2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

உள்ளூராட்சி அதிகாரசபை சட்டமூலம்; பசில், சந்திரகாந்தன் பேச்சுவார்த்தை

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 30 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)

உள்ளூராட்சி அதிகார சபை (விசேட ஏற்பாடு) திருத்தச் சட்ட மூலத்தின் கிழக்கு மாகாண சபையின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கான
பேச்சுவார்த்தையொன்று தனக்கும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் இடம்பெற்றதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுறை சந்திரகாந்தன் தமிழ்மிரர் இணையதளத்துக்கு தெரிவித்தார்.

சட்ட மூலத்தை சில திருத்தங்களுடன் நிறைவேற்றிக் கொள்வது தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையில் கலந்துரையாடப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் இந்த சட்ட மூலத்தில் குறிப்பிட்ட சில விடயங்களில் தெளிவின்மை இருப்பதாகவும் அவற்றை நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என தான் அமைச்சர் பஸில் ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்ததாகவும் முதலமைச்சர் சந்திரகாந்தன் தெரிவித்தார்.

உள்ளூராட்சி அதிகார சபை (விசேட ஏற்பாடு) திருத்தச் சட்ட மூலத்தை கடந்த வருடம் கிழக்கு மாகாண சபையில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதும், தமிழ் பேசும் சிறுபான்மை இனத்தவருக்கு பாதகம் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் எதிர்த்தமையால் அச்சட்ட மூலத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் முன்னைய சட்ட மூலம் தொடர்பாக சிறுபான்மையினரால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளை உள்ளடக்கிய திருத்தச் சட்ட மூலமொன்றை தயாரித்து தன்னிடம் கையளிப்பதாக அமைச்சர் பஸில் ராஜபக்ஷ உறுதியளித்துள்ளதாக முதலமைச்சர் சந்திரகாந்தன் தெரிவித்தார்.

அவ்வாறு, புதிதாக தயாரிக்கப்படும் உள்ளூராட்சி திருத்தச் சட்ட மூலம் சிறுபான்மையினருக்கு பாதிப்பில்லாத வகையில் இருக்கும் பட்சத்தில், அடுத்த மாகாண சபைக் கூட்டத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .