2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பல்கலை மாணவர் பிரச்சினை; தீர்வு காண பெற்றோருக்கு ஜே.வி.பி.அழைப்பு

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 31 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பல்கலைக்கழக மாணவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணும் நடவடிக்கையில் ஒன்றிணையுமாறு அம்மாணவர்களின் பெற்றோருக்கு மக்கள் விடுதலை முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.

இந்நிலையில் இலவசக் கல்வியினை சீரழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அரசாங்கத்துக்கு எதிராக மாணவர்களுடன் இணைந்து பெற்றோர்களும் குரல் எழுப்ப வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார்.

பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் உதுல் பிரேமரத்ன விவகாரம் தொடர்பில் மேற்படி மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்கும் ஜே.வி.பி.யினருக்கும் இடையில் இன்று கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இதனையடுத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே ஜே.வி.பி.யின் தலைவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் தெரிவித்ததாவது :-

"எமது நாட்டு பெற்றோரால் அவர்களது பிள்ளைகளுக்கு வழங்கக் கூடிய ஒரே சொத்து இந்த கல்வியாகும். ஆனால் அந்தக் கல்வி தற்போது காசுக்காக விற்கப்படக்கூடிய சூழ்நிலை ஏற்படப் போகிறது. அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால், எதிர்காலத்தில் கல்வியறிவில்லாத ஒரு சமூகமே எமது நாட்டில் காணப்படும்.

சுதந்திரக் கல்வியை அழித்து அதனை தனியார்மயப்படுத்தும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிராக மாணவர்களுடன் இணைந்து அவர்களது பெற்றோர்களும் குரல் எழுப்ப வேண்டும். அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக அனைவரும் ஒன்றுதிரள வேண்டும்.

2011ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்புக்கென 21,000 கோடி ரூபாவினை ஒதுக்கீடு செய்துள்ள அரசாங்கம், அதில் பத்தின் ஒரு பகுதியினை மாத்திரமே கல்விக்காக ஒதுக்கீடு செய்துள்ளது. இவ்வாறு சென்றால் எவ்வாறு பல்கலைக்கழகங்களை நடத்துவது? இதனால் இந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் ஒன்று திரள வேண்டும்" என்றார்.

"சஞ்ஜீவ பண்டார" கருத்து


இந்த ஊடவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பதில் தலைவர் சஞ்ஜீவ பண்டார கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது :-

"எமது மாணவர் ஒன்றியத்தின் தலைவரான உதுல் பிரேமரத்ன உட்பட 29 மாணவர்கள் தற்போது பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 14ஆம் திகதி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே உதுல் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸார் கூறும் காரணம் சரியாயின் குறித்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதன் மறுதினமோ அல்லது அதற்கடுத்த நாளோ அவர் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சம்பவம் இடம்பெற்று இரண்டு வாரங்களின் பின்னரே இந்தக் கைது விவகாரம் இடம்பெற்றது.

எமது மாணவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடியே அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றோம். அந்த நடவடிக்கையை சீர்குழைக்கும் வகையிலும் தனிப்பட்ட ரீதியில் உதுல் பிரேமரத்னவிடம் பழிவாங்கும் எண்ணத்திலுமே இந்த கைது இடம்பெற்றுள்ளது" என்று அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .