2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

முன்னாள் ஜனாதிபதியின் தகவலை புலிகளின் தலைமைக்கு கொண்டு சென்றதால் நெருக்கடிக்குள்ளானேன் : மனோ

Super User   / 2010 டிசெம்பர் 14 , பி.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆர்.சேதுராமன்)

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைக்கு தெரிவிக்க விரும்பிய தகவலை கொண்டு சென்றமையால் தான் நெருக்கடியில் சிக்கிக் கொள்ள நேர்ந்ததாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபேயின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் எழுதிய 'மன்னர்களை உருவாக்கும் கலை- அரசியல் தகவல்பரிமாற்றம்' எனும் தலைப்பில் நூலின் வெளியீட்டு விழா நேற்று கொழும்பில் நடைபெற்றபோது அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மனோ கணேசன் இதைத் தெரிவித்தார்.

இவ்விழாவில் மனோ கணேசன் தொடர்ந்து உரையாற்றுகையில் 'தகவல்பரிமாற்றம் குறித்து பேசும் போது தவறான தகவல் பரிமாற்றம் குறித்தும் பேசவேண்டியுள்ளது. தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து நாம் வாய்திறக்க முன்பே அது திரிபுபடுத்தப்பட்டு பத்திரிகைளிலும் ஊடகங்களிலும் வெளியான சந்தர்ப்பங்கள் இருந்தன. தமிழ் அரசியல்வாதிகள் எதிர்நோக்கிய பிரச்சினை இது.

கொழும்பில் தமிழ் மக்கள் மனித உரிமை மீறல் பிரச்சினைகளை எதிர்கொண்டபோது நாம் அதற்கு எதிராக குரல்கொடுத்தோம். அப்போது எமக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன. ரவிராஜுக்கு நடந்ததுபோல் எனக்கும் நடக்கும் என அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. ஆனால் நாம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு எதிராக குரல்கொடுப்பதை நிறுத்தவில்லை.

நாம் கூறுவதை மக்களுக்கு எடுத்துச் செல்வதுதான் தகவல்பரிமாற்றம். ஆனால் அதன்மூலமாகவே அரசியலில் போட்டியாளர்களின் புகழை கொலைசெய்யும் நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றன.
நானும் அரசாங்கத்துக்காக தகவல் பரிமாற்றம் செய்யப்போய் நெருக்கடியில் சிக்கிக்கொண்ட அனுபவமும் எனக்குள்ளது.

2001 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த ஐ.தே.க. அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் அளவுக்கதிமாக நெருங்கி பேச்சு நடத்துவதாக குற்றம் சுமத்தப்பட்டது. ஆனால் 2004 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதியின் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன்  அவர் என்னை அழைத்து புலிகளின் தலைமைக்கு தகவலொன்றை கொண்டு செல்லுமாறு கூறினார்.

'எனக்கு புலிகளின் தலைமையுடன் நெருக்கமில்லாத போதிலும் நீங்கள் நாட்டின் ஜனாதிபதி என்பதால் அத்தகவலை கொண்டு செல்கிறேன்' என நான் கூறினேன்.

அத்தகவல் மிகப்பெரிய விடயம் எதுவுமல்ல. முந்தைய அரசாங்கம் முன்னெடுத்துச் சென்ற சமாதான முயற்சிகளை எமது அரசாங்கமும் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறது என்பதே அத்தகவல்.

அத்தகவலை புலிகளின் தலைவரிடம் தெரிவிப்பதற்காக நான் கிளிநொச்சிக்கு சென்றேன். ஆனால் நான் கிளிநொச்சியில் சென்று பிரபாகரனுடன் நீச்சலடித்ததாக அக்காலத்தில் ஜே.வி.பியிலிருந்த விமல் வீரவன்ஸ தேர்தல்காலங்களில் கூறித்திரிந்தார். அதற்கு ஆதாரமான வீடியோ தன்னிடமிருப்பதாகவும் அவர் கூறினார்.

'நான் அப்படி அங்கு நீச்சலடிக்கவில்லை. எனவே அந்த வீடியோ இருந்தால் எனக்கும் காட்டுங்கள். பிரபாகரனுடன் நான் நீச்சல் தடாகத்தில் எப்படியிருக்கிறேன் என்று பார்க்க விரும்புகிறேன்' என விமல் வீரவன்ஸவிடம் பின்னர் கேட்டேன்.

அதற்கு அவர் 'எல்லோரும் இறந்துவிட்டார்கள்தானே' என்று சமாளித்துவிட்டார். ஆனால் 'நான் சாகவில்லைதானே எனக்கு அதை காட்டுங்கள் ' என்று அவரிடம் கேட்டேன். இதுவரை அவர் தன்னிடமிருப்பதாக கூறிய வீடியோவை வெளிப்படுத்தவில்லை.

கருத்துக்களை கருத்துக்களால் தான் எதிர்கொள்ள வேண்டும். வசனங்களை வசனங்களால் தான் எதிர்கொள்ள வேண்டும். இதுதான் ஜனநாயக அரசியல்முறையாகும்" என்றார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .