2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

யுத்தத்தின் பின்னரும் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான செயற்பாடு அரசாங்கத்திடம் இல்லை: சந்திரிகா

Super User   / 2011 ஜனவரி 09 , பி.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கெலும் பண்டார> ஆர்.சேதுராமன்)

 

யுத்தம் முடிவுற்ற பின்னரும் நாட்டை பொருளாதார ரீதியாக அபிவிருத்தி செய்வதற்கும் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கும் அரசாங்கத்திடம் நோக்கோ, செயற்பாடோ  கிடையாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க விமர்சித்தார்.

டெய்லிமிரர் ஆங்கில நாளிதழுக்கும் அதன் சகோதர ஊடகமான தமிழ் மிரருக்கும் நேற்று ஞாயிற்றுக்கிழமை தனது ஹொரகொல்ல இல்லத்தில் வைத்து அளித்த பிரத்தியேக செவ்வியொன்றிலேயே முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா இவ்வாறு இவ்வாறு கூறினார்.

"யுத்தத்தில் வெற்றிபெற்றாலும் நிரந்தரமான, திருப்தியான நாட்டை கட்டியெழுப்பும் வரை சமாதானத்தை ஏற்படுத்த முடியாது. இலங்கையில் சுமார் 20 லட்சம் தமிழ் மக்கள் இருக்கின்றனர்.  நாட்டின் சனத் தொகையில் 10 சதவீதமான மக்கள் திருப்தியின்மையை மாத்திரமல்லாமல், கோபத்தையும் வெறுப்பையும் வலிகளையும் கொண்டிருக்கும்போது ஸ்திரமான நாட்டை கட்டியெழுப்ப முடியாது" என அவர் கூறினார்.

நாட்டில் முன்னெப்போதுமில்லாதளவு ஊழல் மலிந்திருப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தினார். அரசாங்கத் திணைக்களங்களில் உயர் பதவிகளிலுள்ளோர் பலர் தகுதியற்றவர்கள் எனவும் அவர் விமர்சித்தார்.

தமது குழுவொன்று மேற்கொண்ட மதிப்பீடென்றின்படி, தேசிய ரீதியில் 40 சதவீதம் ஊழல் காரணமாக விரயமாகுவதாக தெரியவந்துள்ளதாகவும் ஊழலை நிறுத்த முடிந்தால் பெருந்தொகைப் பணத்தை அபிவிருத்திக்கு செலவிட முடியும் எனவும் அவர் கூறினார்.

எந்த அடிப்படையில் இந்த கணிப்பு மேற்கொள்ளப்பட்டது எனக் கேட்டபோது, இக்கணிப்புகள் பெரும்பாலும்,  முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் கேள்விப் பத்திர நடைமுறைகள், அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஏற்படக்கூடிய செலவுகள் குறித்து தான்பெற்றுக்கொண்ட அறிவின் அடிப்படையிலானவை என பதிலளித்தார்.

'தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளில் மிகச் சிறந்ததாக தாங்கள் கருதுவது எது?' என வினவியபோது, யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தமை சிறந்த விடயம். அது மாத்திரமே இந்த அரசாங்கத்தின் ஒரேயொரு சிறந்த நடவடிக்கை' என அவர் பதிலளித்தார்.

சிரேஷ்ட அமைச்சர் பதவிகள் குறித்து  கருத்து கேட்டபோது, எந்தவிதமான அறிவார்ந்த  அடிப்படையுமின்றி அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா கூறினார்.

"பணிகளை சிறப்பாக செய்வதற்கு பல்வேறு துறைகள் ஒரே அமைச்சரின்கீழ் கொண்டுவரப்பட வேண்டும் எனது அமைச்சரவையில் முதலில் 21 பேர் இருந்தனர். பின்னர் 28 பேரும் அதன் பின்னர் 24 பேரும் இருந்தனர்.

 இன்று ஒரே அமைச்சு 8-10 துண்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதனால் திறமையான அமைச்சர்கள்கூட, சில துறைகள் அவர்களிடமிருந்து எடுக்கப்பட்டுள்ளதால் சிறந்த சேவைகளை வழங்கமுடியாதுள்ளனர்.  கட்சிக்காக தியாங்களைச் செய்த மூத்தவர்களை ஒதுக்குவது நல்லதல்ல" என்றார். (Pix By. Pradeep Dilrukshana)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .