2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

இரணைமடு குளத்தில் நன்னீர் மீன்பிடிக்க விரைவில் தீர்வு

A.P.Mathan   / 2010 ஓகஸ்ட் 14 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இரணைமடு குளத்தில் நன்னீர் மீன்பிடிக்க அனுமதிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார், கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் ராஜித சேனாரட்ணவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.  

நேற்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சி பிரதேச செயலகத்தில் கிளிநொச்சி, இரணைமடு, அக்கராயன்குளம், வன்னேரிக் குளம் நன்னீர் மீன்பிடியாளர் கூட்டுறவுச் சங்க அங்கத்தவர்களுக்கு படகுகள், வலைகள், மீன் விற்பனை துவிச்சக்கர வண்டிகள், மீன் பெட்டிகள் வழங்கும் நிகழ்விலேயே சந்திரகுமார் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்தார்.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த சந்திரகுமார், மீனவர்கள் பல்வேறு வகையான பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர். கடல்சார் மீன்பிடியிலும் நன்னீர் மீன்பிடியிலும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு மனிதாபிமான முறையில் அணுகி, அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்த அமைச்சர் அவர்கள் கூடிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

2004ஆம் ஆண்டு முதல் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மீன்பிடி டிப்ளோமா பயிற்சி நெறியை பூர்த்தி செய்த 40 பேர் வரை வேலையற்று இருக்கின்றார்கள். இவர்களுக்கான வேலைவாய்ப்பினை மீன்பிடித் துறையில் ஏற்படுத்துவதன் ஊடாக, வடக்கு கிழக்கு மாகாணங்களில் மீன்பிடித்துறையில் பாரிய அபிவிருத்தியை ஏற்படுத்த முடியுமெனவும் இவர்களுக்கு மீன்பிடித்துறை, நன்னீர் மீன்பிடி அபிவிருத்தி அதிகாரசபை என்பவற்றில் உள்ள வெற்றிடங்களுக்கு இவர்கள் மூலம் நிரப்பி, மீன்பிடி அபிவிருத்திக்கு உதவ வேண்டுமென்றும் மேலும் அவர் கேட்டுக்கொண்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்களின் அழைப்பின் பேரில் கிளிநொச்சிக்கு விஜயம் செய்த அமைச்சர் ராஜித சேனாரட்ண சந்திரகுமார் விடுத்திருந்த கோரிக்கைகளுக்கு அமைவாக இரணைமடு குளத்தில் மீன்பிடிப்பதற்கு அரச உயர்மட்ட அதிகாரிகள், படைத்தரப்பு மற்றும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஆகியோர் அடங்கிய குழுவின் பேச்சுவார்த்தை மூலம் இப்பிரச்சினைக்கு மிக விரைவில் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தார்.

வன்னேரிக் குளத்தில் நன்னீர் மீன்பிடிப்பதற்காக தென்னிலங்கையிலிருந்து மீனவர்கள் வருவதாக அமைச்சரிடம் அப்பிரதேச மக்கள் தெரிவித்த குற்றச்சாட்டினை கருத்திற்கொண்டு அங்கு அத்துமீறி வருபவர்களை உடனடியாக அப்புறப்படுத்துமாறு அப்பிரதேச இராணுவ அதிகாரிக்கு பணிப்புரை விடுத்தார்.

மூன்று மாதங்களுக்குள் மீன்பிடி டிப்ளோமா பயிற்சிநெறியை முடித்த மாணவர்களுக்கு தமது அமைச்சில் வேலைவாய்ப்பினை வழங்குவதாக வும் அமைச்சர் மேலும் உறுதியளித்தார்.

இந்நிகழ்வில் கிளிநொச்சி அரச அதிபர் கேதீஸ்வரன், உதவி அரசாங்க அதிபர், கிராம சேவையாளர்கள் உட்பட பெருமளவிலான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து பள்ளிக்குடா, கௌதாரிமுனை ஆகிய கிராமங்களுக்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார், அமைச்சர் ராஜித சேனாரட்ண ஆகியோர் அங்குள்ள மீனவ குடும்பங்களுக்கு படகு, வள்ளம், படகு இயந்திரம், வலைகளை வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .