2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மக்களின் சுதந்திரமான வாழ்க்கைக்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் - ஈ.பி.டி.பி எம்.பி உதயன்

Suganthini Ratnam   / 2010 ஜூலை 06 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்களின் சுதந்திரமான வாழ்க்கைக்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்த்திரி அலென்டின் உதயன் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
 
தற்போது  பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுள்ள நிலையில்  ஏற்கனவே பாதுகாப்புக் காரணங்களுக்காக மேற்கொண்டிருந்த நடவடிக்கைகள் தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தற்போதைய நிலைமைக்கேற்ப தளர்த்தப்பட்டு, எமது மக்களின் சுதந்திரமான வாழ்கைக்கு வசதிகள் செய்து கொடுக்கப்படுவது காலத்தின் தேவையாக இருக்கிறது.
 
இந்நிலையில், யாழ் குடாநாட்டில் அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் காரணமாக இடம்பெயர்ந்துள்ள வலிகாமம் வடக்கு வடமராட்சி கிழக்கு மற்றும் வன்னிப்பகுதி மக்கள் அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஜனாதிபதியும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும்  இந்திய விஜயத்தின்போது இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி இடம்பெயர்ந்த மக்களுக்கு 50,000  வீடுகளை அமைப்பதற்கான நிதியுதவியைப் பெற்றுக்கொண்டுள்ளமையானது உண்மையிலேயே பாராட்டத்தக்க விடயமாகும். இதற்காக இந்திய அரசாங்கத்திற்கும் இந்திய மக்களுக்கும் எமது மக்கள் சார்பாக எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

எனவே, இந்த நிதியுதவியைக்கொண்டு உரிய   வீடமைப்புத் திட்ட நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்நிலையில், யாழ் குடாநாட்டில் வேலைவாய்ப்பற்ற நிலையில் ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் காணப்படுகின்றனர். குறிப்பாக யாழ் குடாநாட்டில் 2,200 வேலையற்ற பட்டதாரிகள் உள்ளனர். மேலும் தொழிற்பயிற்சிக்கல்லூரியில் பயின்றவர்களென ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளுக்கு  வேலைவாய்ப்புக்களை வழங்க வேண்டிய அவசியமானதொரு நிலை தோன்றியுள்ளது.
 
இதேவேளை, யாழ் குடாநாட்டில் தொழில் வாய்ப்புகளை உருவாக்கக்கூடிய நடவடிக்கைகளையும் நாம் மேற்கொள்ள வேண்டும். அந்த வகையில் அச்சுவேலி தொழிற்பேட்டையை அமைப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  எடுத்துவரும் முயற்சிகள் விரைவுபடுத்தப்பட்டு அத்தொழிற்பேட்டை அமையுமானால் அதன்  மூலம் பலருக்குத் தொழில் வாய்ப்புக்களை  வழங்க முடியும்.

மேலும், யாழ்ப்பாணத்திலே குறிகட்டுவானுக்கும் நெடுந்தீவுக்கும் இடையிலான படகுச்சேவை தொடர்பில் பல காலமாக தொடர்ந்தும் பிரச்சினைகள் நிலவி வருகின்றன. இப்பகுதிக்கான சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள  குமுதினிப் படகு மிகவும் பழைமையானது என்பதால் அது தொடர்ந்தும் பழுதடைந்த நிலையிலேயே காணப்படுகிறது. எனவே புதிய படகுகளை இப்பகுதிக்கான சேவையில் ஈடுபடுத்த உடனடி நடவடிக்கை  மேற்கொள்ள வேண்டும்.
 
யாழ் குடாநாட்டில் தீவுப்பகுதி பெண்கள் தொடர்பாக குறிப்பாக நெடுந்தீவு பெண்கள் தொடர்பாக இந்த உயரிய சபையில் ஒருவர் மிகவும் கேவலமாக கதைத்துள்ளார்.  இது மொத்த நெடுந்தீவு பெண்கள் சமூகத்தினையும் அவமானத்திற்குள்ளாக்கும் செயற்பாடகும்.

மிகவும் பிரசித்திபெற்ற திருமுறிகண்டி ஆலயம் தொடர்பாக மத அலுவல்கள் அமைச்சின் கவனத்துக்கு கொண்டுவர இருக்கிறேன்.
 
இந்த ஆலயம் 1886ஆம் ஆண்டு கந்தர் சின்னப்பர் என்பவரால் ஸ்தாபிக்கப்பட்டது. இக்காலப்பகுதி ஆங்கிலேயரின் ஆட்சிக்காலம் ஆகும். தொடர்ச்சியாக இவ்வாலயம் அவரது பரம்பரையினரினால் பராமரிக்கப்பட்டு வந்தது. 1990ஆம் ஆண்டு வரை இவ்வாலயம் பரம்பரையினரின் பொறுப்பிலேயே இருந்து வந்தது. இந்த சந்ததியினரின் குணரட்ணம் என்பவர் பொறுப்பிலிருந்த காலத்தில் 1990ஆம் ஆண்டு புலிகள் இயக்கத்தினரால் பலவந்தமாக பறிக்கப்பட்டது.

யுத்தம் முடிவுக்கு கொண்டு வந்ததை தொடர்ந்து இவ்வாலயத்தை மீள இயக்கவும் ஏ 9 பாதையால் பயணிக்கும் மக்களின் நலன்களுக்காகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  எடுத்த முயற்சியினால் ஆலயம் மீளவும் மக்களின் வழிபாட்டிற்காக திறக்கப்பட்டது. ஆலய பூசகரையும் அமைச்சர் நியமித்திருந்தார். கோவிலின் உரிமையாளர்கள் மீள்குடியேற்ற நடவடிக்கையூடாக வந்து ஆலயத்தினை பொறுப்பேற்க முன்வந்தபோது இவ்வாலயம் உரியவர்களிடம் ஒப்படைக்க மறுக்கப்பட்டது.

அரசாங்க அதிபர், பிரதேச செயலர், இந்து கலாசாரத் திணைக்களம் மாகாண உள்ளூராட்சி ஆணையாளரென பலர் இக்கோயிலை  தற்சமயம் நிர்வகிக்கின்றனர். அல்லது ஏதோவொரு வகையில் உரியவர்களிடம் கிடைக்க தடைகளை போடுகின்றனர். ஆகவே இவ்விடயத்தில்  பிரதமர்  தலையிட்டு கோவிலின் உண்மையான உடமையாளர்களிடம் இவ் பிரசித்தி பெற்ற ஆலயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது உடமையாளர்கள் ஆலயத்தின் நலன் விரும்பிகள் அடங்கிய நிர்வாகத்தை ஏற்படுத்தி ஆலயத்தை நிர்வகிக்க முன்வரவேண்டும். ஆலயத்தை சுற்றியுள்ள மேற்படி உரிமையாளர்களின் வீடுகளில் அவர்கள் மீள்குடியேற்றவும் அனுமதிக்க வேண்டும்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .