2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

யாழில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் ஆரம்பம்: த.தே.கூட்டமைப்பு

A.P.Mathan   / 2010 நவம்பர் 11 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 'யாழ்ப்பாணத்தில் இன்னும் இடம்பெயர்ந்திருக்கும் 90,000 தமிழ் மக்களும் மீளக்குடியேற அனுமதிக்கப்பட வேண்டும். அப்படி மீளக்குடியேற முடியாத மக்கள் இருப்பின் அவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் குடியிருக்க நிலம் வழங்க முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். இதனை விடுத்து அந்த மண்ணில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக வாழும் மக்களை அகதிமுகாம்களில் வைத்துக் கொண்டு, வெளியில் இருந்து வரும் சிங்கள மக்களை குடியேற்றுவது நீதியானதுமல்ல, எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளக்கூடியதுமல்ல. இராணுவத்தின் துணையுடன் தமிழ் மக்களை பயமுறுத்தி இப்படியான சிங்கள குடியேற்றங்களை அரசு முன்னெடுக்குமாயின் கோபமும் விரக்தியும் தான் உருவாகுமே தவிர, இனங்களுக்கிடையில் நல்லுறவு ஏற்படாது' என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

சிங்கள முற்போக்கு சிந்தனையாளர்கள் இதனை இலங்கை அரசாங்கத்திற்கு எடுத்துச் சொல்ல வேண்டும். யுத்தத்திற்கு பின் இலங்கை அரசாங்கம் எடுக்கும் இவ்வாறான நடவடிக்கைகளை உலக நாடுகள் நிறுத்த முன் வரவேண்டுமெனவும் அக்கட்சி கோரியுள்ளது.

யாழ். நாவற்குழியில் சிங்கள குடும்பங்கள் குடியேறியுள்ளமை தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் விடுத்த அறிக்கையொன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

'இலங்கையில் எங்கும் எவரும் வாழலாம் என்ற போர்வையில் யாழ்ப்பாணத்தில் சிங்களக் குடியேற்றம் திட்டமிட்ட முறையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அரசாங்க அதிபருக்கோஇ அங்குள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கோ தெரியாமல் இரவோடிரவாக இராணுவம் இக்குடியேற்றங்களை தொடங்கியுள்ளது.

20 வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தவர்கள் என்ற காரணத்தை காட்டி ஏறத்தாழ 150இற்கு மேற்பட்ட சிங்கள மக்கள் திட்டமிட்ட வகையில் 06.10.2010 அன்று யாழ்ப்பாணம் அனுப்பி வைக்கப்பட்டார்கள். அவர்கள் யாழ்ப்பாணம் போகும் முன்பே அவர்களுக்கான மலசல கூட வசதி எல்லாம் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் செய்யப்படிருந்தது. அவர்களும் நேரடியாக புகையிரத நிலையத்திற்கு சென்று அங்கே தங்கினார்கள். அவர்களை உடனடியாக அமைச்சர்கள் சந்தித்தனர். பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. கொழும்பில் இருந்து சமுர்த்தி அதிகாரிகள் சென்று அவர்களுக்கான நிவாரண வசதிகள் செய்து கொடுத்தார்கள். மொத்தத்தில் அரசாங்கம் அவர்களை மிகக் கவனமாக பாராமரித்து வருகின்றது.

ஆனால், இவர்கள் யாருக்கும் யாழ்ப்பாணத்தில் ஒரு துண்டு நிலம் சொந்தமாக கிடையாது. இவர்கள் அந்த மண்ணை சார்ந்தவர்களுமல்ல. இவர்களை யாழ்ப்பாணத்தில் குடியேற்ற வேண்டுமென்பதில் அரசாங்கம் தீவிரமாக உள்ளது.

இதன் முதற்படியாக புகையிரத நிலையத்தில் இருந்த ஒரு பகுதியினர் 10ஆம் திகதி இரவு அழைத்துச் செல்லப்பட்டு நாவற்குழி 'அப்பன் குடியிருப்பு' என்ற பகுதியில் தற்காலிக வீடுகள் அமைத்து தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதற்கு இராணுவ பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த இடத்தில் ஏற்கனவே குடியிருந்த தமிழ் மக்கள் இடம்பெயர்ந்து சென்று மீளக்குடியேற வந்தபொழுது இந்நிலம் வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமானதென கூறி அவர்கள் அங்கு மீளக்குடியமர்வது அரசாங்கத்தால் மறுதலிக்கப்பட்டது. ஆனால் அந்த நிலத்தில் இன்று சிங்கள மக்கள் குடியேற்றப்படுகின்றனர்.

ஏற்கனவே யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 90,000 மக்கள் அதியுயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் வலிகாமம் வடக்கில் இருந்த விரட்டப்பட்டு இன்னும் அகதி முகாம்களிலும் வாடகை வீடுகளிலும் தங்கியுள்ளனர். இவர்கள் கடந்த 20 வருடங்களாக தமது சொந்த இடங்களுக்கு போக முடியவில்லை. உயர் நீதிமன்றம் மீள் குடியேற அனுமதி அளித்தும் இராணுவம் அதனை இன்னும் அனுமதிக்கவில்லை. இவர்களில் ஒரு பகுதியினரை குடியேற அனுமதித்தாலும், இராணுவ முகாம் விஸ்தரிப்பு, பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு அதற்கான பாதுகாப்பு என்ற பெயரில் ஒரு தொகுதி மக்கள் மீளக்குடியேற முடியாத நிலையே இன்றுள்ளது.

இந்நிலையில் 20 வருடம் அப்படி மக்கள் மீளக்குடியேற முடியாத நிலையில் உள்ள தமிழ் மக்களுக்கு அரசாங்கம் என்ன கொழும்பிலா காணியும் வீடும் கட்டிக் கொடுக்கப் போகின்றது?

1977, 81, 83ஆம் ஆண்டுகளில் அடித்து விரட்டப்பட்ட எத்தனை தமிழ் மக்களின் சொத்துக்கள் தென் பகுதியில் மீளக்கொடுக்கப்பட்டன? உயிர்த்தப்பினால் போதுமென, எல்லாவற்றையும் விட்டு விட்டு தமிழ் மக்கள் வெளிநாடுகளுக்கு செல்லவில்லையா? தென் பகுதியில் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு இல்லையென கூறி அவர்களை அரசாங்கம் கப்பலில் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பவில்லையா? இன்று யாழ்ப்பாணத்திலும் அவர்களுக்கு பாதுகாப்பு இருக்கக் கூடாது என்பதற்காகவா இந்த சிங்கள குடியேற்றம்?

இவ்வாறான திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தின் மூலம் குடிசன பரம்பல் விகிதாசாரத்தில் அரசு மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பதுடன், கிழக்கு மகாணத்தைப் போன்று தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த பிரதேசங்களிலே சிறுபான்மையாக்கப்பட்டு, அவர்களின் தனித்துவமும் பறிபோகும் சூழலும் ஏற்படுத்தப்படுகின்றது.

இராணுவத்தின் துணையுடன் அரசாங்கம் செய்யும் இவ்வின ஒழித்தல் நடவடிக்கைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக கண்டிப்பதுடன், இந்நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமெனவும் அரசாங்கத்தை கோருகின்றது.

யாழ்ப்பணத்தில் இன்னும் இடம்பெயர்ந்திருக்கும் 90,000 தமிழ் மக்களும் மீளக்குடியெற அனுமதிப்பட்ட வேண்டும். அப்படி மீளக்குடியேற முடியாத மக்கள் இருப்பின் அவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் குடியிருக்க நிலம் வழங்க முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். இதனைவிடுத்து அந்த மண்ணில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக வாழும் மக்களை அகதிமுகாம்களில் வைத்துக் கொண்டு, வெளியில் இருந்து வரும் சிங்கள மக்களை குடியேற்றுவது நீதியானதுமல்ல, எந்தவகையிலும் ஏற்றக் கொள்ளக்கூயதுமல்ல. இராணுவத்தின் துணையுடன் தமிழ் மக்களை பயமுறுத்தி இப்படியான சிங்கள குடியேற்றங்களை அரசு முன்னெடுக்குமாயின் கோபமும் விரக்தியும் தான் உருவாகுமே தவிர இனங்களுக்கிடையில் நல்லுறவு ஏற்படாது.

சிங்கள முற்போக்கு சிந்தனையாளர்கள் இதனை இலங்கை அரசாங்கத்திற்கு எடுத்துச் சொல்ல வேண்டும். யுத்திற்கு பின் இலங்கை அரசாங்கம் எடுக்கும் இவ்வாறான நடவடிக்கைகளை உலக நாடுகள் நிறுத்த முன் வரவேண்டுமெனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோருகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .