2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கடல் மட்டம் உயர்வு;இலங்கைக்கு ஆபத்து

Menaka Mookandi   / 2010 ஜூலை 15 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

புவி வெப்பமடைவதன் காரணமாக இந்து சமுத்திரத்தில் கடல் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.  இதனால், இலங்கை, இந்தியா, இந்தோனேஷியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளின் கரையோரப் பகுதிகளில் வாழும் பல இலட்சக்கணக்கான மக்களுக்கு ஆபத்து ஏற்படுவதாக விஞ்ஞானிகள் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

கொலராடோ பல்கலைக்கழகம், சுற்றுச்சூழல் ஆய்வுக்கான தேசிய நிலையம் ஆகியவற்றைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களே இந்த அறிவிப்பினை விடுத்துள்ளனர். பசுமைக்குடில்வாயு வெளியேற்றமும் கடல் மட்டம் மேலெழுந்து வருவதற்குக் காரணமாக அமைந்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலையில், வங்காள விரிகுடா, அரபிக்கடல், இலங்கை, சுமத்ரா, ஜாவா பிராந்தியங்களின் கடல் மட்டம் மேலெழுவதை காலநிலை மாற்றம் வெளிப்படுத்துவதாக மேற்படி விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். ஆபிரிக்காவின் கிழக்கு கரை தொடக்கம் பசுபிக்கின் சர்வதேச எல்லைக்கோடுவரையிலான பரந்த சமுத்திரப் பகுதியானது 1 பரனைட்டாக அல்லது 0.5 சதமபாகையாக வெப்பமடைந்துள்ளது.

இது கடந்த 50 வருடங்களில் ஏற்பட்ட மாற்றமாகும் என்று இந்த ஆய்வுக்கு தலைமைதாங்கிய சியூபோஸ்டரின் இணைப் பேராசிரியர் வெய்கிங்ஹான் தெரிவித்ததாக ஏ.என்.ஐ.செய்திச் சேவை தெரிவித்தது.இதேவேளை, சீ செல்ஸ் தீவுகள் மற்றும் தன்சானியாவின் சன்சிபார் கரைப்பகுதிகளில் கடல்மட்டம் குறைவடைந்திருப்பதையும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

சுற்றாடல் மாற்றங்களுக்கு காரணமான மனிதர்களின் செயற்பாடுகள் மற்றும் கடல் சுற்றோட்டம் என்பன இந்து சமுத்திரத்தில் காணப்படுவதை அவர்களது  புதிய பெறுபேறுகள் வெளிப்படுத்துகின்றன. இது பிராந்தியத்தில் கடல் மட்ட மாற்றத்துக்கு பிரதான காரணமாக உள்ளது என்று இந்த ஆய்வறிக்கையை தயாரித்தவர்கள் கூறுகின்றனர்.

அத்துடன், இந்து சமுத்திர கிழக்குப் பிராந்தியத்தில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என்றும் மேற்குப் பிராந்தியம் கடும் வரட்சியை எதிர்நோக்கும் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது. கடல்மட்டத்தின் பிராந்திய ரீதியிலான மாற்றத்தை விளங்கிக்கொள்வது மிகவும் முக்கியமானதாகும். கரையோரப் பகுதிகள் மற்றும் தீவுகளில் இவை பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அந்த விஞ்ஞானிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .