2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

விசாரணையின்றி சிறையில் வாடுபவர்களை விடுதலைசெய்யவும்: அரியநேத்திரன் எம்.பி.

A.P.Mathan   / 2010 நவம்பர் 01 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஜனாதிபதியின் இரண்டாவது பதவியேற்பை முன்னிட்ட கொண்டாட்டங்களின் ஒருபகுதியாகவாவது சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விசாரணையின்றி நீண்டகாலம் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகளை விடுதலை செய்ய ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தமிழ்மிரருக்குத் தெரிவிக்கையில்...

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள குணரத்னம் மனோகரன் என்கிற நபர் இன்று தனது விடுதலைக்காக சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பதாக எனக்கு தகவல் கிடைத்திருக்கிறது. முல்லைத்தீவு விசுவமடுவை சேர்ந்த இவர் 2008ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு இன்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இவருக்கு மூன்று பிள்ளைகளும் இருக்கிறார்கள்.

விசுவமடு 11ஆம் கட்டை இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருக்கும் இவரது மனைவி, இரண்டு பெண் பிள்ளைகளுடனும் ஒரு மகனுடனும் பெரும் கஷ்டங்களை அனுபவிப்பதாகவும், தானில்லாமல் அவர்கள் வாழ்வாதாரத்தில் பெரும் சவால் நிலவுவதாகவும் மனோகரன் தெரிவித்திருக்கிறார். அவர்கள் படுகின்ற கஷ்டங்களை தாங்கிக்கொள்ள முடியாமையிலேயே தன்னுடைய விடுதலையை கோரி சாகும்வரை உண்ணாவிரதத்தை மனோகரன் மேற்கொள்கிறார்.

இவரைப்போல் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட அப்பாவிகள் பலர் இன்றும் விசாரணைகள் இன்றி நீண்டகாலமாக சிறையில் வாடி வருகிறார்கள். இவர்களின் விடுதலைக்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளாமல் இருப்பது மனவேதனையை தருகிறது.

ஜனாதிபதியின் இரண்டாவது பதவியேற்பு வைபவத்தை நாடளாவிய ரீதியில் ஒருவார காலம் விமர்சையாக கொண்டாடவுள்ளதாக அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. இதனை முன்னிட்டாவது சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு சிறைவாசம் அனுபவிக்கின்ற அப்பாவி மக்களுக்கு பொதுமன்னிப்பு வழங்க ஜனாதிபதி முன்வர வேண்டும். குறைந்தபட்சம் சிறையில் வாடுகின்ற அப்பாவி பெண்கள் 55 பேரையாவது விடுதலை செய்வதற்கு ஜனாதிபதி முன்வர வேண்டும் என தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X