2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சுவரொட்டிகள் மீதான கட்டுப்பாடுகளால் கருத்துச் சுதந்திரத்திற்குப் பாதிப்பு:விஜித

Super User   / 2010 டிசெம்பர் 15 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுவரொட்டிகள் மீதான கட்டுப்பாடுகள் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்திற்கு சவாலாக உள்ளது என ஜே.வி.பியின் பிரச்சார செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.


நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் (கபே) நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் எழுதிய ரஜுன் தெனீமே கலாவ – தேசபாலன சன்னிவேதனய (மன்னர்களை உருவாக்கும் கலை – அரசியல் தகவல்பரிமாற்றம்) எனும் நூலின் வெளியீட்டு விழா நேற்று கொழும்பில் நடைபெற்றபோது அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே விஜித ஹேரத் இவ்வாறு தெரிவித்தார்.
 

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், தற்போது ஊடகங்களின்றி அரசியல்வாதிகளுக்கு இருக்க முடியாத நிலை உள்ளது. அதேபோல் ஊடகவியலாளர்களுக்கும் அரசியல்வாதிகள் தேவைப்படுகின்றனர். தகவல் பரிமாற்றத்திற்காக பல்வேறு வழிகள் கையாளப்படுகின்றன.
ஜே.வி.பி பற்றி பேசும்போது சுவரொட்டிகள் பற்றி பேசாதிருக்க முடியாது. ஆனால் இப்போது சுவரொட்டி கலாசாரம் புதிய சவால்களை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது. அண்மையில் 'சாதிக நொலத் மரணய' (சாட்சியில்லாத மரணம்) எனும் நாடகத்திற்கான சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்தவர்களை பொலிஸார் தடுத்து வைத்தனர். அந்த சுவரொட்டி அரசியல் தொடர்பானது அல்ல, நாடகம் தொடர்பானது என பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு நான் விளக்க வேண்டியிருந்தது.

இதேபோல் மொனராகலையில் டெபின்டோ என்ற நாடகத்திற்கான சுவரொட்டி ஒட்டுவதையும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் தடுத்தார். டெபின்டோ என்று யாரை குறிப்பிடுகிறீர்கள் என்று தெரியாது. ஜனாதிபதியைத்தான் அப்படி கூறுகிறீர்களோ தெரியாது. எனவே அந்த சுவரொட்டியை அனுமதிக்க முடியாது என்றார்.
 

18 ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டபோது அதற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் சுவரொட்டி ஒட்டிக்கொண்டிருந்த ஒருவரை பொலிஸார் கைது செய்தனர். பின்னர், சுவரொட்டி ஒட்டியமைக்காக அவரை தடுத்து வைத்திருக்க முடியாததால் வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்தமை, திருட முயற்சித்தமை போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது.
 

சந்தேக நபர் மீதான குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் தெரிவித்த பொலிஸ் அதிகாரி தடயப்பொருளாhக மேற்படி சுவரொட்டிகளையும் சமர்ப்பித்தார். அப்போது, வீட்டில் திருடுவதற்காக எதற்காக 18 ஆவது அரசியலமைப்புக்கு எதிரான சுவரொட்டிகளையும் எடுத்துச் சென்றார் என்ற கேள்வி நீதிமன்றில் எழுந்தது. அதனால் அந்த நபர் திங்களன்று விடுதலை செய்யப்பட்டார்.
 

சுவரொட்டிகள் மீதான கட்டுப்பாடுகள் சாதாரண விடயம் போல் தென்படலாம். ஆனால், அது கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்கு சவாலாக அமைகின்றன.

கீர்த்தி தென்னகோன் எழுதிய நூல் போன்று இதுவரை சிங்கள மொழியில் வெளியாகவில்லை. இது ஓர் சிறந்த முயற்சியாகும்' என்றார்.
இவ்விழாவில் அமைச்சர் சம்பிக ரணவக்க, ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் ஆகியோரும் உரையாற்றினர். (RSR)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .