2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

'அனைத்துத் தமிழ்க்கட்சிகளையும் இணைத்துச் செயற்படுவது அவசிய தேவை'

Super User   / 2011 ஜனவரி 18 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தமிழ் இனத்தை அதன் அழிவில் இருந்து காப்பற்றுவதற்காக, அனைத்துத் தமிழ்க்கட்சிகளையும் ஒரே கட்டுக்கோப்புக்குள் இணைத்துச் செயற்படவேண்டியது இன்றைய காலகட்டத்தில் அவசியத் தேவை என நம்புகின்றேன் என தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்த சங்கரி விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வடக்கு-கிழக்கு வாழ் தமிழ் மக்களின் இன்றைய அவல நிலை, அவர்களின் தினம் தினம் பறிபோகும் ஜனநாயக உரிமைகள், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் வாழும் மக்களுக்குத் தொடர்ந்து இழைக்கப்படும் அநீதிகள் மற்றும் கலை கலாசாரச் சீரழிவுகள் ஆகியவற்றை கவனத்தில் கொண்டே தமிழர் விடுதலைக் கூட்டணி சகல உள் எதிர்ப்புக்களையும் மீறி, மறக்கவோ மன்னிக்கவோ முடியாத சில குரோதங்களையும் மனத்தாக்கங்களையும் ஒருபுறம் ஒதுக்கிவைத்துவிட்டுள்ளது.

இந்த நிலையைப் புரியாது நாட்டு நிலைமையை உணராது ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பது போன்று நடிக்கும் ஒரு சிலரை யாரால் எழுப்ப முடியும?

உள்ளூராட்சி தேர்தல் பெரும் மாற்றத்தைக் கொண்டுவரும் என்பதற்காகவல்ல, அத்தேர்த்தலில் காட்டப்படும் ஒற்றுமை அரசை சிந்திக்க வைக்கும் என்று தமிழர் விடுதலைக் கூட்டணி நம்புவதால் மக்களின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சின்னமாகிய வீட்டுச்சின்னத்தில் போட்டியிட உடன்பட்டு, அதன் நிலைப்பாட்டை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமைக்கும் தெரிவித்துள்ளோம்.

இந்நிலையில்  ஒன்றிணைந்து செயற்ப்பட விரும்பும் சகல கட்சிகளையும் அரவணைத்துப்போக வேண்டிய தார்மீகக் கடமைப்பாடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குண்டு. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சகல தமிழ் ஊடகங்கள், இடம்பெயர்ந்து பிற நாட்டில் வாழும் உறவுகள், புத்திஜீவிகள் என வர்ணிக்கப்படுகின்றவர்கள் மற்றும் பத்திரிகைகளுக்கு ஆய்வுக் கட்டுரைகள் எழுதும் பிரபல எழுத்தாளர்கள் ஆகியோர் ஒன்று சேர்ந்தே பலவகையிலும் உதவி தமிழ்த் தேசிய கூட்டமைப்பை வெற்றிபெற வைத்தனர்.

நம் அனைவரைப்பற்றிய கடந்தகால வரலாற்றை உதாசீனம் செய்தே தம்பணியை மேற்கொண்டனர். இனத்தின் நலம் கருதி கூட்டுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றவர்கள் இதை எண்ணிப்பாக்க வேண்டும். இருந்தும் ஆளும் கட்சி வேட்பாளர்களின் சாதனையை சுலபமாகத் தட்டிக்கழிக்க முடியாத நிலை நமக்கு உண்டு. இதுபற்றி ஆழமாகச் சிந்திக்க வேண்டிய நிலையிலும் உள்ளோம்.

ஆகவே அரசுடன் இணைந்து போட்டியிடுபவர்கள் தவிர்ந்த ஏனைய சகல கட்சிகளையும் அவர்கள் விரும்பின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களையும் ஒதுக்கிவிட்டு செயற்படுமாறு மிகவும் பணிவுடன் சகல கட்சிகளையும் இணையுமாறுமஇ இணைக்குமாறும் வேண்டுகின்றேன். ஒருவரையேனும் ஆளும் கட்சியின் வலைக்குள் விழாதவாறு அனைவரும் அவர்களைக் காப்பாற்ற வேண்டும். எவரேனும் பிரிந்து நின்று போட்டியிடும் நிலைக்கு தள்ளப்படாதிருக்கு அனைவரும் முயற்சிப்போமாக.   
     
ஒவ்வொரு தமிழ் மகனும் அனைவரும் ஒன்று சேர உடன்படுமாறு தாம் சார்ந்துள்ள கட்சித் தலைமைக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும். இத்தேர்தலில் நான் போட்டியிடமாட்டேன் என்பது அனைவரும் அறிந்ததே.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .