2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

1,46,676 பேர் தொடர்பில் ஐ.நா சந்தேகம்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 17 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

வன்னி மக்கள் தொடர்பில் இறுதிக்கட்ட யுத்தத்தின் பின்னரும் அதற்கு முன்னரும் இலங்கை அரசாங்கத்தினால் பதியப்பட்ட தரவுகளை ஒப்பிட்டு பார்க்குமிடத்து 1 இலட்சத்து 46ஆயிரத்து 676பேர் கணக்கில் அடங்கவில்லை என்று ஐ.நா உள்ளக பரிசீலனைக் குழு, தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் பின்னர் அரசாங்கத்தால் பதிவு செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கைக்கும் யுத்தத்துக்கு முன்னர் வன்னியில் காணப்பட்டதாகக் கூறப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கைக்கும் இடையில் முரண்பாடுகள் காணப்படுகின்றன.

இந்த முரண்பாடு தொடர்பில் குழுவின் உறுப்பினர்களிடையே வாதவிவாதங்கள் இடம்பெற்றதாகவும் இவ்வாறு கணக்கில் வராத மக்கள் தொகையினர் யுத்த காலகட்டத்தின் போது உயிரிழந்திருக்கலாம் என்றும் மேற்படி பரிசீலனைக் குழு குறிப்பிட்டுள்ளது.

2008 ஒக்டோபர் காலப்பகுதியில் 4 இலட்சத்து 29ஆயிரத்து 059 பேர்இருந்ததாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் அரசாங்க அதிபர்களால் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிடம் எழுத்து மூலம் கையளிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் பின்னர் அரசாங்கத்தால் பதிவு செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கையுடன் நல்லிணக்க ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்ட எழுத்துமூல அறிக்கையை ஒப்பிட்டு பார்க்குமிடத்து 1 இலட்சத்து 46ஆயிரத்து 676பேர் கணக்கில் அடங்கவில்லை என்றும் அக்குழு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, 2009 முற்பகுதியில் முல்லைத்தீவு பிரதேசத்தில் 3 இலட்சத்து 60ஆயிரம் பொதுமக்கள் இருந்ததாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் 2010ஆம் ஆண்டில் நல்லிணக்க ஆணைக்குழுவிடம் வழங்கிய தகவல்களின்போது குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், 2009 ஜூன் மாதக் காலப்பகுதியில் வன்னியிலிருந்து 2 இலட்சத்து 89ஆயிரத்து 915பேர் மாத்திரமே வெளியேறியுள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலக தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன என்றும் அவ்வறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .