2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாதிருக்குமாறு அமெரிக்காவிடம் இலங்கை கூறுகிறது

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 13 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜமீலா நஜ்முதீன்)

இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்துமாறு அமெரிக்காவிடம் இலங்கை கூறியுள்ளது.

இலங்கையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட புதிய அரசியலமைப்பு மாற்றம் தொடர்பில் தேவையற்றதும் பொறுப்பற்றதுமான விமர்சனங்களை அமெரிக்கா  தெரிவிப்பதை நிறுத்த வேண்டும் எனவும் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இலங்கையின் புதிய அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பில் அமெரிக்காவின் கண்டனத்திற்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அராசங்கம் தேவையற்ற விமர்சனங்களை கவனத்திற் கொள்ளாது எனக் கூறிய அமைச்சர், முதலில் அமெரிக்கா தங்களது பிரச்சினைகளை கவனத்திற் கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.

இவ்வாறான தேவையில்லாத விமர்சனங்களை செய்வதினூடாக அமெரிக்கா இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிட்டுள்ளது மாத்திரமன்றி, எமது நாட்டின் அதியுயர் மன்றமான உயர் நீதிமன்றத்தையும் அவமதித்துள்ளது என அமைச்சர் ரம்புக்வெல்ல டெய்லி மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

முதலில் இலங்கை தொடர்பில் அறிக்கை வெளியிடுவதற்கு முன்னராக இலங்கையின் அரசியலமைப்புத் தொடர்பில் கற்றுக்கொள்ளுமாறும் அமெரிக்காவிடம் தாம் தெரிவிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தற்போதைய அரசியலமைப்புக்கான திருத்தங்கள் இலங்கையில் அரசியல் யாப்புக்கு அமையவே செய்யப்பட்டுள்ளது. நாங்கள் செய்தது சட்டப்படியானது. எனவே, எவருக்கும் இதனை விமர்சிக்கும் உரிமை கிடையாது எனவும் அவர் மேலும் கூறினார்.

இலங்கையின் அரசியலமைப்பில் செய்யப்பட்டுள்ள புதிய திருத்தங்களை கண்டித்து கடந்த சனிக்கிழமை அமெரிக்கா கடுமையாக விமர்சித்துள்ளதுடன், இத்திருத்தங்கள் ஜனநாயகத்தை பலவீனப்படுத்துவதாகவும் அமெரிக்கா தெரிவித்திருந்தது.(DM)
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .