2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம்: அமைச்சர் முரளிதரன்

A.P.Mathan   / 2011 ஜனவரி 10 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கிழக்கில் தொடர்ந்து பெய்துவரும் கடும் மழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.

வெள்ளம் காரணமாக நிர்க்கதியாகிய மக்களுக்கு உரியமுறையில் உணவு வழங்கப்படவில்லை என கிடைத்த தகவல் தொடர்பாக பிரதியமைச்சரிடம் வினவியபோதே அவர் இவ்வாறு கூறினார். பிரதியமைச்சர் முரளிதரன் மேலும் கூறுகையில்...

இந்த அனர்த்தம் எதிர்பாராமல் ஏற்பட்டதொன்று. ஒரே தடவையில் ஆயிரக்கணக்கான மக்கள் நிர்க்கதியாகியதனால் உடனடியாக நிவாரண உதவிகளை பெற்றுக்கொடுப்பதில் பல நடைமுறைச் சிக்கல்கள் ஏற்பட்டன. தற்சமயம் கொஞ்சம் கொஞ்சமாக அனைத்து தேவைகளையும் பூர்த்திசெய்து வருகிறோம்.

வடமுனை, கூழாவாடி, முறுத்தானை போன்ற மிகவும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு இன்று காலை ஹெலிகொப்டர் மூலமாக உணவுகளை விநியோகித்தோம். மாலையும் பொலனறுவையிலிருந்து 6,000 இறாத்தல் பாணினை ஹெலிகொப்டர் மூலமாக கொண்டுவந்து விநியோகிக்கவுள்ளோம்.

இருக்கின்ற உணவு கையிருப்புகளை கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவுத் தேவைகளை நிவர்த்திசெய்து வருகிறோம். ஒரேதடவையில் லட்சக்கணக்கான மக்களுக்கு சமைப்பதென்பது நடைமுறைக்கு சாத்தியமற்ற விடயம், அத்தோடு இன்னமும் கிழக்கில் கடும் மழை பெய்து கொண்டிருக்கிறது. ஆகையினால் எங்களால் முடிந்தளவுக்கு அனைத்து தேவைகளையும் பூர்த்திசெய்ய கடும் முயற்சி எடுத்துவருகிறோம்.

அம்பாறை ஊடாக மட்டகளப்புக்கு தேவையான உணவுகளை கொண்டுவரும் நடவடிக்கைகள் ஆரம்ப்பிக்கப்பட்டிருக்கின்றன. உணவு பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் தற்சமயம் அம்பாறையூடாக மட்டக்களப்புக்கு வந்துகொண்டிருக்கின்றன. அனர்த்த முகாமைத்துவ அமைச்சரும் தற்சமயம் அம்பாறைக்கு விஜயம் செய்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து மட்டக்களப்புக்கும் அவர் விஜயம் செய்து பாதிக்கப்பட்டவர்களின் குறைகளை நேரடியாக கேட்டறியவுள்ளார் எனவும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மேலும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .