2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இராணுவத்தினர் மனிதவுரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்: ஆனந்த சங்கரி

A.P.Mathan   / 2011 ஜூன் 17 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

கூட்டம் கூடும் சுதந்திரம், பேச்சு சுதந்திரம் மற்றும் நடமாடும் சுதந்திரம் ஆகியவை மக்களின் பிறப்புரிமைகளாகும். இது இப்படி இருக்கையில் யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கூட்டத்தில் இராணுவத்தினர் அத்துமீறி நுழைந்து அடாவடித்தனம் செய்தமை கண்டிக்கத்தக்கது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இன்று ஊடகங்களுக்கு வீ.ஆனந்தசங்கரியினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையினை முழுமையாக இங்கு தருகிறோம்.

பொதுமக்களின் அடிப்படை உரிமைகளில் இராணுவம் தலையிடுவதை தமிழர் விடுதலைக் கூட்டணி மிக வன்மையாக கண்டிக்கின்றது. கூட்டம் கூடும் சுதந்திரம், பேச்சு சுதந்திரம் மற்றும் நடமாடும் சுதந்திரம் ஆகியவை மக்களின் பிறப்புரிமைகளாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், நடைபெற இருக்கும் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடவிருக்கும் தமது வேட்பாளர்களை அறிமுகஞ் செய்யும் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த மண்டபத்திற்குள் இராணுவத்தினர் அத்துமீறி புகுந்தது கண்டிக்கப்பட வேண்டிய செயலாகும். கூடியிருந்த மக்களை அவர்கள் தாக்கி ஓட விரட்டியதுமல்லாமல் துவிச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் போன்ற வாகனங்களுக்கும் பெரும் சேதம் விளைவித்துள்ளனர். தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை தாக்க முயற்சித்துள்ளதுடன் அவர்களின் மெய்ப்பாதுகாப்பாளர்களுக்கும் காயங்களை ஏற்படுத்தியுள்ளனர்.

இத்தகைய அடாவடிச் செயல்களை இராணுவம் உடனடியாக நிறுத்த வேண்டும். எது எப்படியிருப்பினும், பல காவல் நிலையங்கள் பரந்திருக்கும் போது இந்த விடயத்தில் இராணுவம் தலையிட்டிருக்க தேவையில்லை. இத் தேவையற்ற சம்பவம் நடைபெற்றுள்ள இடத்திற்கு அண்மையில் கூட ஒரு காவல் நிலையம் உண்டு.

இராணுவத்தின் இச் செயல் எனக்கு 1980களில் நடைபெற்ற பழையதோர் சம்பவத்தை நினைவு கூற வைக்கின்றது. பிரபல யாழ்ப்பாண நாச்சியம்மார் கோவிலில் இப்படி ஒரு சம்பவம் ஆரம்பித்து இறுதியில் யாழ். பொது நூலகம், தமிழர் விடுதலைக் கூட்டணி கரியாலயம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காலஞ்சென்ற யோகேஸ்வரனின் இல்லம் மற்றும் பல கட்டடங்கள் எரிந்து சாம்பராகின. இச்சம்பவம் இனி நடக்க இருப்பவைக்கு முன்னோடியா? யானை வருவதற்கு முன் கேட்கும் மணியோசையா? இதனால்தான் வடக்கு, கிழக்கில் இருந்து இரணுவம் வாபஸ் பெறப்பட வேண்டும் என நான் கோரிவருகின்றேன். இது போன்ற சம்பவங்கள் முளையில் கிள்ளியெறியப்படாது போனால் நாட்டின் எதிர்காலம் இருளடைந்ததாகவே இருக்கும்.

வீ. ஆனந்தசங்கரி
தலைவர்
தமிழர் விடுதலைக் கூட்டணி
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X