2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

’18 மாதங்கள் தாமதித்தே ரணில் சென்றார்’

Kogilavani   / 2017 மே 31 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


18 மாதங்களாத் தாமதித்து வந்த மருத்துவ சிகிச்சைக்காகவே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார் என்று தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான டொக்டர் ராஜித சேனாரத்ன, மீண்டும் தள்ளிப்போட முடியாமல் போனதாலேயே அவர் சென்றதாகவும் தெரிவித்தார்.

பிரதமர் ரணில், தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு, கடந்த சனிக்கிழமை, ஐ.அமெரிக்காவுக்குச் சென்றிருந்தார். இலங்கையில், பாரிய இயற்கை அனர்த்தம் ஏற்பட்டிருந்த நிலையில், அவர் இவ்வாறு சென்றமை, அதிக விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பின் போது, அது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ராஜித, வெள்ள நிலைமை தொடர்பாக, தினமும் 4 தடவைகள், பிரதமருக்கு அறிக்கைகள் அனுப்பப்படுவதாகவும், இவ்விடயம் தொடர்பாக அவர், முழுமையான அறிவுடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.

எனினும், என்னவாறான மருத்துவ தேவைக்காக, அவர் ஐ.அமெரிக்காவுக்குச் சென்றார் என்ற விடயத்தை, அமைச்சர் ராஜித வெளிப்படுத்தவில்லை.

இதேவேளை, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பாவும், இந்த அனர்த்த காலத்தில் இலங்கையில் இருக்காமை குறித்து, அமைச்சர் ராஜிதவிடம் கேள்வியெழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அமைச்சர் ராஜித, மெக்ஸிக்கோவில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொள்வதற்காகச் சென்றிருந்ததாகவும், அங்கிருந்து அதே தினத்தில் கொழும்புக்கு வரக்கூடிய விமான சேவையைப் பெற்றுக் கொண்டிருக்க முடியவில்லை எனவும் தெரிவித்தார்.

அத்தோடு, மெக்ஸிக்கோவிலிருந்து கொழும்புக்கு நேரடியான விமான சேவையைப் பெற்றாலும், இலங்கைக்கு வருவதற்கு, அவருக்கு 30 மணித்தியாலங்கள் தேவைப்பட்டிருக்கும் என்றும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .