2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சிறுபராயக் குற்றங்களுக்கு 117 வருட தண்டனை பெற்ற நபர்

Super User   / 2010 ஒக்டோபர் 24 , பி.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுசித ஆர்.பெர்னாண்டோ)

 16 வயதுக்குட்பட்ட காலத்தில் செய்த சிறு குற்றங்களுக்கு அதிகாரிகளின் தவறினால் 117 கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட  ஒருவர் தனக்கு இழைக்கப்பட்ட அநீக்கு எதிராக உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஆர்.ஏ. ஜயம்பதி பெரேரா எனும் 46 வயதான மேற்படி நபர் ஏற்கெனவே 24 வருடகால சிறைத்தண்டனை அனுபவித்துள்ளதாக தனது மனுவில் தெரிவித்துள்ளார்.


சிறுபராயத்தில் தான் செய்யாத சில குற்றங்களையும் செய்ததாக ஒப்புக்கொள்ளுமாறு பொலிஸார் நிர்ப்பந்தித்தாக அவர் கூறியுள்ளார்.
 

பல்வேறு நீதிவான்களும் தீர்ப்புகளின்போது அந்நபர் செய்ததாக கூறப்படும் குற்றங்கள் புரியப்பட்ட நாளில் அவரின் வயது என்ன என்பதை கருத்திற்கொள்வதா, அல்லது தீர்ப்பு வழங்கப்படும் நாளில் அவரின் வயதை கருத்திற்கொள்வதா என்பதில் தடுமாறினர். இறுதியில் அந்நபர் சமகாலத்தில் அனுபவிக்க வேண்டிய பல தண்டனைகளை, ஒன்றன்பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் என சிறைச்சாலை அதிகாரிகள் அறிவித்தனர்.


ஜயம்பதி பெரேராவின் சார்பாக மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான சட்டத்தரணிகள் எனும் அமைப்பினர் தாக்கல் செய்த மனுவில் பல நீதவான்கள் அந்நபரின் வயதை கருத்திற்கொள்ளாமல் தண்டனைகளை வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். அந்நபர் 12 வயதில் செய்ததாக கூறப்படும் குற்றமொன்றுக்கு நீதவான் ஒருவர் 5 வருடசாலை சிறைத்தண்டனை விதித்தாக அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.
 

14.05.1964 இல் பிறந்த ஜயம்பதி, தனது குடிகாரத் தந்தையினால் பாதிக்கப்பட்டவர். ஜயம்பதியும் அவரின் தாயும் உணவைக் கூட உண்ணவிடாமல் அவரின் தந்தை அடிக்கடி சண்டையிடுவது வழக்கமாக இருந்ததுள்ளது.


ஜயம்பதி படிப்பில் கெட்டிக்காரராக இருந்தபோதிலும் அவரின் தந்தை புத்தகங்களையும் பாடசாலைப் பையையும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்கிரையாக்கினார். பின்னர் அவரின் தாய் தொழிலாளியாக பணியாற்றத் தொடங்க, ஜயம்பதி பாடசாலையிலிருந்து திரும்பியபின் தனது தாய் வீட்டிற்கு வந்து சமைக்கும் வரை பசியிலிருக்க வேண்டியிருந்தது.


அதனால் அயலிலிருந்த மரக்கறிகளை களவாக பிடுங்கி விற்று உணவை வாங்கினார் அவர். இதில் பிடிபடும் சந்தர்ப்பங்களில் அடிக்கப்பட்டு, மரத்தில் கட்டப்பட்டார்.


பின்னர் பாடசாலைக்குச் செல்வதை நிறுத்திவிட்டு, தனது தாய், சகோதரன் சகிதம் பழைய இரும்புகளை சேகரித்து விற்கும் தொழிலை மேற்கொண்டார்.


14 வயதாகும்போது அவருக்கு எதிராக 24 முறைப்பாடுகள் இருந்தன. அனைத்துமே சிறு குற்றச்செயல்களாகும். குற்றவாளிகள் அடையாளம் காணப்பட வாய்ப்பிருந்தபோதிலும் பொலிஸார் ஜயம்பதி மீதே அனைத்து குற்றங்களையும் சுமத்தியதாக அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

25.04.1975 ஆம் திகதி அவர் முதல்தடவையாக நீதிமன்றில் குற்றவாளியாகக் காணப்பட்டார். தனது தாயார் சகிதம் கத்தரிக்கோல் ஒன்றை திருடியதாக குற்றம் சுமத்தப்பட்ட வழக்கில் 500 ரூபா அபராதம் விதிக்கப்பட்டு எச்சரித்து விடுவிக்கப்பட்டனர்.


மீண்டும் 4.10.1979 இல் திருட்டுக்குற்றத்தை ஒப்புக்கொண்ட அவர் பன்னிப்பிட்டிய தடுப்பு முகாமுக்கு அனுப்பபட்டார். சில காலத்தின்பின் அவர் அங்கிருந்து தப்பியோடினார்.

1981 பெப்ரவரியில் அவர் மீரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

அங்கிருந்த சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு ஜயம்பதி சிறுபராயக் குற்றவாளியாக கருதப்படுவதால் எத்தனை குற்றச்செயல்களுக்கும் 3 வருட சிறைத்தண்டனையே விதிக்கப்படும் எனவும் கூறினாராம். இறுதியில் 16.02.1981 இல் கங்கொடவில நீதவான் நீதிமன்றில்,  தனது சார்பாக சட்டத்தரணி எவரும் ஆஜராகாத நிலையில் அவர் 14 குற்றங்களை ஒப்புக்கொண்டார்.
 

14 குற்றங்களுக்கும் அவர் மீது பல சிறைத்தண்டனைகள் விதிக்கப்பட்டன. மேற்படி அனைத்து சிறைத்தண்டனைகளும் 4 வருடங்கள் 8 மாதகாலத்தில் சமகாலத்தில் அனுபவித்து முடிக்கப்படக்கூடியவை. ஆனால் சிறைச்சாலை அதிகாரிகள் ஜயம்பதி மொத்தமாக 64 வருடங்கள் சிறையில் இருக்க வேண்டுமெனக் கணித்தனர்.


மேலும் பல நீதவான் நீதிமன்றங்களில் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டார். 12-15 வயதில் செய்த இக்குற்றங்களுக்கு அவர் வயதுவந்த கடும் கிரிமினல் போல் நடத்தப்பட்டதாக அவர் சார்பில் உயர்நீதிமன்றில் மனுதாக்கல் செய்த சட்டத்தரணி காஞ்சனா பிரியதர்ஷனி குறிப்பிட்டுள்ளார்.


பின்னர், 8 வருடங்களை சிறையில் கழித்த நிலையில், 1989 பெப்ரவரியில் அவர் நிபந்தனை அடிப்படையல் விடுதலை செய்யப்பட்டார். அதன்பின் திருமணம் செய்த அவருக்கு 3 பிள்ளைகளும் பிறந்தனர். எனினும் பொய்யான பல குற்றச்சாட்டிகளின் காரணமாக அவர் பொலிஸாரால் பல தடவை கைது செய்யப்பட்டு பின்னர் தவறாக கைது செய்யப்பட்டுள்ளதாக் கூறி விடுவிக்கப்பட்டார்.


1994 இல் ஜயம்பதி மீண்டும் கைது செய்யப்பட்டு அவருக்கு எதிராக பண்டாரகம நீதவான் நீதிமன்றில் 4  வழக்குககள் தொடுக்கப்பட்டன. அவருக்கு பண்டாரகம நீதவான் ஒவ்வொரு வழக்கிலும் 5 வருட சாதாரண சிறைத்தண்டனையும் சிறையிலிருந்து தப்பிச்சென்றமைக்காக மேலும் 5 வருட சிறைத்தண்டனையும் விதித்தார். இத்தண்டனைகள் சமகாலத்தில் அனுபவித்து முடிக்கப்படக்கூடியவை.

ஆனால் சிறை அதிகாரிகளோ ஜயம்பதி மேலும் 25 வருடங்கள் சிறையிலிருக்க வேண்டும் எனக் கணித்தனர். முந்தைய 117 வருட சிறைத்தண்டனையுடன் சேர்த்து அவர் மொத்தமாக 142 வருடங்கள் சிறையிலிருக்க வேண்டும்  எனக் கூறப்பட்டது.


இந்நிலையில் குறுகிய காலத் தண்டனைகளை ஒரே சமயத்தில் அனுவித்து முடித்துவிடலாம் என வாக்குறுதியளித்து, தான் செய்யாத பெரும் எண்ணிக்கையான குற்றங்களை செய்ததாக ஒப்புக்கொள்ளுமாறும்  பொலிஸார் நிர்ப்பந்தித்தாக ஜயம்பதி தனது அடிப்படை உரிமை மீறல் மனுவில் தெரிவித்துள்ளார். அத்துடன் நீதவான்கள் தனது வயதைக் கருத்திற்கொள்ளாமல் தீர்ப்புகளை வழங்கியதாகவும் அத்தண்டனைகளை ஒன்றின்பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் என சிறை அதிகாரிகள் தவறாக வியாக்கியாணம் செய்ததாகவும் அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


நீதியமைச்சர் அத்தாவுட செனவிரட்ன, புனர்வாழ்வு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர்  டியூ குணசேகர, சிறுவர் அபிவிருத்தி அமைச்சர் திஸ்ஸ கரலியத்த, சிறைச்சாலைகள் ஆணையாளர், நீதிச்சேவைகள் ஆணைக்குழு, சட்டமா அதிபர் ஆகியோர் இம்மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

;
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .