2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து சிவாஜிலிங்கம் கடிதம்

Menaka Mookandi   / 2011 ஜூன் 16 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானங்களுக்கு நன்றி தெரிவித்து தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் தலைவர் எம்.கே.சிவாஜிலிங்கம் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'தாங்கள் தமிழ் நாட்டின் முதலமைச்சராக மூன்றாவது முறையாகப் பொறுப்பேற்று, சுமார் மூன்று வாரங்களில் மிக முக்கியமான மூன்று தீர்மானங்கள் தமிழ் நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டமையையிட்டு, கோடானு கோடி உலகத் தமிழ் மக்கள் மகிழ்ச்சியும், நிம்மதியும் அடைந்துள்ளனர்.

இந்தத் தீர்மானங்களைத் துணிச்சலாக நிறைவேற்றியமைக்காகத் தங்களுக்கு ஈழத்தமிழர்கள் சார்பில் எமது கட்சி நெஞ்சார்ந்த பாராட்டுக்;களையும், வாழ்த்துக்களையும், நன்றிகளையும் கூறிக் கொள்வதில் பெருமிதம் அடைகிறது.    
 
2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் திகதி நடைபெற்ற இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்ட ஒரேயொரு தமிழர் நான். தமிழ் ஈழ தேசம், சிங்கள தேசம் இணைந்த இலங்கை ஒன்றியம் என்ற கூட்டு இணைப்பாட்சியின் அடிப்படையிலேயே நிரந்தர தீர்வு காணப்பட முடியும்.

சுமார் ஐந்து லட்சம் அகதிகளின் மீள் குடியேற்றத்தை ஐக்கிய நாடுகள் சபையிடம் ஒப்படை, வன்னிப் போரில் 50,000 தமிழ் மக்கள் படுகொலைக்குக் காரணமான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவையும், முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத்பொன்சேகாவையும் இனப் படுகொலைக்காக சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவோம் என்ற முக்;கிய கோரிக்கையை முன்வைத்து ஜனாதிபதித் தேர்தலைச் சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.

2010ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் எமது கட்சி மேற்படி கோரிக்கைகளுடன், வன்னிப் போரில் கொல்லப்பட்ட 50,000 தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி விசாரனையைக் கோரும் என்ற விடயமும் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்தது.

இனப் படுகொலை நடைபெற்றதைச் சுட்டிக்காட்டி சர்வதேச நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக ஜக்கிய நாடுகள் சபை போர்க் குற்றங்களை விசாரிக்க வேண்டும், தமிழ் மக்களுக்கு சம உரிமையுடன் கூடிய வாழ்வுரிமை நிலை நாட்ட சர்வதேச அழுத்தங்கள் தேவை என்பதை உணர்த்த பொருளாதாரத் தடை போன்ற இரண்டு தீர்மானங்களை நிறைவேற்றியதையிட்டு மட்டில்லா மகிழ்ச்சி அடைகின்றோம்.

மேலும், இராமநாதபுர மன்னரின் ஆட்சியின் கீழ் இருந்த கச்சதீவை மீட்க எடுத்த முயற்சி தமிழக ஈழத்தமிழர் மீனவர்கள் மோதாமல் சுமுக நிலையை எட்டுவதற்கும், இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான 500இற்;கு மேற்பட்ட தமிழ் மீனவர்களின் மீதான தாக்குதல்கள் முடிவுக்கு கொண்டு வரப்படவும், வெகுவாக உதவும் என்று நம்புகின்றோம்.

1619ஆம் ஆண்டு ஈழத்தமிழினம் தமது நாட்டையும், இறைமையையும் போரில் போர்த்துகீசரிடம் இழந்த பொழுது, யாழ்ப்பாண இராட்சியத்தின் கடைசி மன்னன் சங்கிலிகுமாரன் இராமநாதபுரம் மன்னனிடம் படை உதவி கோரியதைத் தொடர்ந்து, யாழ்ப்பாணம் நோக்கி வந்த இராமநாதபுர மன்னரின் படைகள் கச்சதீவில் தரை இறங்கிய பொழுது, யாழ்ப்பாண இராட்சியம் வீழ்ந்த செய்தி கிடைத்தமையால் படைகள் இராமநாதபுரம் திரும்பியதாக வரலாறு கூறுகிறது.

சிறைப்பிடிக்கப்பட்ட யாழ்ப்பாண இராட்சியத்தின் மன்னன் சங்கிலிகுமாரன் இந்தியாவில் உள்ள கோவாவுக்குக் கூட்டிசெல்லப்பட்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.

முள்ளிவாய்க்காலில் 50,000இற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டு, சுமார் 40,000மக்கள் காயமடைந்து, பல்லாயிரம் பெண்கள் விதவைகளாக்கப்பட்டு, பல்லாயிரம் பேர் உறவுகளை இழந்தும், அங்கவீனர்களாக்கப்பட்டும், கோடிக்கணக்கான சொத்துக்களை இழந்தும், சொல்லொணாக் கொடுமைகளையும் அனுபவித்தனர்.
 
பாலியல் கொடுமைகளுக்குப் பெண்கள் உட்படுத்தப்பட்டனர். தந்தை அல்லது தாயை இழந்து அல்லது இருவரையும் இழந்து 30,000 பிள்ளைகள் அனாதைகளாக்கப்பட்டுள்ளனர். காணாமல் போனோர், தடுப்புக் காவல்களிலும், சிறைச் சாலைகளிலும், வாடிக்கொண்டிருப்போரின் குடும்பங்கள் நிர்க்கதியாக அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

முள்வேலி முகாங்களில் அடைக்கப்பட்டிருந்த மூன்று இலட்சம் மக்களும், தமது சொந்த இடங்களில் உருப்படியான மறுவாழ்வு கிடைக்காமல் அவல வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க நீங்கள் தொடர்ச்சியாக அகில இந்திய ரீதியில் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், இலங்கைப் பிரச்சினையில், சரியான இந்திய வெளியுறவுக் கொள்கையை வகுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கோருகின்றோம்.

போரின் கொடுமைகளினால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்படக்கூடிய நிலையில் போர் நிறுத்தம் கோரி 2009ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9ஆம் திகதி சென்னை  சேப்பாக்கத்தில் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட அருந்தாமல் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்த பொழுது, ஈழத்தமிழர்களின் மக்கள் பிரதிநிதியாக நான் ஒருவன் மாத்திரமே உண்ணாவிரத மேடையில் பொன்னாடை அளித்து கூட இருந்ததை பூரிப்புடன் எண்ணிப்பார்க்கின்றேன்.

இந்தியப் நாடாளுமன்றத்துக்கு முன்னால் இலங்கையில் போர் நிறுத்தம் கோரி 2009ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி ஈழத்தமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரம்  தலைவர் வைகோ தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரதத்தை நான் ஆரம்பித்த நிகழ்வில், எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி உட்பட பல தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்த நிலையில், தங்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கலந்து கொள்ள தாங்கள் வேண்டுகோள் விடுத்ததை நன்றியுடன் நினைத்துப் பார்க்கின்றேன்.

எமது சொந்த ஊரான வல்வெட்டித்துறையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் வீட்டுக்குச் சமீபமாக பருத்தித்துறை – காங்கேசன்துறை பிரதான வீதியில் அமைக்கப்பட்ட புரட்சித் தலைவர் அமரர் எம்.ஜி.ஆரின் திருவுருவச்சிலை 2004ஆம் ஆண்டு என்னால் திறந்து வைக்கப்பட்டது. படையினரின் தாக்குதலினால் தற்போது திருவுருவச்சிலையின் இரண்டு கைகளும் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.

புரட்சித்தலைவர்  அமரர் எம்.ஜி.ஆர். அவர்களின் கைகள் இல்லாத திருவுருவச் சிலையைப் போல ஈழத்தமிழ் மக்களும் கைகளை இழந்து நிற்கிறார்கள். அவர்களுக்கு சுய நிர்ணய உரிமை உள்ளடங்கிய சர்வதேச உத்தரவாதத்துடன் கூடிய தீர்வையும், இனப்படுகொலைக்கான சர்வதேச நீதியைப் பெற்றுக் கொள்ளவும், தாங்களும், தமிழக மக்களும், இந்திய மக்களும் துணை நிற்க வேண்டும்.

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருப்பு முனையான தீர்மானங்களை ஏகமனதாக நிறைவேற்றியமைக்காகத் தங்களுக்கும், அ.இ.அ.தி.மு.க. உட்பட தமிழகச் சட்டமன்றக் கட்சிகளுக்கும், தமிழக அரசுக்கும், தமிழக மக்களுக்கும், மற்றும் இந்தத் தீர்மானங்களை நிறைவேற்றியமையைப் பாராட்டிய கட்சிகளுக்கும், அமைப்புக்களுக்கும், ஈழத்தமிழர்களின் சார்பில் மீண்டும் நெஞ்சார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்' என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X