2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மலையக தமிழ்ச் சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்கு இலங்கை - இந்திய சமுதாய பேரவை ஆதரவு : திருமதி அனுஷியா சிவ

Super User   / 2010 ஓகஸ்ட் 09 , பி.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.சுவர்ணஸ்ரீ )

மத்திய மாகாணத்திலுள்ள இடைநிலைப் பாடசாலைகளின் செயலாற்றுகையை மேலும் விரிவுபடுத்தி, வலுப்படுத்திக் கொள்வதற்கு தொடர்ந்தும் இலங்கை - இந்திய சமுதாயப் பேரவை உதவ வேண்டும். இதேவேளை, மலையகத் தமிழ்ச் சமூகத்தின் கல்வி வளர்ச்சியின் பால் இலங்கை - இந்திய சமுதாயப் பேரவை காட்டி வருகின்ற அக்கறை பாராட்டுதலுக்கு உரியதாகும் என்று மத்திய மாகாண தமிழ்க்கல்வி அமைச்சர் திருமதி அனுஷியா சிவராஜா தெரிவித்தார்.

மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சும் இலங்கை இந்திய சமுதாயப் பேரவையும் இணைந்து அமுலாக்கும் இந்நிகழ்ச்சித்திட்டத்தின் செயற்பாடுகளுள் ஒன்றான கல்வி வாண்மையாளர்களுக்கான வலுவுட்டல் அமர்வொன்று அண்மையில் ஹட்டன் சீடா வள நிலையத்தில் இடம் பெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மத்திய மாகாண பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு பொறுப்பாகவுள்ள கல்வி அதிகாரிகள், அங்கு கடமையாற்றுகின்ற அதிபர்கள், ஆசிரியர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் பாட இணைப்பாளர்கள் ஆகியோரிலிருந்தும் தெரிவுசெய்யப்பட்ட 40 பேர் இச்செயலமர்வில் பங்குபற்றினர். இடைநிலைக் கல்விப் பிரிவில் மாணவர் பங்குபற்றலை விருத்தியாக்கவும் அவர்களது கற்றல் பேறுகளை உயர்ந்தளவில் பேணிக்கொள்ளவுமாக இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் குறிக்கோள் அமைந்துள்ளது.

நிகழ்ச்சித் திட்டத்தின் உள்ளடக்கமாக மத்திய மாகாணத்திலுள்ள இடைநிலை பெருந்தோட்ட தமிழ்ப் பாடசாலைகள் அமைந்துள்ளன. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் செயற்பாடுகளுள் ஒன்றான வலுவுட்டல் பயிற்சியமர்வின் முதற்கட்டத்தில் இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த நாராயண ராவ், சிவபாலு ஆகியோர் வளவாளர்களாக பங்குபற்றியிருந்தனர்.

நிகழ்ச்சித்திட்டத்தின் செயற்றிட்டப் பணிப்பாளரான இலங்கை இந்திய சமுதாயப் பேரவையைச் சேர்ந்த கே. கருணாகரன் கந்தசாமி செல்லகுமார், டாக்டர் ராமசுப்பு ஆகியோர் உட்பட இலங்கை - இந்திய சமுதாய பேரவையின் சிரேட்ட உறுப்பினர்கள் பலரும் பயிற்சியமர்வின் ஆரம்ப இறுதி நிகழ்வுகளில் பங்குபற்றியிருந்தனர்.

மத்திய மாகாண தமிழ்க் கல்வியமைச்சர் தொடர்ந்து பேசுகையில்,

"ஆசிரியர்களின் வினைத்திறனுடனான கற்பித்தலுக்கும் கல்வி அதிகாரிகளினதும் கல்வி ஆலோசகர்களினதும் பயனுறுதியுடனான பாடரீதியான உதவிகளுக்கும் இப்பயிற்சியமர்வு பெரிதும் உதவக்கூடியதாகவுள்ளது.

மத்திய மாகாணத்திலுள்ள இடைநிலைப் பாடசாலைகளின் செயலாற்றுகையை மேலும் விரிவுபடுத்தி, வலுப்படுத்திக் கொள்வதற்கு தொடர்ந்தும் இலங்கை - இந்திய சமுதாயப் பேரவை உதவ வேண்டும்" என்றார்


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X