணத்தையும் எடுத்துச்செல்கின்றனர். இலங்கையில் தனியார் பல்கலைக்கழகங்கள் குறைந்த செலவில் அவர்கள் உயர்கல்வியை மேற்கொள்ள முடியும்.

சர்வதேச பல்கலைக்கழகங்களுடனான பரிமாற்றங்கள் மூலம் இலங்கைப் பல்கலைக்கழகங்களும் நன்மையடைய முடியும்' என்றார்.

வடக்கு கிழக்கிலுள்ள பல்கலைக்கழகங்கள் குறித்து அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க கூறுகையில்,
'யாழ் பல்கலைக்கழக அபிவிருத்திக்கு இந்தியா உதவியளிக்க முன்வந்துள்ளது. தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு குவைத் அரசாங்கம் உதவியளிக்க முன்வந்துள்ளது. கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு அத்தகைய உதவி கிடைக்கவில்லை. எனவே ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் அப்பல்கலைக்கழகத்தை நாம் அபிவிருத்தி செய்யத்திட்டமிட்டுள்ளோம்.

யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு தங்குமிட பிரச்சினை உள்ளது. கடந்த காலங்களில் 1000-1500 ரூபா மாத வாடகையில் வீடுகளின் அறைகளில் மாணவர்கள் தங்கியிருந்தனர். சிலர் இலவசமாகவும் தங்கியிருந்தனர். ஆனால், தற்போது யாழ்ப்பாணத்திற்கு அதிக எண்ணிக்கையானோர் சென்று வருவதால் அறைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டியுள்ளது' என்றார்.
 

உயர்கல்வி  பிரதியமைச்சர் நந்திமித்ர ஏக்கநாயக்க, உயர்கல்வி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுனில் ஜயந்த நவரட்ண ஆகியோரும் இச்செய்தியாளர் சந்திப்பில் பங்குபற்றினர்.

(Pix by: Samantha Perera)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X