2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

எந்தக் கட்சியுடனும் இணைந்து செயற்பட ஐ.தே.க. தயார்

Super User   / 2010 ஓகஸ்ட் 16 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கெலும் பண்டார)

நாட்டின் நலன்கருதி சட்டத்தின் ஆட்சியற்ற நிலை  மற்றும் வாழ்க்கைச் செலவு உயர்வுக்கு எதிராகப் போராடுவதற்கு எந்தவொரு அரசியல் கட்சியுடனோ குழுவுடனோ கூட்டாக இணைந்து செயற்படத் தயார் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.
ஐ.தே.க. ஊடகப் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க இன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் உரையாற்றுகையில்  இதனைத் தெரிவித்தார்.


அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்படுகளுக்கு எதிராக போராடுவதற்காக பாரிய கூட்டணியொன்றை அமைப்பதற்கு முன்வருமாறு ஜே.வி.பி. நேற்று கோரிக்கை விடுத்திருந்த நிலையில் ஐ.தே.கவின் இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


'இத்தகைய அரசியல் ஐக்கியத்தின்போது பிரிவுகள் குறித்தோ தலைமைத்துவம் குறித்தோ நாம் அலட்டிக் கொள்ளவில்லை. நாட்டினதும் மக்களினதும் நலன் குறித்தே நாம் சிந்திக்கின்றோம். காலி விளக்கமறியல் சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த ஜனநாயக தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜித ஹேரத், அஜித் குமார ஆகியோரையும் நான் சென்று பார்வையிட்டேன்' என கயந்த கருணாதிலக்க கூறினார்.


அரசியலமைப்புத் திருத்தம் குறித்த கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையில் 'மேற்படி அரசியலமைபபுத் திருத்த யோசனைகளை வெளியிடுமாறு ஐ.தே.க. அரசாங்கத்தைக் கோரியபோதிலும் அரசாங்கம் அதைச் செய்யவில்லை. இதனால் இவ்விடயத்தில் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதில் அரசாங்கம் உண்மையாக நடந்துகொள்கிறதா என ஐ.தே.க. மட்டுமல்லாது முழு நாடும் கவலை கொண்டுள்ளது' என கயந்த கருணாதிலக்க எம்.பி. கூறினார்.


இப்பேச்சுவார்த்தைகளின் காரணமாகவா ரணில் விக்கிரமசிங்கவுக்கு புதிய வாகனமென்றை வழங்க  அமைச்சரவை தீர்மானித்தது என கேட்கப்பட்டபோது, அதைப் பெறுவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் ரணிலுக்கு உரிமையுள்ளது என கயந்த கருணாதிலக்க கூறினார்.


'இது அரசாங்கம் வழங்கிய அன்பளிப்பு அல்ல. எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ரணிலுக்கு அதற்கு உரிமை உள்ளது. சிறிமாவோ பயன்படுத்திய பென்ஸ் கார் ஒன்றை எமது தலைவர் 1994 ஆம் ஆண்டிலிருந்து பயன்படுத்தினார். 2004 ஆம் ஆண்டின்பின் ரணில் பயன்படுத்திய ஜாகுவார் வாகனம் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்தபோது பயன்படுத்தியதாகும்.
 

இப்போதுதான் ரணிலுக்குப் புதிய வாகனம் கிடைத்துள்ளது.பொதுவாக அவர் தனது பிரத்தியேக வாகனத்தைத் தான் பயன்படுத்துவார். இப்போது அவருக்கு மொன்டெரோ ஜீப் ஒன்று வழங்கப்பட்டுள்ளது என கயந்த கருணாதிலக்க எம்.பி. மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .